பொருளடக்கம் 117 / 300
புலப்பேன்கொல் புல்லுவேன்
அச்சுப் பக்கம் 257–258 · ஸ்கேன் 274–275 · அதிகாரம் 127 (அவர்வயின்விதும்பல்) — குறள் 1267
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“கதிரைக் காணாது குவிந்திருந்த தாமரை போலவும் நிலவைக் காணாது கூம்பியிருந்த அல்லிபோலவும் வாடிக்கிடக்கும் உன் முகம், வசந்தப் புன்னகை புரியப் போகிறதடி! ஆதிரை கவர்ந்துசென்ற பகை நாட்டானை விரட்டிச் சென்று போரிட்டு வென்றதோடு மட்டுமன்றி, அவனைத் தேர்க்காலிலே கட்டி இழுத்துவரும் இளவரசரை வரவேற்கத் தலைநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. வெற்றி கிடைக்குமா என ஏங்கித் தவித்தாயே; நான் அப்பொழுதே சொன்னேன் அல்லவா? உன் புருவங்களை வில்லாக வளைத்து, விழிகளைக் கணைகளாகப் பொழியும்போது மட்டுந்தான் இளவரசர் தோல்வி காண்பாரே தவிர, எதிரிகளின் ஈட்டிக்கோ, வேலுக்கோ, புறமுதுகு காட்டாத புறநானூற்றுத் தமிழன் நமது இளவரசன் என்று!
அது பொய்த்துவிடுமா என்ன? இருட்டு வேளையில் திருடுத்தனமாக நுழைந்த பகையின் இருப்பிடத்து, வெற்றிக்கொடி விண்ணைமுட்ட வந்து
கொண்டிருக்கிறார். இந்த நற்செய்தி கூறத்தான் ஓடிவந்தேன். இனி நீ அவரை வரவேற்கத் தயாராகலாம். பன்னீர் கலக்கிய தண்ணீரில் குளித்து புத்தாடை உடுத்து! அவர் பிரிவை எண்ணியெண்ணி வளைகள் கழன்றுவிழும் அளவுக்கு மெலிந்துபோன உன் கரங்கள், புதிய வளையல்பெறும் என்று எனக்குத் தெரியும். நெளிந்து நடக்கும்போது மட்டும் தெரியக்கூடிய உன் கொடி இடையைத் தாங்கிடக் கொழுகொம்பாக வருகின்றார் இளவரசர். பாவம், பவளங்களும் முத்துக்களும் பதித்த இந்தக் கட்டிலைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. வாயில்லாப் பொருள்! இன்றிரவு என்ன பாடுபடப் போகிறதோ?”
இப்படிச் சொல்லிக்கொண்டே குறும்புச் சிரிப்புக் குலுங்கிட அவள் தோழி கீழேயிறங்கி ஓடிவிட்டாள்.
பகை விரட்டிச் சென்றவன் - பிரிவுத் துயரைத் தனக்கு அளித்துச் சென்றவன் - பசலை படரவும் இதயம் பதைக்கவும் தன்னைப் பிரிந்து சென்றவன், விரைவில் வரப்போகிறான் எனக்கேட்டு அவள் அடைந்த இன்பம் உலகையே வெல்லக் கூடியது. உடைகளைக் களைந்து குளித்தாள். அருந்தப்போகும் விருந்தினை எண்ணி அவள் அங்கங்கள் ஒவ்வொன்றும் விம்மிப் பூரித்தன. கண்ணாடிமுன் நின்று அணிமணி பூண்டாள். அவன் கன்னத்தில் ஒட்டிக் கொள்ளட்டும் என்பதற்காகவே குங்குமப் பொட்டைக் கனமாக வைத்துக்கொண்டாள்.
கண்ணாடியில் அவள் உருவம் தெரியவில்லை. அவன்தான் தெரிந்தான். கால்கள் ஓரிடத்தில் நிற்கவில்லை. வெற்றிப்படை தலைநகருக்குள் நுழைந்து விட்டது என்பதற்கான முரசங்கள் ஆர்த்தன.
இப்போது அவளுக்கு ஒரு பெரிய பிரச்சினை! மூன்று கேள்விகள் அவள் நெஞ்சைத் துளைத்தெடுக்கத் தொடங்கின.
“என் கண்ணான கணவன் இன்னும் சிறிதுநேரத்தில் இங்கு வந்து விடுவார். அவர் வந்ததும், ஏன் என்னைப் பிரிந்து வாடவிட்டார்கள் என்று ஊடல் புரிவதா? அல்லது அவரைத் தழுவிக் கொள்வதா? அல்லது அவருடன் கூடிக்கலிப்பதா?”
இப்படித் திண்டாடுகிறாள் அவள்! ஊடிக் கொண்டிருந்தால் தழுவிக் கிடக்கும் நேரத்தில் சிறிது வீணாகப் போய்விடும். தழுவிக் கொண்டேயிருந்தாலும் கூடலின் இன்பத்தைப் பெறத் தாமதமாகிவிடும். மனப்போராட்டம் அவளைத் தவிக்க வைக்கிறது!
ஊடுவதா?
தழுவுவதா?
கூடுவதா?
இந்த மூன்று கேள்விக்கு விடைகாண முடியாமல் திணறும் தேன்மொழி பொருத்தியின் நிலையை விளக்குகிறது இந்தக் குறள்:
“புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின்.”
அதிகாரம் - 127 - அவர்வயின்விதும்பல்; பாடல் - 1267
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்