பொருளடக்கம் 116 / 300
ஒழுக்கம் உடைமை
அச்சுப் பக்கம் 255–256 · ஸ்கேன் 272–273 · அதிகாரம் 14 (ஒழுக்கமுடைமை) — குறள் 133
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
இராமாயண கதகாலட்சேபம், வெகுசிறப்பான ஏற்பாடுகளுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இராமனின் முடிசூட்டுவிழா நிகழ்ச்சிகளைப் பாகவதர் வர்ணித்துக் கூறிய பாங்கே தனி! பக்த கோடிகள் தலையசைத்துத் தங்களின் பாராட்டுக்களைப் பாகவதருக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். பெண்டிர் கூட்டமும் மண்டபத்தில் நிரம்பி வழிந்தது. ஆடவர் - பெண்டிர் அனைவருமே உயர் குடிமக்களைச் சேர்ந்தவர்கள். அதாவது உயர்ந்த வகுப்பினர். மேலும், செல்வம் படைத்தவர்கள்கூட!
பதினான்கு ஆண்டுகள் இராமனும் சீதையும் இலக்குவனும் காட்டில் அனுபவித்த வாழ்க்கையையும் இராம - இராவணப் போரும் இறுதியாக இராமன் நாடு திரும்பி மகுடம் புனைந்துகொண்ட மாட்சியும் பாகவதரின் உரையால் - இசைப்பாட்டால் அங்குள்ள ரசிகமணிகள் அனைவரையும் உற்சாக வெள்ளத்தில் மிதக்கச் செய்தன.
நள்ளிரவில் கதகாலட்சேபம் முடிவுற்றது. பாகவதர், தான் தங்கியிருக்கும் வீட்டுக்குச் சென்றார். அந்த ஊரில் பெரும் பணக்காரரான ஓர் உயர் ஜாதிக்காரர் வீடு அது! அந்த வீட்டு அம்மாளும் இராமாயணம் கேட்க வந்திருந்தார். அம்மாளுடன் துணைக்கு அந்த வீட்டு வேலைக்காரியும் வந்திருந்தாள். அவள் ஜாதி, சற்றுக் குறைவானதுதான்.
கதை முடிந்ததும் அம்மாளும் வேலைக்காரியும் பாகவதருக்கு முன்பே வீடு திரும்பினார்கள். பாகவதரும் வீட்டுக்காரச் சீமானும் சிறிதுநேரங் கழித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
பாகவதருக்கு வீட்டுமாடியில் தனியாக, ஒரு வசதியான அறையில் படுக்கை. அவர் உணவருந்திவிட்டு மாடிக்கு வருவதற்குள் மாடி அறையைத் தூய்மைப்படுத்தப் படுக்கையைத் தட்டிப்போடுமாறு வேலைக்காரிக்குச் சீமான் உத்தரவிட்டார். அவ்வாறே வேலைக்காரியும் சென்று பணியாற்றிக்கொண்டு இருந்தாள்.
உணவருந்திய பாகவதர், உடலெங்கும் சந்தனம் பூசிக்கொண்டு மாடி அறைக்குள் நுழைந்தார்.
அங்கே இருந்த வேலைக்காரியைக் கண்டதும் பாகவதர் மெய்மறந்தார். கதகாலட்சேபத்தில் சீதையைப்பற்றி அடுக்கிய வர்ணனைகளையெல்லாம் கொட்டித் தீர்த்தார். இறுதியில் அவளைத் தொடவும் பார்த்தார்.
வேலைக்காரி வெகுண்டாள். பாகவதரைப் பார்த்து “தூ!” என்று இழித்துரைத்துவிட்டு, மாடியிலிருந்து கீழே இறங்கி ஓடினாள்.
வீட்டுக்கார அம்மாள் - சீமானின் மனைவி - பாகவதருக்கு வெள்ளிக் கிண்ணத்தில் பால் எடுத்துக்கொண்டு மாடிக்கு வந்தாள். பாகவதர் முகம் ஒரு மாதிரி சோகமாக இருந்தது கண்டு, “ஏன் - என்ன காரணம்?” என்று வினவினாள். “காலட்சேபம் செய்த களைப்பு! உடம்பு வலிக்கிறது; அவ்வளவுதான்” என்றார் பாகவதர்.
“உடம்பு பிடித்து விடுகிறேனே!” என்றாள் அந்த அம்மாள்! பாகவதர் மறுப்பாரா என்ன? உடலைப் பிடித்த அந்த அம்மாள், பாகவதர் பிடியில் சிக்கினாள். அவள் விரும்பியது நடந்தது.
கீழ் ஜாதிப் பெண் ஏற்றுக் கொள்ளாத ஒன்றை, உயர் ஜாதிப் பெண் விரும்பி ஏற்றுக்கொண்டாள். உயர் குடிப்பிறப்பு என்பதும் இழிந்த குடிப்பிறப்பு என்பதும் கற்பிக்கப்பட்ட ஜாதி முறைகளால் ஏற்படுவதில்லை.
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்குடிப் பிறப்புக்கு எடுத்துக் காட்டு! ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்தகுடிப் பிறப்பாளர்களேயாவர்! குறளின் அளவுகோல்படி அந்த வேலைக்காரி உயர் குடிப்பிறப்பு! சீமான் வீட்டு அம்மையார் இழிந்த குடிப்பிறப்பு! இதோ அதற்குக் குறள்:-
“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்”
அதிகாரம் - 14 - ஒழுக்கமுடைமை; பாடல் - 133
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்