பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 115 / 300

ஊடலில் தோற்றவர்

அச்சுப் பக்கம் 253254 · ஸ்கேன் 270271 · அதிகாரம் 133 (ஊடலுவகை) — குறள் 1327

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

இளமதி, இளம் பொற்கொல்லன். திருமதி, அவனை மணந்துகொண்ட அழகுப்பாவை. தொழில் புரியும் இடத்தில் அமர்ந்து தங்க வளையல்களுக்கு மெருகூட்டிக் கொண்டிருந்தான்.

களைப்புத் தெரியாமல் கண்ணான பணியாற்ற வேண்டுமென்ற நினைப்புப் பொங்கிடக் குவளையொன்றில் மோர் எடுத்துக்கொண்டு, அவனிடம் திருமதி வந்து நின்றாள். குவளையை வாங்கும்போதே அவன் விரல்களைத் தன் விரல்களால் அழுத்தியவாறு புன்னகையை இதழில் தேக்கி அவளை நோக்கினான். அவளும் கடைக்கண்ணால் விடையளித்து அருகமர்ந்தாள்.

“வேலையில் கவனம் வைத்து அணிகளைச் செம்மையாகச் செய்திடுங்கள். கவனம் வேறெங்கோ இருப்பதாகத் தெரிகிறது.” என்றாள் கேலியாக!

“எங்குமில்லை என் கண்ணே! நேற்றிரவு ஊடலிலே வெற்றி யாருக்கு? தோல்வி யாருக்கு? என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்” என்றான் இளமதி.

“அதில் ஐயம் என்ன இருக்கிறது? எனக்குத்தான் வெற்றி!” என்றாள் அவள்.

“எப்படி உனக்கு வெற்றி என்கிறாய்?”

“என்னைத் தொடராதீர் என இடித்துரைத்துக் கட்டிலின் ஓரமாகச் சென்று உம்மை நீங்கிப் படுத்துக் கொண்டேன் நான். நீங்கள்தான் என்னை நெருங்கிவந்து தொட்டி முத்துக் கட்டியணைத்துக்கொண்டீர்கள்! அதனால் தோல்வியைத் தழுவிக்கொண்டது நீங்களேதான்.”

“உண்மைதான். உன்னைத் தழுவிக்கொண்டேன். உனக்குப் பெயர் ‘தோல்வி’ என்று நீயே ஒப்புக்கொள்கிறாய்! இல்லையா?”

“சொல்லால் வெல்லலாம் என எண்ணாதீர். நேற்றிரவு ஊடலில் தோற்றுப் போனது நீங்களேதான்! நானல்ல!”

“ஊடலில் தோற்பவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள் தெரியுமா?”

“இது என்ன புது இலக்கணம்? அப்படியானால், போர்க்களத்தில் தோற்றுவிட்ட மன்னனுக்கே நாட்டைக் கொடுத்து முடிசூட்டிவிடலாமே!”

“போர்க்களத்தில் வீரர்கள் பகைவரை மண்டியிட வைத்தால்தான் வெற்றி! போகக் களத்தில் ஒரு பெண்ணிடம் ஆண் மண்டியிட்டால்தான் அந்த ஆணுக்கு வெற்றி!”

“வேடிக்கையாக இருக்கிறதே உங்கள் விளக்கம்!”

“என் விளக்கம் அல்ல! வள்ளுவர் தரும் விளக்கம்! நானும் என் அனுபவத்தில், கண்ட உண்மை!”

“ஓகோ! ஊடலில் தோற்றவர்களை வெற்றி வீரர்கள் என்று வள்ளுவரே கூறிவிட்டாரா?”

“ஆமாம்! ஊடலில் தோற்றுப் போனவரே வெற்றியடைந்தவராவார். இந்த உண்மையை ஊடல் முடிந்தபிறகு கூடிமகிழும் நிலையில் கண்டு கொள்ளலாம் என்று குறள் கூறுகிறது. அதாவது, நேற்றிரவு நான் தோற்றுப் போனதுபோல உன்னிடம் சரணடைந்து பெறவேண்டிய இன்பம் முழுதும் பெற்று வெற்றியடைந்தேன் என்பது எனக்குத்தான் தெரியும். என்ன சொல்கிறாய்? இன்றிரவும் நான் தோல்வி அடையட்டுமா?”

“போங்கள்!”

என்று நாணத்தோடு முகம் புதைத்துக்கொண்டு, திருமதி அந்த இடத்தை விட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

மெருகேறிய நிலையில் அவன் கைகளில் இருந்த தங்க வளையல்களின் நிறத்தோடு அவள் நிறத்தை ஒப்பிட்டுக்கொண்டே வள்ளுவரின் குறட்பாவை வாய்க்குள்ளேயே சொல்லிப் பார்த்துக்கொண்டு இளமதி மகிழ்ந்தான்.

அந்தக் குறள் எது?

இதோ:

“ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும்”

அதிகாரம் - 133 - ஊடலுவகை; பாடல் - 1327

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்