பொருளடக்கம் 114 / 300
ஒருத்தாரை ஒன்றாக
அச்சுப் பக்கம் 251–252 · ஸ்கேன் 268–269 · அதிகாரம் 16 (பொறையுடைமை) — குறள் 155
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
குடிநீர்த் தொட்டி ஒன்று தெருக்கோடியில் இருக்கிறது. கொடிபோலும் தளிர் மேனிக் கோதையர்கள் அங்கே குடம் ஏந்தி வந்திடுவர், நீர் எடுக்க.
குறிப்பிட்ட சில நேரங்களிலேயே புறப்பட்டு வந்து சொட்டும் குழாய் அருவி; அதுவரையில் வரிசை வரிசையாகக் குடங்களைக் கீழே வைத்து விட்டுக் காத்துக் கொண்டு நிற்பர், எழில் பூத்துக் குலுங்கிடும் பூவையர்கள்.
அந்த வேளையாகப் பார்த்துக் கட்டுக்கடங்காத காளைகளாகச் சில இளைஞர்கள், கொட்டம் அடித்துக்கொண்டு வருவார்கள்; முற்றுகையிடுவார்கள், குடிநீர்த் தொட்டியினை. பாவையர்க்கோ பற்றிக் கொண்டு வரும் எரிச்சல்! அவர்களுடைய உள்ளுணர்வுகளைப் பற்றி எள்ளளவுகூடக் கவலை கொள்ளாமல், இளைஞர்களோ எள்ளி நகைப்பார்கள்; இழிந்த சொற்களையெல்லாம் அள்ளி இறைப்பார்கள்.
ஒரு நாள் அந்த வழியாக வந்தார் ஒரு பெரியவர். இளைஞர்களின் அடாத செயல் கண்டு, அவரது மனம் படாதபாடு பட்டது.
“தம்பிகளே! அந்தப் பெண்களின் நெஞ்சத்தை நீங்கள் புண்படுத்துவது முறை இல்லை. உங்களுடைய தங்கைகளையோ தமக்கைகளையோ யாரேனும் இப்படிக் கீழ்த்தரமாகக் கேலி செய்தால் நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா? ‘பேசியவனின் நாவை அறுத்து விடுவேன்!’ என்று ஆர்ப்பரிக்க மாட்டீர்களா? மற்றவர்களைப் பழித்துச் சிரிப்பதால் உங்களுக்கு வரக்கூடிய பலன்தான் என்ன?”
-பெரியவர் இவ்வாறு பெண்களுக்குப் பரிந்து பேசியதும் இளைஞர்கள் தங்களது தகாத செயலுக்காக வருந்தினார்களா? திருந்தினார்களா? இல்லை! மாறாக அந்தப் பெரியவரை அவர்கள் சுற்றி வளைத்தார்கள்; நெட்டித் தள்ளினார்கள்; கைகொட்டிச் சிரித்தார்கள். அவரது தோளிலே கிடந்த துண்டை எடுத்துச் சுருக்குக் கயிறுபோல
அவரது கழுத்திலே சுற்றி முறுக்கினார்கள்; துண்டின் இரு முனைகளையும் இழுத்துப் பிடித்து, இப்படியும் அப்படியுமாக அவரை அலைக்கழித்தார்கள்; ஆட்டினார்கள்.
அவர்களது கொடிய செயல்களைக் கூர் ஈட்டிச் சொற்களைப் பொறுமைக் கடலாகவே பொறுத்துக் கொண்டார் பெரியவர். தம்முடைய தரத்தைக் குறைத்துக் கொண்டு வாயாலோ கையாலோ திருப்பித் தாக்கிடவில்லை, அந்தத் தருக்கர்களை!
குடிநீர்த் தொட்டியின் பக்கம் வந்திருந்த பெண்டிர் அனைவரும், பெரியவரை விட்டுவிடுமாறு கெஞ்சினர் - கூத்தாடினர். இளைஞர்களின் நெஞ்சமோ இரக்கங்கொள்ள இசைந்திடவில்லை. அவரை வருத்துவதன் மூலமே தங்கள் இன்பத்தை வளர்த்துக்கொள்ள முனைந்தனர்.
சிறிது நேரத்தில் அரசாங்கக் காவலர்கள் சிலர் தற்செயலாக அங்கே வந்தனர். அவர்களது தலைப்பாகைகளைக் கண்டதுமே குலைநடுக்கம் கொண்டனர் இளைஞர்கள்! தாங்கள் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டனர்.
பெரியவரோ பழி தீர்த்துக் கொண்டிருக்கலாம். அந்த அளவுக்கு அழுகிவிடவில்லை - பண்பின் முழுமை படைத்த அவரது நெஞ்சம்! காவல் துறையினருக்கே இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்:
“அவர்கள் எல்லோரும் என் அருமைப் பேரப் பிள்ளைகள். உரிமையோடு என்னிடம் இப்படி விளையாடுவது அவர்களுக்கு எப்போதுமே வேடிக்கையான ஒரு வாடிக்கை - நடுத்தெருவில் அவர்கள் இதுபோல் நடந்து கொண்டது தவறுதான். அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்; அவர்களை விட்டுவிடுங்கள்!”
-பெரியவரின் சொற்களைக் கேட்டதும் இதயம் குன்றிவிட்டது இளைஞர்களுக்கு; தலைகுனிந்து நின்றனர் வெட்கத்தால்.
“எத்தகைய தகுதிமிக்க சான்றோரை - பொறுமைமிக்க பெரியவரைச் சிறுமை செய்துவிட்டோம்; அதனால் சிறுமைப்பட்டு நிற்கிறோம்! நாங்கள் கொடிய சொற்களினால் குத்தித் துளைத்தும் கருணைவெள்ளந்தானே வடிகிறது, அவர் கண்களிலிருந்து! செருக்கின் உச்சிக்குச் சென்று தீய சொற்களால் கருக்கி எடுத்தும், தீயில் உருக்கிடும் பொன்போல் அல்லவா ஒளி வீசி நிற்கிறார் அவர்!? எங்களைக் காட்டிக் கொடுத்திடாமல் காப்பாற்றவும் துணிந்திட்டாரே! அவரது பொறுமையுடைமைக்கு, நிறைகுடமான பெருந்தன்மைக்கு நிகர் ஏது?”
-இவ்வாறெல்லாம் எண்ணிக் குமைந்தனர் இளைஞர்கள்; அந்த எண்ணங்களே கன்னங்களில் வழிந்தோடின, கண்ணீராக!
அந்தக் காட்சியை வள்ளுவப் பெருந்தகை, எவ்வாறு வடித்துக் காட்டுகிறார் பாருங்கள்:
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.”
அதிகாரம் - 16 - பொறையுடைமை; பாடல் - 155
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்