பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 113 / 300

நனவினால் நம்நீத்தார்

அச்சுப் பக்கம் 249250 · ஸ்கேன் 266267 · அதிகாரம் 122 (கனவுநிலை உரைத்தல்) — குறள் 1220

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

முல்லை மலர்க்காட்டில் மெல்லியவளின் மெய் தழுவிக்கிடந்த காதலன் பிரிகிறான். வாலிபத்தின் விருந்தை இடையறாது சுவைக்கும் வாய்ப்பை இருவருமே இழந்து தவிக்கின்றனர். வாணிபம் குறுக்கிடுகிறது. ஆகவே பிரிகிறார்கள். “தலைவனை அணைத்திருக்கும்போது அவன் சிறிது நகர்ந்தாலே மேனியெங்கும் பசலை நிறம் படர்ந்து என்னை வாட்டுமே; அப்படிப்பட்ட என்னைவிட்டு அவர் இத்தனை நாள்

பிரிந்து செல்வது நியாயமா?” என்று கேள்விக் கணைகளைத் தொடுக்கிறாள் கண்ணாடிக்கு முன்னே நின்றுகொண்டு! அந்தப் பளிங்கியிலே தோன்றும் உருவம் அவளை மேலும் அழகாக்கிறது. ஏனெனில் பசலை படிந்த அவளது உருவமே அது! அதைக் காண்கிறாள். கண்ணீர் முத்துக்கள் உருள்கின்றன. இதழிடை முத்துக்கள் எங்கேயோ ஒளிந்து கொள்கின்றன. பிரிவின் சோகத்தால், காதலன்மீது ஏற்பட்ட கோபத்தோடு படுக்கையிலே படுக்கிறாள்; இல்லை விழுகிறாள்; உடலைப் ‘பொத்’ தென்று போடுகிறாள். தூக்கம் அவளைத் தொடமுடியாமல் தவிக்கிறது; இறுதியில் வெல்கிறது; தூங்குகிறாள்.

காதலன் வருகிறான். அவனது கற்பகம் சேர்ந்த மார்பில் அற்புத அழகு முகத்தை ஒட்டுகிறாள். உச்சிமுதல் உள்ளங்கால்வரை முத்த மழையால் நனைக்கிறது! நேரம் போவதே தெரியவில்லை. தொடர்ச்சி கெடாமல் இன்பம்! கேளிக்கை! கீதம்! திடீரென்று விழிக்கிறாள்; அவனோடு சேர்ந்து கதிரவனும் விழிக்கின்றான்; எல்லாம் கனவு. கலக்கத்தோடு வாயிற்புறத்தே வந்து நிற்கிறாள்.

அவளைக் கண்ட ஊர் மக்கள், “அய்யோ பாவம்! காதலன் பிரிந்து விட்டான். அதனால் கலங்கி நிற்கிறாள் இந்தப் பாவை!” என்று பேசிக்கொண்டு போகிறார்கள்.

காதலன்மீது ஊரார் பழி கூறுவதாக அவள் கருதுகிறாள். அவன்மீது பழிகூறத் தன்னைத்தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை என்பது அவள் எண்ணம். பிரிந்துபோன காதலனைப்பற்றிப் பழி கூறும் ஊராரைப் பழிக்கிறாள். எப்படி?

“என்னைவிட்டு என் காதலர் நீங்கியிருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே இந்த ஊரார் - இவர்கள், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?” என்று வியப்படைவதுபோலக் கேலி பேசுகிறாள்.

இதோ குறள்:

“நனவினால் நல்கித்தார் என்பர்; கனவினால் காணார்கொல் இவ்வூரவர்.”

அதிகாரம் - 122 - கனவுநிலை உரைத்தல்; பாடல் - 1220

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்