பொருளடக்கம் 112 / 300
கேட்டினும் உண்டோர்
அச்சுப் பக்கம் 247–248 · ஸ்கேன் 264–265 · அதிகாரம் 80 (நட்பாராய்தல்) — குறள் 796
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
அடர்ந்த காட்டுவழியாக இரண்டு நண்பர்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஒருவன் பெயர் நல்லான். மற்றொருவன் பெயர் வல்லான். இருவரும் காட்டில் விலங்குகளின் பயம் தெரியாமல் இருக்க, நாடோடிப் பாடல்களை உற்சாகமாகப் பாடிக்கொண்டு நடந்தார்கள். இருட்டுக்குமுன்பு காட்டைக் கடந்து தங்கள் ஊருக்குச் சென்றுவிட வேண்டுமென்பதில் அவர்கள் குறியாக இருந்த காரணத்தால், வேகமாகவே நடந்தார்கள்.
அவர்கள் எதிர்பாராதவாறு ஒரு பெரிய ஆபத்துக் காத்திருந்தது. அவர்கள் காட்டுப்பாதையில் ஒரு குன்றினைக் கடந்து ஓர் ஒற்றையடிப்பாதையில் திரும்பியபோது, திடுக்கிடத் தக்கவண்ணம் ஒரு கரடி நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் இருவரும் ஒருவர் கையை ஒருவர் கோத்துக்கொண்டு ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்திக் கொண்டு ஓடிற்று. வல்லான், நல்லானைப் பார்த்துக் கேட்டான்: “ஏய்! உனக்கு மரம் ஏறத் தெரியுமா?” என்று! நல்லான், “தெரியாதே!” என்று பதில் சொன்னான். வல்லான், “அடப் பாவி! உன்னால் நானும் கரடியின் வாயில் சிக்கவேண்டும் போலிருக்கிறதே!” என்று நடுங்கினான்.
அதற்குள் கரடியும் அவர்களை நோக்கி வருவது தெரிந்தது. இருவரும் ஓடிப்போய் ஒரு புதருக்குள் ஒளிந்து கொண்டார்கள். கரடி, அந்தப் புதரின் பக்கம் வந்து கொண்டிருந்தது. வல்லான் திடீரென்று நல்லானின் கையை உதறிவிட்டு அங்குள்ள உயரமான மரத்தின்மீது மளமளவென்று ஏறி உச்சிக்குப் போய்விட்டான். கரடி, அவர்களைத் தேடிச் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தது. அதற்குள் மரத்தின்
உச்சியிலிருந்த வல்லான், நல்லானைக் கூவி அழைத்து, “ஏய், நீ எங்கேயாவது ஓடித் தொலை. இல்லாவிட்டால் கரடி உன்னைத் தீர்த்துவிட்டுப் பிறகு என்னையும் கண்டுபிடித்துவிடும்” என்று கூறினான்.
“நான் எங்கிருந்தாலும் கரடி என்னை விட்டுப் போவதில்லை. நான் இங்கேயே இருக்கிறேன்” என்றான் நல்லான்.
“அடப்பாவி! உன்னைக் கண்டுகொண்டால், பிறகு என்னையும் கண்டு கொண்டு விடுமேடா! நீ வேறு இடத்துக்குப்போய் அங்கேயாவது அதன் வாயில் அகப்பட்டுக் கொள்! என்னையாவது காப்பாற்று!” என்று வல்லான் கதறினான்.
அதற்கிடையே கரடி, அந்தப் புதரின் பக்கம் வருவது தெரிந்தது. நல்லான் திடீரெனக் கீழே விழுந்து மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு உயிரற்றவனைப் போலக் கிடந்தான். கரடி அவனருகே வந்து பார்த்தது. அவனது முகத்தின் பக்கம் தனது முகத்தை நீட்டி உயிர் இருக்கிறதா, இல்லையா? என்று கவனித்தது. செத்துவிட்டான் என்று எண்ணி ஏமாந்து - கரடி, வந்த வழியே போய் விட்டது.
சிறுவர்களுக்கு இப்படியொரு கதை, ஆரம்பப் பள்ளியில் சொல்லிக் கொடுப்பதுண்டு. அந்தக் கதையுடன் குறள் ஒன்றினை இணைத்து, சற்றுத் திருத்திப் படித்துப் பார்ப்போம்.
கரடி போனதும், மரத்தின் உச்சியிலிருந்த வல்லான் கீழே இறங்கி வந்தான். அதற்குள் நல்லானும் அவனுடைய நண்பனை வரவேற்கத் தயாராக எழுந்து உட்கார்ந்து கொண்டான். வல்லான் வியப்புடன் நல்லானைப் பார்த்துக் கேட்டான்:
“ஆருயிர் நண்பா! அந்தக் கரடி உன் காதில் ஏதோ செய்தி சொல்லிற்றே, அது என்ன செய்தி?”
நல்லான் சிரித்துக்கொண்டே, “கரடி எனக்கு ஒரு குறளைச் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லிச் சென்றது” என்றான்.
“என் இனிய நண்பா! என்ன குறளப்பா அது?”
நல்லான் மீண்டும் சிரித்துக்கொண்டே,
“கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.”
என்ற குறள்தான் அது!” என்றான்.
“அப்படியா? கரடிக்குக் குறள் கூடத் தெரியுமா? ஆமாம், அதற்கு அந்தக் கரடி, என்ன விளக்கம் சொல்லிற்று?” என்று வினவினான் வல்லான்.
நல்லான் அந்த விளக்கத்தையும் சொன்னான்:
“நமக்கு வருகிற தீமையிலும் ஒரு வகையான நன்மை உண்டு. எப்படியென்றால், அந்தத் தீமைதான் நம்முடைய நண்பர்களின் இயல்புகளை நமக்கு அளந்து காட்டுகிற அளவுகோலாகும்.”
இந்த விளக்கத்தைக் கேட்டு, வல்லான் வெட்கித் தலைகுனிந்தான்.
அதிகாரம் - 80 - நட்பாராய்தல்; பாடல் - 796
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்