பொருளடக்கம் 111 / 300
யாங்கண்ணின் காண
அச்சுப் பக்கம் 245–246 · ஸ்கேன் 262–263 · அதிகாரம் 114 (நாணுத் துறவுரைத்தல்) — குறள் 1140
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
அழகு நிலவே, நீ குளத்தின்மீது குதித்து அலைகளிலே பாதம் ஆடுகிற பாங்கினைப் பார்த்துப் பார்த்துக் களிக்கிறேன். விழிகளை உயர்த்தி நான் விண்ணைப் பார்த்திட விரும்பவில்லை. அவ்வாறு பார்த்தால் நீ என்னைவிட்டு எட்டாத தொலைவில் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆம்! என் காதலியைப்போல!
அதனால்தான் அருகே தோன்றி அலைகளிலே அழகு நடமிடும் உன்னை, அள்ளி அணைத்திடக் குளத்திலும் இறங்கிவிட்டேன். அடடே! உன் ஒளியுடல் இப்படியே ஏன் நடுங்குகிறது? தழுவிக் கொண்டவுடன் எங்கே நீ, நழுவிப் போய்விட்டாய்?
தங்கமேனிச் செல்வம், தளிர் உடல் தேன்முகம், இன்ப ஊற்று, என்றன் இணையற்ற உயிரோவியம் - அவளும் இப்படித்தான் நான் தழுவித் துடித்திடும் போது துள்ளிப் பாய்ந்திடுவாள் மீன்போல்! தாவி ஓடிவிடுவாள் மான்போல்!
நிலவே! நான் ஆடாமல் அசையாமல் குளத்திற்குள் நின்றவாறு, அலைமீது நீ ஆடும் நாட்டியத்திற்கு என் இதயத் துடிப்புக்களால் “ஜதி” சொல்லிக் கொண்டிருக்கிறேன். வா, நிலவே வா! வெள்ளைப்பூவே! வெள்ளிமயிலே! வா! வா!
வந்துவிட்டாயா பேரழகே! ஆமாம், உன் முகத்தில் என்ன! இரு! இரு! கொஞ்சம் கூர்ந்து பார்க்கிறேன். ஓ! ஓ! அன்றைக்கு நான் இட்ட முத்திரையின் தழும்புதானே அது! நானா? உனக்கு முத்திரை பதித்தேனா? இல்லை - இல்லை - எனக்கும் என் காதலிக்குமிடையே நடந்த கதையை உன்னிடம் கொட்டிவிட்டேன். அவள் என்னைப் பிரிந்துசென்று எத்தனை நாட்களாயின! பிரிந்துசென்ற அன்று, நான் அவளுக்குப் பொறித்த முத்திரையும், அவள் திரும்பி வரும்போது இப்படித்தான் அவள் கன்னத்தில் காட்சி தருமோ?
நிலவே! உன் பரதத்தைச் சற்று நிறுத்திவிட்டு, என் பரிதாபத்தைக் கொஞ்சம் பாரேன். நீ இல்லாவிட்டால் வானுக்கு எழில் இல்லை - அவள் இல்லாவிட்டால் எனக்கு வாழ்வே இல்லை.
உன்னோடு அவளை ஒப்பிடுவதே தவறு! உன்னையும் மீறிய ஒளி படைத்தது அவள் முகம். நீ வெண்ணிலா, அவள் தங்க நிலா; சேல்கள் இரண்டைச் சேர்த்துத் தீட்டப்பெற்ற சித்திரம் என் செந்தமிழாளின் முகம். மாணிக்கப் பேழையிலே முத்துக்களைத் திணித்து, அவை உள்ளே இடமின்றி வெளியே எட்டிப் பார்ப்பது போலிருக்கும் அவளுடைய புன்சிரிப்பு! ஆயிரம் ஆண்டு தவமிருந்தாலும் அந்த வரம் உனக்கு அளிக்க எந்த ஆண்டவனும் இல்லையென்றேன்.
அவளுக்குப் பதிலாக உன்னைப் பார்த்து ஆறுதல் கொள்ளலாமென்றால், அதற்கும் இடமில்லை - அள்ளிப் பொழிகிறாய் காதல் நெருப்பை என்மீது! வாரி இறைக்கிறாய் அந்த வண்ணக்கிளியின் இன்ப நினைவுகளை!
யார், குளக்கரையில் கூடி நின்று சிரிப்பது? ஓகோ, ஊரில் உள்ள இளைஞர்களா? நான் காதல் பிரிவால் கடும் தொல்லைக்கு ஆளாகி என்னை அறியாமல் உன்னிடம் பேசுவதுகண்டு, அவர்கள் கரைமீது நின்று கைகொட்டிச் சிரிக்கிறார்கள், பார்த்தாயா?
சிரிக்கட்டும், என்னைப் பைத்தியம் என்று எண்ணிக்கூடச் சிரிப்பார்கள்!
சும்மாவா சொன்னார் வள்ளுவர்; நான் பட்ட துன்பங்களை அவர்கள் படாமையால், அறிவில்லாத அவர்கள் என் கண் எதிரே நின்று என்னைக்கண்டு நகைக்கின்றனர் - என்னைப்போல அவர்களுக்கும் துன்பம் வந்திருந்தால் அல்லவா தெரியும்!
இது ஒரு காதலனின் குமுறல்.
இதனை வெளிப்படுத்துவதே இந்தக் குறள்:
“யார்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு.”
அதிகாரம் - 114 - நாணுத் துறவுரைத்தல்; பாடல் - 1140
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்