பொருளடக்கம் 110 / 300
தீயினாற் சுட்டபுண்
அச்சுப் பக்கம் 243–244 · ஸ்கேன் 260–261 · அதிகாரம் 13 (அடக்கமுடைமை) — குறள் 129
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
அஞ்சுவயதுக் குழந்தை அவன்! பெயர் அழகன்! அந்தப் பிஞ்சுப் பருவத்திலேயே அன்னையையும் தந்தையையும் இழந்துவிட்டான். மாமன் வீட்டில் வளர்ந்து வந்தான். அழகன்மீது மாமன் அன்பினைப் பொழிந்தான் என்றாலும் அத்தைக்கு அவனைக் கண்டால் வேப்பங்காயாகத்தான் இருந்தது.
தான் பெற்ற மூன்று பிள்ளைகளுக்குச் சமமாக அழகனையும் வளர்த்திட, அந்த அத்தையின் உள்ளம் இடம் தரவில்லை. தன் குழந்தைகளுக்குச் சோறு படைத்தபின்னரே, அழகனை அழைப்பாள் அடுக்கலைக்கு.
பசியால் வாடும் அந்த இளம் வயிறு, பறந்தோடிச் சென்று அத்தை வீசியெறியும் உணவினை விழுங்கி மகிழும்.
“அம்மா - அப்பா இருந்தால் இந்த நிலை தனக்கு வருமா?” என்று அந்தச் சின்ன அரும்பு ஏங்கும்போதெல்லாம் மாமனின் கரம் அவனை வாரியணைத்து ஆறுதல் வழங்கும். அழகனின் வேதனை மாறும்.
ஒருநாள், பணியின் பொருட்டு மாமன் வெளியூர் செல்ல நேரிட்டது. நான்கு பிள்ளைகளும் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஓட்டப் பந்தயத்தில் யார் வெற்றி பெறுவது என்ற போட்டி, அந்தப் பிள்ளைகளுக்குள்ளாக! அந்த விளையாட்டில் அழகன் வெற்றி பெற்றான்.
அழகனை முந்திடவேண்டும் என்று வேகமாக ஓடிய அத்தையின் பிள்ளைகளில் ஒருவன் கால் தடுக்கிக் கீழே விழுந்தான். மிகச் சிறிய காயம்தான்! ஆனாலும் அழுதுகொண்டே வீட்டுக்குள் ஓடினான். நடந்ததை அறிந்துகொண்ட அத்தை
ஆவேசங் கொண்டாள். இரும்புக் கம்பியொன்றை அடுப்பில் நுழைத்துப் பழுக்கக் காய்ச்சி அழகனின் முன்கையில் வைத்தாள். பாவம்! பிள்ளை துடித்துப் பதறிவிட்டான்.
“எந்த வேசியோ பெற்றுப் போட்டுவிட்டுப் போனதையெல்லாம் வளர்த்துத் தொலைக்கவேண்டியிருக்கிறது!” என்று அத்தை கூறிய இழிமொழி, இரும்புக் கம்பியால் சுட்டதைவிட அதிகமாக அழகனைத் துடிக்க வைத்தது.
தன்னைப் பெற்ற தாயை - ஊரே தங்கமெனப் புகழ்ந்து பேசுகிறது. ‘வேசியென்று ஒரு வேளை வீசிவிட்டாளே அத்தை’ என்று அவன் ஏங்கினான். வெளியே ஓடினான்.
ஓடியவன் திரும்பவேயில்லை. எங்கு போனான்? என்ன ஆனான்? என்று யாருக்குமே தெரியவில்லை. அவன் மாமனோ, அவனை எண்ணி எண்ணிக் கண்ணீர் வடித்தான். ஆண்டுகள் உருண்டன.
அத்தை பெற்ற மூன்று பிள்ளைகளும் திருமணம் முடித்துக்கொண்டு, தனித்தனியே குடும்பம் நடத்த வெளியூர்களில் குடிபெயர்ந்துவிட்டனர். அழகனின் மாமன் நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தான். அவனைப் பார்க்கக்கூட அந்தப் பிள்ளைகள் யாரும் வரவில்லை.
அழகனின் அத்தை, தன் பிள்ளைகளின் போக்கை நினைத்துக் கண்ணீர் வடித்தவாறு கணவனின் அருகே அமர்ந்திருந்தாள். அப்போது ‘அத்தை’ என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தார்கள்.
போர் வீரனின் உடையில் அழகன் எதிரே நின்றான். மாமனின் உடல் நலம் கெட்டிருக்கும் செய்தி கேட்டு ஓடி வந்ததாகக் கூறினான்.
மாமனுக்கு அழகனைப் பார்த்ததில், பாதி நோய் மறைந்துவிட்டது. இத்தனை நாள் படையிலா சேர்ந்திருந்தாய் என்று கேட்ட அத்தை, அவனை அன்புடன் உபசரித்து, மாமனுக்கு அருகே உட்காரவைத்து பருகுவதற்குப் பாலும் பழமும் கொண்டுவந்து கொடுத்தாள். அதை வாங்கிய அழகனின் முன்கையில், அவள் போட்ட இரும்புக்கம்பிச் சூட்டின் அடையாளம் அப்படியே இருந்தது.
“என்னை மன்னித்துக் கொள்ளப்பா அழகா! ஏதோ ஆத்திரத்தில் அன்றைக்கு அப்படிச் செய்துவிட்டேன். இந்தப் பாவியால் ஏற்பட்ட அந்தப் புண் எப்போதப்பா ஆறியது?” எனக் கேட்டாள் அத்தை!
“தாங்கள் தீயினால் சுட்ட புண் விரைவில் ஆறிவிட்டது அத்தை! ஆனால் பத்தினித் தெய்வமாம் என் அன்னையை வேசி என இகழ்ந்து வாயினால் சுட்டீர்களே, அந்தப் புண்தான் என் உள்ளத்தில் இன்னமும் ஆறவில்லை.”
என்று பதிலளித்தான் அழகன். கண்கலங்கிட மாமன், அழகனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, ‘மன்னித்து விடப்பா, உன் அத்தையை மன்னித்துவிடு’ என்று கெஞ்சினார். அத்தையும் அழுதுகொண்டே அழகனின் கையை எடுத்துத் தன் முகத்தில் ஒத்திக்கொண்டாள்.
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.”
அதிகாரம் - 13 - அடக்கமுடைமை; பாடல் - 129
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்