பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 109 / 300

அ. கண்ணுள்ளின் போகார் / ஆ. உள்ளுவன் மன்னான்

அச்சுப் பக்கம் 241242 · ஸ்கேன் 258259 · அதிகாரம் 113 (காதற்சிறப்புரைத்தல்) — குறள் 1126, 1125

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

சூளையில் வைத்து எடுத்த பானைகள் ஒருபக்கம் அடுக்கப்பட்டிருக்கின்றன. பச்சை மண்ணால் செய்து பக்குவமாக வைக்கப்பட்டிருந்த பானைகளும் சட்டிகளும் இன்னொரு பக்கம் காட்சி அளிக்கின்றன. பானை செய்யும் சக்கரம், ஓய்வு கொண்டிருக்கிறது. அதனருகேதான் அவள் உட்கார்ந்திருக்கிறாள். அவள் முகத்தில் இனம் தெரியாத ஒரு சோகம். காதலனை இன்னும் காணவில்லையே என்ற

ஏக்கத்தைத்தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்! அவளைக் கேலி செய்வதற்காக அடுத்த வீட்டுத் தோழி வருகிறாள்.

“என்னடியம்மா! கண்ணை மூடிமூடித் திறந்து கொண்டிருக்கிறாய்? உன் காதலன் கண்ணுக்குள்ளேயே இருக்கிறார் என்று சொல்லவாய் - இப்படிக் கண்ணை மூடி இமைத்தால் கண்ணுக்குள் இருக்கும் காதலன் வருந்தமாட்டாரா?”

என்று தோழி புன்னகை சிந்தியவாறு கேட்கிறாள். அப்போது, அவள் காதலன் அங்கு வந்தவன், அவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்பதற்காக, அடுக்கப்பட்டிருந்த பானைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு கவனிக்கிறான். தோழியின் கேள்விக்கு அவள் சொல்கிற பதில், அந்தக் காதலன் நெஞ்சில் தேன்மழை பொழிய வைக்கிறது.

“என் காதலர், என் கண்ணுக்குள்ளிருந்து எங்கும் செல்லமாட்டார். கண்ணை மூடி இமைப்பதாலும் அவர் வருந்தமாட்டார். காரணம்; அவர் அவ்வளவு நுட்பமானவர்.”

அவள் இந்தப் பதிலைக்கூறி, அதற்கான குறளையும் பாடிக் காட்டுகிறாள்.

“கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்எம் காத லவர்.”

தோழி குறுக்கிட்டு, “அவ்வளவு நுட்பமானவர் உன் அருங்குணத்தை நினைத்துப் பார்க்காமல் அடிக்கடி உன்னைப் பிரிந்து விடுகிறாரே!” எனக் கேலி செய்கிறாள். தன் காதலியை அவள் தோழியிடம் சிக்கவைக்க விரும்பாத காதலன், உடனே எதிர்வந்து நிற்கிறான். அடுத்த வீட்டுப் பாவையைப் பார்த்து அவன் ஒரு அழகான விளக்கத்தை அளிக்கிறான்.

“என் அன்புக் காதலியின் போர்புரியும் வலிமைவாய்ந்த கண்களை உணர்ந்தவன் நான். அத்தகைய வேல்விழியாளின் அருங்குணங்களை நான் மறந்தால்தானே பிறகு நினைக்க முடியும். அந்தக் குணங்களை நான் ஒருபோதும் மறந்தது கிடையாதே!”

இந்த விளக்கத்திற்குரிய குறட்பாவையையும் அவன் பாடிக் காட்டுகிறான்.

“உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்”

அவனைப்பற்றி அவன் காதலியிடம் குறை பேசியமைக்காக, அடுத்த வீட்டுத் தோழி நாணமுற்று, அங்கிருந்து துள்ளிக் குதித்து ஓடுகிறாள்.

அதிகாரம் - 113 - காதற்சிறப்புரைத்தல்; பாடல் - 1126, 1125

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்