பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 108 / 300

நெருப்பினுள் துஞ்சலும்

அச்சுப் பக்கம் 239240 · ஸ்கேன் 256257 · அதிகாரம் 105 (நல்குரவு) — குறள் 1049

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

வறுமைத் துன்பத்தை வெறும் துன்பம் என்று கூறாமல், ‘வறுமைத் தீ’ என்று உருக்கமுடன் உரைப்பார். வறுமைத்தீ, வயிற்றுப் பசித்தீயை மூட்டி, அது புரட்சித் தீயாக மாறிய வரலாறுகள் உலகில் பல உண்டு. தீ என்று இதனைக் கூறினாலும் கூட, அது தீயினும் கொடியது என்பதை வள்ளுவர் சித்திரித்துக் காட்டியிருக்கிறார்.

ஆகோ! ஒரு பெரிய சத்திரம். ஆனால், இடிந்து கலனாகிக் கிடக்கும் சத்திரம். என்றோ ஒருநாள் அது வழிப்போக்கருக்கு உணவு வழங்கும் கொடை வள்ளலால் திகழ்ந்தது போலும். இன்று அது வழிப்போக்கருக்கும் உழைத்துப் பிழைக்க வழியில்லாதோர்க்கும் ஓய்வு மடமாக விளங்குகிறது. ஆடுமாடுகள் அங்கே நடமாடுகின்றன! குரங்குகள் ஒருமாற்றிக் கொண்டிருக்கின்றன!

கோழிகள், தங்கள் குஞ்சுகளுடன் உலவுகின்றன. நாலைந்து சிறுவர்கள் அந்தச் சத்திரத்து மூலையில், செத்துப்போன ஒரு முயல்குட்டியை நெருப்பில் வாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அய்யோ! திடீரென நெருப்புப் பிடித்துக் கொண்டது! நெருப்பின் நீண்ட நாக்குகள் சத்திரத்துக் கூரையைச் சுவை பார்க்கத் தாவுகின்றன. அங்கு படுத்திருந்தோர் அலறி எழுந்து ஓடுகின்றனர். கால் நடைகள் திசை தெரியாமல் சிதறி ஓடிவிட்டன. கோழிகள், தங்கள் குஞ்சுகளுடன் வெளியேறிவிட்டன.

தீயின் கொழுந்துகள் சத்திரத்தை முழுமையாக மூடிக்கொண்டு விட்டன. ஊரார் தீயை அணைக்க முடியாமல் தவித்தனர்; அப்போது கையில் ஒரு பிச்சைப் பாத்திரத்துடன் அங்கு வந்த சிறுமி, தன் கையிலிருந்த பாத்திரம் கீழே விழுந்து அதிலிருந்த சோறு பூமியிலே சிதறிவிட்டதைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல், “அய்யோ! என் அப்பாவைக் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று கதறியவாறு, சத்திரத்தை நோக்கி ஓடினாள்.

அதைக் கண்ட ஓர் இளைஞன், சிறுமியைத் தடுத்து நிறுத்தி விட்டு, ஒரே பாய்ச்சலில் சத்திரத்துக்குள் நுழைந்தான். அடுத்த கணம், ஒருவனைத் தூக்கிக் கொண்டு அந்த இளைஞன் வெளியே ஓடி வந்தான். அவன்தான் அந்தப் பிச்சைக்காரச் சிறுமியின் தகப்பன். அவனைப் பார்த்து எல்லோரும் கேட்டார்கள், “என்னப்பா, எரிகிற நெருப்பின் நடுவே இப்படி ஒரு மனிதன் தூங்கிக் கொண்டிருப்பானா? இந்த இளைஞன் இல்லையேல் உன் கதி என்ன ஆகியிருக்கும்?” என்று சினந்து கேட்டனர். அவன் கண்களைக் கசக்கியவாறு, அசதி மிகுந்த நிலையில் பதில் சொன்னான்:

“இந்த நெருப்பைக் கொடியதாக எண்ணி நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால், என்னை வாட்டி வதைக்கிற வறுமையோ, இந்த நெருப்பைவிடக் கொடியது. நெருப்புப் பிடித்தது தெரியாமல்கூட நான் சற்று நேரம் அயர்ந்து தூங்கி விட்டேன். ஆனால், வறுமை தாக்கும்போது தூங்கவே முடியவில்லையே! அது தெரியவில்லையா, உங்களுக்கு? ஏன்? என் தூக்கத்தைக் கெடுத்தீர்கள்? நான் இந்த நெருப்புக்கு மத்தியில் தூங்கியிருப்பேனே; வறுமையை எனக்கு நினைவூட்டி மீண்டும் தூங்க முடியாமல் செய்து விட்டீர்களே!”

இப்படிச் சொல்லி அழுதான் அவன். அந்தக் குமுறல்தான் இதோ குறளாக வெளிப்படுகிறது;

“நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.”

அதிகாரம் - 105 - நல்குரவு; பாடல் - 1049

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்