பொருளடக்கம் 107 / 300
காமக் கணிச்சி
அச்சுப் பக்கம் 237–238 · ஸ்கேன் 254–255 · அதிகாரம் 126 (நிறையழிதல்) — குறள் 1251
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
அவள் அன்று வீட்டில் தனியாக இருந்தாள். துணைக்கு யாருமே இல்லை. இருட்டு வேளை. வீடோ, காட்டுக்கு அருகாமையில் அமைந்திருந்தது. வன விலங்குகளின் பயங்கர ஒலிகள், அவளை நடுங்க வைத்துக் கொண்டிருந்தன. வீட்டின் கதவு சரியாக மூடப்பட்டிருக்கிறதா என்று ஒருமுறைக்கு இருமுறை பார்த்துக் கொண்டாள். தாழ்ப்பாள் அழுத்தமாகப் போடப்பட்டிருக்கிறதா என்று கவனித்து அதையும் செம்மையாகப் போட்டுவிட்டு, கட்டிலில் படுத்து உறங்குவதற்கு முயற்சி
செய்தாள். தூக்கம் வரவில்லை. கதவு மெதுவாக ஆடுவதுபோலத் தோன்றியது. கையில் அகல்விளக்குடன் சென்று கதவை உற்று நோக்கினாள்.
ஆட்டம் எதுவும் கதவில் இல்லை. தனக்குரிய அச்சத்தின் விளைவு எனப் பெருமூச்சு விட்டவாறு, மீண்டும் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள். புரண்டு புரண்டு படுத்தாள். ஏதோ எண்ணங்கள், இளமையின் வசந்தகாலத் துடிப்புகள்! மணமாகாத மலர்க்கொடி அவள். அதனால் எதையும் நினைப்பது கூடத் தன் கற்புக்கு ஊறு தேடக்கூடியது எனக்கருதி, நாணத்துடன் கண்களைப் பொத்தியவாறு குப்புறப் படுத்துக்கொண்டாள்.
அப்போது திடீரென்று ஒரு பேரொலி! கதவு உடைந்து நொறுங்கிப் போய்விட்டது. கதவை உடைத்த கோடரி, வீட்டுக்குள் வந்து அவள் கட்டிலருகே விழுந்தது. அலறியடித்துக்கொண்டு எழுந்து, உடைந்த கதவின் வழியாக வெளியே ஓடிவிட முனைந்தாள். ஆனால், என்ன வேடிக்கை! கதவருகே போனதும், அது தாழ்ப்பாள் போட்டவாறு மூடப்பட்டே இருக்கிறது. குளிர்காலத்தில் நீர் வீழ்ச்சியில் குளித்ததுபோல் மேனி நடுங்க, அப்படியே தரையில் உட்கார்ந்து கொண்டாள். அவள் இதயம் அவளோடு பேசிற்று!
“பெண்ணே! மணமாகாத கண்ணே! கற்பு எனப்படும் கதவுக்கு நீ என்னைத்தான் நாணம் என்ற தாழ்ப்பாளைப் போட்டுப் பாதுகாத்தாலும் காமம் என்னும் கோடரி, ஒரு நாள் அந்தக் கதவை உடைத்தே விடும்.”
இதயத்தின் ஒலியைக் கேட்டதும் அவளுக்கு அன்று மாலை நடந்த நிகழ்ச்சி நினைவில் நிழலாடிற்று.
அவள் விரும்புகிற காதலன் அவளை மாந்தோப்பில் கரம்பிடித்து இழுத்தான். அவளோ, தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள நாணத்துடன் ஓடிவந்து விட்டாள்! காதலன் அவளை அப்போது விட்டுவிட்டாலும் காம உணர்வு இப்போது அவளை விடவில்லை. அது நாணமெனும் தாழ்ப்பாள் போடப்பட்ட நிறை என்னும் கதவை உடைத்துக்கொண்டு அவளை ஆட்கொண்டுவிட்டது. நாளை மாலை, அதே மாந்தோப்பில் அவன் வருவதற்கு முன்பு, அவன் தோளில் தொத்திக் கொள்ளவேண்டும் என்ற முடிவுடன், இரவு முழுதும் விழித்துக்கொண்டே இருக்கிறாள்.
“காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு.”
அதிகாரம் - 126 - நிறையழிதல்; பாடல் - 1251
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்