பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 106 / 300

செல்லான் கிழவன்

அச்சுப் பக்கம் 235236 · ஸ்கேன் 252253 · அதிகாரம் 104 (உழவு) — குறள் 1039

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அது அறுவடைக் காலம்.

தங்கச்சுரங்கமே தரையில் விரிந்ததுபோல், எங்கே நோக்கினாலும் செந்நெற் கதிர்மணிகள் சிரித்துக் குலுங்குகின்றன. பகுத்தறிவுப் பயிர் செய்யக் கலப்பையாகப் பயன்படுவது வினாக்குறி; அந்தக் கேள்விக் குறிபோத்த கருக்கரிவாளால் கழனிகள் எல்லாம் அறுவடை நடக்கிறது. நடுவனார் இல்லாமல் நடனப் பயிற்சி செய்வதுபோலக் கட்டழகுக் காரிகையர், கட்டுக்கட்டாக நெற்கதிர்களைச் சுமந்தவண்ணம் வரப்பு மேடைகளில், இடுப்பை வளைத்தும் நெளித்தும் செல்கின்றனர்.

களத்துமேட்டில் அரிஅரியாக நெல் தாளையெடுத்து ஆணாங்கு நீட்டிட, வாளைச் சுழற்றிப் பாய்ச்சும் வரிப்புலி மறவனைப்போலக் கதிர்த்தாளைச் சுழற்றி அடிக்கிறான் காளை. அங்கே, நெற்குவியல் பொற்குவியலாக நெடிதுயர்ந்து வளர்கிறது.

எல்லோருடைய கழனிகளும் இப்படிப் பொற்களஞ்சியங்களாகப் பொலிவோடு திகழ்ந்திட - ஒரு நிலத்தில் மட்டும் சோகை பிடித்த தோகையுடன் வாடிக் கிடக்கின்றன பயிர்கள். அதனுடைய வேர்கள், நீரைக்கண்டு வெகுகாலம் ஓடியிருக்கவேண்டும். எருவும் இடவில்லை - களையும் எடுக்கவில்லை என்பது மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போதே தெரிகிறது. பித்தவெடி கொண்டுள்ள

பாதம்போன்று வயலெங்கும் வெடிப்புகள் - வறட்சியின் தழிப்புகள்! பல நூறு விளக்குகள் சுற்றிலும் கொழுந்து விட்டெரிய, அந்த ஒரே ஒரு கழனி மட்டும் எண்ணெய் அறியாத விளக்குப்போல இருண்டு கிடப்பானேன்?

அந்த நிலத்துக்கு உரியவன் சோம்பலின் தத்துப்பிள்ளை. உழைத்துக் களிக்காமல் உறக்கத்தில் திளைக்கிறவன். திண்ணை கண்டவிடமெல்லாம் கண்ணை மூடி வான். பெயருக்குப் பயிர் செய்துவிட்டு வந்தபிறகு, வயற்பக்கம் அவன் திரும்பியே பார்ப்பதில்லை.

இல்லக் கிழத்தியின் ஏக்கத்தை நீக்கினானா? அதுவும் இல்லை. ‘அருகிருக்க மாட்டானா? அழகைப் பருகிக் கிடக்கமாட்டானா?’ என்றெல்லாம் உருகிக் கரைந்திடுவாள் அவன் உயிர்த்துணைவி. அவனோ நஞ்சையைப் புறக்கணித்ததைப் போலவே, அந்த வஞ்சிக் கொடியையும் வதைத்தான்.

எப்போதாவது அந்த ‘வீண் பொழுது போக்கி’ வீட்டுக்கு வந்தால், வெண்ணிலவு முகத்தாளின் கண் சிவக்கும் - வேட்கையால் இல்லை, வெறுப்பால்! ஒரு மொழியும் பேசாள்! ‘ஊடல்’ மிகக் கொள்வாள். அவளுடைய நிலாமுகம் நெருப்புப் பந்தாக மாறுவதும் இயற்கைதானே!

அன்று மாலையும் அப்படித்தான், அவன் வந்து நின்றான் வாயிலில். தன் மனைவியை அன்பொழுக அழைத்தான். அவளோ, ‘அத்தான் வந்து விட்டார்களா?’ என்று வழியும் ஆசையுடன் வரவேற்க வரவில்லை. ஆயினும் எட்டிப் பார்த்தாள். கணவனின் வடிவத்தையும் கடந்து அவளது கண்கள் பறந்து சென்றன வீதிக்கு! அங்கே, களத்துமேட்டிலிருந்து, வண்டி வண்டியாக நெல் மூட்டைகளின் அணிவகுப்பு வந்து கொண்டிருந்தது.

அவளுடைய நெஞ்சம் பொருமிற்று. வேதனையும் வெறுப்பும் பின்னிக் கொண்ட பார்வையைத் தன் கணவன்மீது வீசினாள். “நீங்களும் ஓர் ஆண் பிள்ளையா? என்னைப் பார்க்கத்தான் நேரம் இல்லை; நிலப்பெண்ணைப் பார்த்தாவது கொஞ்சி இருக்கக் கூடாதா கொஞ்சம்? அவள் ஊடல் கொண்டதால் கேடல்லவா வந்துவிட்டது? இனி இந்த ஆண்டு முழுவதும் ஒட்டிய வயிறோடு நாம் பட்டினியில் சாக வேண்டியதுதானா?”

-சொற்களைக் கொட்டாமலே விழியினால் கொட்டினாள் தேனாக!

அவள் சினந்து நோக்குவதும் நியாயந்தானே!

மனைவி ஊடல் கொண்டால் ஒரு நேரம் இல்லாவிட்டால் மறுநேரம் மனம் மாறுவாள்; மலர் முகம் காட்டுவாள். ஆனால், நிலமங்கையை அந்தந்தப் பருவத்தில் அடிக்கடி பார்த்துச் சீராட்டாவிட்டால் - உழைப்பால் நீராட்டா விட்டால் - உழவனின் வாழ்க்கையே வறுமையில் கருகும்வண்ணம் அவள் ஊடல் கொண்டுவிடுவாளே!

அதனால்தான், கட்டிய மனைவியின் ஊடலைப்போல - ஏன் அவளது ஊடலைக் காட்டிலும் கூடக் கழனியின் ஊடல் கொடியது என்கிறார் வள்ளுவர்.

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்.”

அதிகாரம் - 104 - உழவு; பாடல் - 1039

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்