பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 105 / 300

அ. தினைத்துணையும் ஊடாமை / ஆ. ஊடற்கண் சென்றேன்மன் / இ. கண்ணின் துனித்தே

அச்சுப் பக்கம் 233234 · ஸ்கேன் 250251 · அதிகாரம் 129 (புணர்ச்சி விதும்பல்) — குறள் 1282, 1284, 1290

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“ஊடுதல் காமத்திற்கு இன்பம்” என்றுரைத்து, ஊடலின் பெருமையை உணர்த்திடும் வள்ளுவர், பிறிதோர் குறளில் தினையளவு ஊடலும் கொள்ளுதல் கூடாது என இடித்துரைக்கிறார்.

“தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின்.”

பனையளவினதாகக் காமம் பெருகிடும்போது தினையளவு ஊடல் கூடச் செய்து பார்ப்போமேயென்று எண்ணக்கூடாதாம்! கூடாது என்பதோடு அவர் நிறுத்தினாரா? அதுதான் இல்லை!

இரவு முழுதும் அணைவளவு இடைவெளியுமின்றித் தழுவிக் கிடந்து இன்பத்தின் உச்சிக்குச்சென்று திரும்பிய காதலர் இருவரைக்கொண்டே, ஊடல் எப்படி ஓடிவிட்டது என்பதையும் அவர் சொல்லவைக்கிறார்.

காலை மலர்கிறது; கட்டிலறை பெருமூச்சுவிடுகிறது. உச்சிமுகம் உள்ளங்கால் வரையில் ‘இச்’ என்ற ஒலியுடன் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு முத்தங்களைப் பரிமாறிக்கொண்ட காதலர், அறையவிட்டு வெளியே வருகின்றனர். புனலிடை மூழ்கிப் பொன்னார் இழையும் துகில் பூணுகின்றனர்.

அவளை, அவளுடைய தோழி சந்திக்கிறாள். நெருக்கமானவர்கள், நெஞ்சில் எதையும் ஒளிக்காமல் பேசிக் கொள்பவர்கள்!

“நேற்றிரவுக் கதை என்னடி?” என்று கேட்கிறாள் அந்தத் தோழி, புன்னகையை அவிழ்த்துக்கொண்டே!

கேள்விக்கு விடை உடனே கிடைக்கிறது.

“தோழி! நான் அவரோடு ஊடியபிறகே கூடுவது என்ற நினைவுடன் சென்றேன், படுக்கையறைக்குள்ளே! ஆனால், என்னுடைய நெஞ்சம் என்னை ஏமாற்றிவிட்டது! என் நோக்கத்தையே என் நெஞ்சம் மறந்துவிட்டு, அவரோடு கூடுவதற்குச் சென்று விட்டது.

“ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதென் நெஞ்சு.”

இந்தக் குறளை அவள் சொன்னதும், தோழி கூறினாள்:

“உண்மைதான்! பனையளவாகக் காமம் பெருகிய பின்னர் தினையளவு ஊடலும் பயன்தராது என்று வள்ளுவர் சும்மாவா சொன்னார்!”

அந்தக் காதலியின் மேனித் தித்திப்பு முழுவதையும் சுவைத்த காதலனும் தன் தோழனைச் சந்திக்கிறான். யார் அந்தத் தோழன்? வேறு யாருமல்ல! அவனேதான்! ஆம்! தன்னை நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறான். கண்ணாடியில் தெரியும் அவன் உருவம், அவனைப் பார்த்துக் கேட்கிறது: ‘இரவு அவள் ஊடல் புரியவே இல்லையே - நீ அதனை உணர்ந்தாயா’ என்று!

கண்ணாடியின் உருவத்திற்குக் காதலனின் நெஞ்சம் விளக்கமளிக்கிறது. இரவு நடந்த இன்பக் களியாட்டத்தை அது விவரிக்கிறது.

“முதலில் அவள் பிணங்கிடவேண்டுமென்று நினைத்துத்தான் கண்பார்வையின் அளவில் தனது ஊடலைத் தொடங்கினாள். ஆனால், உணர்ச்சியின் கட்டுக்கடங்காத நிலையில் என்னைவிட விரைந்து முந்திக்கொண்டு, கண் அளவில் கொண்ட பிணக்கத்தையும் மறந்துவிட்டுக் கலங்கியவாறு தழுவிக்கொண்டாள்.”

ஊடல் புரிய நினைத்தவள், பனையளவாகக் காமம் நிறைந்து பொங்கியதும் தினையளவு ஊடல்கூடப் பயன்தராது என்பதைப் புரிந்துகொண்டாள்போலும் என எண்ணி, அவன் உள்ளம் உவகையால் கூத்தாடியது.

“கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று.”

அதிகாரம் - 129 - புணர்ச்சி விதும்பல்; பாடல்கள் - 1282, 1284, 1290

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்