பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 104 / 300

அ. உழுதுண்டு வாழ்வாரே / ஆ. வலியில் நிலைமையான்

அச்சுப் பக்கம் 231232 · ஸ்கேன் 248249 · அதிகாரம் 28 (கூடாவொழுக்கம்) — குறள் 273

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

புலி பசுத்தோலைப் போர்த்துக்கொண்டு மந்தையில் நுழைந்து, மாடுகளை ஏமாற்றி, அவைகளைக் கொன்று தின்றது என்று, இளவயதில் கதைகள் கேட்டிருக்கிறோம். கற்பனை மிகுந்த கதைதான் எனினும் நல்லவனைப்போல நடிக்கிற ஒருவனை நம்பி ஏமாறக்கூடாது என்பதற்காகத் தோன்றிய கதையாகும். “அதோ வருகிறான் பார், பசுத்தோல் போர்த்திய புலி!” என்றெல்லாம் நாடகங்களிலேகூட உரையாடல்களை அமைப்பதுண்டு.

இப்படி, ஒரு விலங்கின் தோலை மற்றொரு விலங்கு போர்த்திக்கொண்டு ஏமாற்றும்போது, சாதுவான விலங்கு என்று கருதப்படுகிற ஒன்றின் தோலை, பொல்லாத விலங்கு ஒன்று போர்த்துக் கொள்வதுதானே பொருத்தமாக இருக்க முடியும்.

ஆனால், வள்ளுவரின் சிந்தனை வேகம்- கற்பனைப் பெருவெள்ளம் வேறு விதமாக உருவெடுத்து நம்மை வியப்பிலாழ்த்துகிறது.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்.”

என்ற குறளுக்கொப்ப உழவுத் தொழிலில் ஈடுபட்ட சிறுநிலக் கிழமான் ஒருவன் எழிலார்ந்த சிற்றூர் ஒன்றில் வாழ்ந்தான். அவன் வியர்வையின் விலைவால், பச்சைப் பட்டாடை அணிந்து நின்றாள், அவன் வளர்த்த கழனிப் பெண்ணாள்! ஆம், செழிப்பு மிகுந்த பசும் பயிர்கள் அவனது வயல்களை அழகுக்கோலம் கொள்ளச் செய்தன.

அந்தப் பயிரின் வளத்தைக் கண்டதும் நாக்கில் நீர் ஊறிற்று, அவன் வீட்டுப் பசுவுக்கு! எப்படியாவது அந்த வயல்களில் இறங்கி, அந்த இளம் பயிர்களை ஆசைத்தீரச் சாப்பிடவேண்டுமென்று முடிவு கட்டியது. பயிரை மேயும்போது உழவன் பார்த்துவிட்டால் நன்றாக உதை வாங்க வேண்டுமேயென்ற அச்சம் வேறு அதற்கு! என்ன தந்திரம் செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கியது அந்தப் பசு!

ஒருநாள், மாலைப்பொழுது சாயும் நேரம். உழவன், வீட்டுப் பணிகளை முடித்துவிட்டு வாய்க்கால் வரப்புகளை வகைப்படுத்த, வயலின் பக்கம் வந்தான். காற்றிலாடும் முற்றாத பச்சைப் பயிர்களை இரு விழியால் கண்டு இன்பங் கொண்டான். வரப்போரம் நடந்து வந்தவன், திடீரென, “அய்யோ!” என்று அலறினான். அலறியவன் அங்கு நிற்கவில்லை. கழனியைவிட்டுத் தெருவின் பக்கம் ஓடினான். “அய்யோ! அய்யோ! என் கழனியை எல்லாம் புலி அழிக்கிறது. பயிர்களையெல்லாம் புலி மேய்கிறது” என்று கத்தினான். ஊரார் ஓடிவந்து கூடினர். “என்னடா வேடிக்கை? புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா?” என்றார் ஒரு முதியவர். “அதோ என் பயிரைத் தின்னுகிறதே!” என்று அழுதான் உழவன்! ஊரார் வயல்களை நோக்கி ஓடினர். உண்மைதான், புலிபோன்று பயிரை மேய்ந்து கொண்டிருந்தது. ஆட்கள் கூட்டமாக வருவது கண்டு, புலி அவர்களை மிரட்டுவதுபோல் நிமிர்ந்து நின்றது! அதைக்கண்டு அச்சத்தால் நடுங்கியவர்கள், “சரி! சரி! அதை ஒன்றும் செய்யாதீர்கள். மேய்கிறவரையில் மேய்ந்துவிட்டுப் போகட்டும். வயல் முழுவதையும் மேய அதற்கு வயிறுதான் இடம் கொடுக்குமா?” என்று திரும்பிட முடிவு செய்தனர். அந்தக் கூட்டத்தில் அஞ்சா நெஞ்சர்களும் இல்லாமல் போகவில்லை! அவர்கள் தங்கள் கைகளில் ஏந்தியிருந்த ஈட்டிகளையும் வேல்களையும் புலியை நோக்கி வீசினர். புலி மிரண்டோடிக் கழனிக்குள்ளே சென்று, சேற்றில் சிக்கிக் கீழே விழுந்தது. அஞ்சா நெஞ்சர்கள் விடவில்லை. அருகே சென்று பார்த்தனர். சேற்றில் விழுந்து கிடந்தது உழவன் வீட்டுப் பசுமாடு! அதனருகே கிடந்தது ஒரு புலியின் தோல்!

பசுவின் தந்திரத்தைக் கண்டு எல்லோரும் வியப்புற்றனர். உழவன் மட்டும் சீற்றங்கொண்டு, அந்தப் பசுவுக்கு நன்றாக அடி கொடுத்து நையப் புடைத்தான்.

“புலி, பயிரைத் தின்னாது” என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு ஏமாந்து விடுவார்கள். அப்படியே யாராவது பார்த்துவிட்டாலும் புலியின் அருகே வர பயப்படுவார்கள் என்றல்லவா இந்தப் பசு இவ்வளவு பெரிய சூழ்ச்சி செய்திருக்கிறது!” என்றார் அந்த ஊர் முதியவர் ஒருவர். “ஆமாம்! மனத்தை அடக்கமுடியாத சிலபேர், தாங்கள் தவறு செய்யும்போது யாரும் அருகே நெருங்கி வந்து தடுக்க முடியாதபடி தவக்கோலம் புனைவதுபோல, இந்தப் பசு புலித்தோலைப் போர்த்திக்கொண்டு பயிரை மேய்ந்திருக்கிறது!” என்று விளக்கமளித்தார், இன்னொரு முதியவர்.

கற்பனைக் கதையாக இருந்தாலும், புலித்தோல் போர்த்திய பசுவின் கதை முற்றிலும் புதிய கதையன்றோ? இந்தக் கருத்தை அடக்கிய குறள்தான் இது!

“வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.”

அதிகாரம் - 28 - கூடாவொழுக்கம்; பாடல் - 273

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்