பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 103 / 300

அ. துனியும் புலவியும் / ஆ. நீரும் நிழலது

அச்சுப் பக்கம் 228230 · ஸ்கேன் 245247 · அதிகாரம் 131 (புலவி) — குறள் 1306, 1309

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

மாங்கனியும் பூங்குழலியும் இணைபிரியாத் தோழிகள். அடுத்த அடுத்த வீடுகளில் பிறந்து, ஆடைகட்டாப் பருவமுதல் கலந்து பழகி, ஒன்றாக உண்டு உறங்கி, ஒருயிர் ஈருடல் என உண்மை நட்புக் கொண்டு, ஊரார் புகழவும் உற்றார் வாழ்த்தவும் அகவை பதினாறுக் குறியவராயினர்.

பூங்குழலிக்கு அவளது பெற்றோர் எடுத்த முயற்சியின் காரணமாக மணவிழா நடைபெற்று முடிந்தது. வாய்த்த மணாளன் அன்பின் ஊற்றாக இருந்தமையால்,

பூங்குழலி, தனக்குக் கிடைத்த பேரினை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள். தன்னைப் போலவே மாங்கனியும் மணம்பெற்று நல்வாழ்வு பெற வேண்டுமென வாழ்த்திக் கொண்டிருந்தாள்.

மணவிழாவுக்குப் பிறகு, பூங்குழலியை அடிக்கடிச் சந்தித்து ஆடிப்பாடி மகிழ முடியாமல், மாங்கனி தவித்துக்கொண்டுதான் இருந்தாள். ஐந்தாறு திங்கள் கழிந்தன. மாங்கனிக்கும் மணநிகழ்ச்சி ஏற்பாடாயிற்று.

பூங்குழலியும் அவள் கணவனும் முன்னின்று மாங்கனியின் வாழ்வு மங்கலவிழாவைச் சீரோடும் சிறப்போடும் நடத்தி முடித்தனர். மாங்கனியின் கணவன், அவளை அழைத்துக் கொண்டு தன் ஊருக்குப் புறப்பட்டான்.

பூங்குழலிக்குக் கிடைத்தது போன்று சொந்த ஊரிலேயே மணமகன் கிட்டாத காரணத்தால், எட்டாத தொலைவில் உள்ள ஊருக்கு மாங்கனி செல்ல வேண்டியதாயிற்று.

உயிர்த்தோழிகள் பிரிக்கப்பட்டனர். அந்தப் பிரிவுத் துன்பம் பூங்குழலியைப் பொறுத்தவரையில் அவளது கணவன் பொழிந்த அன்பால் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.

மாங்கனிக்குக் கிடைத்தவனும் அவளை மயக்கிடும் பேரழகு வாய்ந்தவன்தான்! அழகனுக்கு, அவள் மாங்கனியாகவே ஆனாள். உடல் பெற்ற இன்பம் ஏனோ அவள் உள்ளம் பெறவில்லை!

சில நாட்களுக்குப்பிறகு மாங்கனியும் அவள் கணவனும் ஊருக்கு வந்தனர். இரண்டொரு நாட்கள் மாமனார் வீட்டில் தங்கிச் செல்லவேண்டுமென்ற அழைப்பை மாங்கனியின் கணவன் மறுக்கவில்லை. வந்த நாளன்று மாலை பூங்குழலியைக் காண ஓடினாள் மாங்கனி. இருவரும் ஒருவரையொருவர் அள்ளிக்கொண்டனர்.

“எப்படியிருக்கிறது இல்வாழ்வு?” எனக் கேட்டாள் பூங்குழலி, மாங்கனியிடம்! இருவரும், ஒவ்வொரு நாள் இரவும் எப்படிப் பறக்கின்றன என்பதுபற்றிப் பேசினர்.

மாங்கனி, ஒரு பெருமூச்சோடு சொன்னாள்; “பூங்குழலி! உன்னிடம் சொன்னால் என்ன? என்னை இன்பபுரிக்கே அழைத்துச் செல்கிறார் என் கணவர் உடலுறவில்! ஆனால், அந்த உணர்ச்சிப் பூரிப்புடன் என் உள்ளம் நிறைவு கொள்ள ஏனோ மறுக்கிறது? அவரிடம் நான் உடலின்பத்தை மட்டுமின்றி வேறு எதையோ எதிர்பார்க்கிறேன். அதில் எனக்கு ஏமாற்றம்தான்! என் வாழ்வும் நான் பெறும் இன்பமும் முழுமைபெற நீதான் வழி கூறவேண்டும்!”

இதைக் கேட்டுப் பூங்குழலி புன்னகை புரிந்தாள். சிரித்துக்கொண்டே வழியும் சொன்னாள்.

“மாங்கனி! நன்றாகப் பழுத்துவிட்ட பழத்தைப் போலவும், முற்றாத இளங்காயைப் போலவும் காதல் பயன்படாததாக ஆகிவிடுமென்று, வள்ளுவர் கூறியிருக்கிறார். எப்போது அப்படிக் காதல் பயனற்றதாகிவிடும் தெரியுமா? காதல் வாழ்க்கையில் பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், அப்படி ஆகிவிடுமாம்! அதனால்தான்

ஊடுதல் காதலுக்கே இன்பம் என்று அவர் குறள் தீட்டினார் - அந்த ஊடலைத்தான் ‘புலவி’ என்றும், ‘பிணக்கு’ என்றும் கூறுகிறார்கள். நீ, உன் இன்ப வாழ்வில் ஊடலுக்கே வழி விடாமல் இயந்திர வாழ்வு நடத்திக் கொண்டிருக்கிறாய் போலும்!

“துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.”

என்ற குறள் மொழியை மறந்து விட்டாயே! இன்று நான் சொன்னதைக் கடைப்பிடித்துப்பார்! நாளைக்குச் சொல்லு நடந்ததை!”

பூங்குழலியின் அறிவுரைப்படி அன்று நடந்துகொள்ளும் முடிவுடன், மாங்கனி வீட்டுக்குத் திரும்பினாள்.

மறுநாள் மாலைவரையில் மாங்கனியின் வரவுக்காகப் பூங்குழலி காத்திருந்தாள். அவள் வரவில்லை. பூங்குழலியே மாங்கனியின் மனைக்கு விரைந்தாள். மாங்கனி, கண்கலங்கப் படுத்திருந்தாள்; காரணம் அறியத் துடித்தாள் பூங்குழலி! அவள் சொன்னாள்:

“பூங்குழலி! இரவு கட்டிலறையில் என்றும்போல் அவர் என்னை இழுத்துப் போர்த்துக்கொண்டார். நான் ஊடல் புரியவேண்டுமென்ற திட்டத்துடன் அவரைவிட்டு விலகினேன். மீண்டும் இழுத்தார். கைகளைத் தட்டி விட்டேன், மென்மையாகத்தான்!

‘என்ன கண்ணே கோபம்’ எனக் கேட்டார் என எதிர்பார்த்தேன். அவரோ, ‘சீ!’ எனச் சீறினார். அதிர்ச்சியடைந்து ஓடிப்போய்க் கட்டிக் கொண்டேன். என்னை உதறித் தள்ளிவிட்டு, ஊருக்கு அவர் மட்டும் கிளம்பிவிட்டார். உன் ‘ஊடல் அறிவுரை’ என்னை இப்படி வேதனைக்கு ஆளாக்கி விட்டது! நல்ல குறளைச் சொன்னாய் போ!”

குறள்மீதே சினங்காட்டிய மாங்கனியைத் தேற்றியவாறு பூங்குழலி விளக்கம் தந்தாள்.

“மாங்கனி! வள்ளுவரே மற்றொரு குறளும் எழுதியிருக்கிறார். நீராக இருந்தாலும் அது நிழலை அடுத்து இருந்தால்தான் இனிமையானது. அதுபோல ஊடலும், அன்பு உள்ளவர்களிடம் கொள்வதுதான் இன்பம் பயக்கும்.

“நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.”

இந்தக் குறளின்படி, உன் கணவன் அன்பெனும் ஒரு பொருளிலா மனிதன் என்று தெளிவாகிறது.”

பின்னர், பூங்குழலியிடம் விடைபெற்றுக் கொண்டு, “ஏதோ வாழ்ந்தால் சரி!” என்ற முடிவுடன், மணாளனைத் தேடி அவனிருக்கும் ஊருக்குப் புறப்பட்டாள் மாங்கனி!

அதிகாரம் - 131 - புலவி; பாடல்கள் - 1306, 1309

துனி = பிணக்கம்; புலவி = ஊடல்.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்