பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 102 / 300

அ. சுழன்றும் ஏர்ப்பின்னது / ஆ. அமிழ்தினும் ஆற்ற

அச்சுப் பக்கம் 226227 · ஸ்கேன் 243244 · அதிகாரம் 104 (உழவு) — குறள் 1031; அதிகாரம் 7 (மக்கட்பேறு) — குறள் 64

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காலை அரும்பும்போதே கண் மலர்ந்த கட்டழகி. “வேலை மிக இருக்கிறதுதான் கழனியிலே, துயிலெழுவீர்!” எனத் தொட்டு, இதழ் மொட்டு அவன் முகத்தில் பதித்து, உழைப்பதற்கு அனுப்பி வைத்தாள். தோள்கொண்டு நீர்வையம் பெயர்த்தெடுத்துப் பொன்னை - மணியைத் தருகின்ற பாட்டாளி, வாள் கொண்ட வீரன் களம்புகும் வேகம்போல் வயல் புகுந்தான். வியர்வை தனைப் பாய்ச்சுவதற்கு முற்பட்டான். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்று தனக்குத்தானே பெருமையடித்துக்

கொண்டான். பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம் ஏர்த்தொழிலின் பின்னேதான் நடைபோடுகிறது. ஆகவே, எவ்வளவுதான் துன்புற்றாலும் உழவுத்தொழிலே உயர்வுடையது என ஆறுதல் பெற்றான், தன் காலில் தைத்த முள்ளை எடுத்தெறிந்துவிட்டு!

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.”

என்று இசை முழக்கியவாறு, இடையிலே குழந்தையும் தலையிலே கூடையுமாக நடையழகு காட்டி அங்கு வந்தாள் அவன் ஆருயிர்த் துணைவி.

“வஞ்சீ! இன்றென்ன வயிற்றுக்கு?” என்றான்.

“கஞ்சிதான்” என்றாள் கொஞ்சும் குரலில்!

“அய்யோ - இன்றைக்கும் கூழ்தானா? ஏழையின் நிலை என்றைக்கும் இதுதானா?”

-என வேதனை மொழியுதிர்த்து, வியர்வையைத் துடைத்தவாறு மரநிழலில் அமர்ந்தான். கலயத்தையும் அவளையும் மாறிமாறிப் பார்த்தான். ‘கூழ் குடிக்க வேண்டுமா?’ அவன் கண்கள் கலங்கின; அவளும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள், குளமாகிவிட்ட விழிகளை அவனுக்குக் காட்டக் கூடாதென்று!

என்னே விந்தை!

திடீரென அந்தக் கூழ் அமுதமாக மாறி விடுகிறது. கலயத்தை எடுக்கிறான்- மடமடவெனக் குடிக்கிறான். ‘அமுதம்! அமுதம்! அழகே! நீயும் குடி!’ என அவள் வாயிலும் கலயத்தைக் கவிழ்க்கிறான்.

கூழ் எப்படி அமுதமாயிற்று?

அவர்கள் பெற்ற அருமைச் செல்வம் தவழ்ந்தோடி வந்து, கஞ்சிக் கலயத்தில் தன் பிஞ்சுக் கரத்தைவிட்டுக் கலக்கி விடுகிறதாம். அதன் கை பட்டதும் கூழ் அமுதமாகி விடுகிறதாம். வள்ளுவர் அதனைக் கூறுகிறார்.

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.”

கூழ் அமிழ்தமாகிறதா? அல்லது அதைக் கூறும் இந்தக் குறள் நமக்கு அமிழ்தமாகத் தோன்றுகிறதா?

ஆகா! நினைக்கவே இனிக்கிறது!- இந்தக் குறள்தான் அமிழ்தம்! தெவிட்டாத தேனமிழ்தம்!

அதிகாரம் - 104 - உழவு; பாடல் - 1031 அதிகாரம் - 7 - மக்கட்பேறு; பாடல் - 64

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்