பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 101 / 300

விளக்கற்றம் பார்க்கும்

அச்சுப் பக்கம் 224225 · ஸ்கேன் 241242 · அதிகாரம் 119 (பசப்புறுபருவரல்) — குறள் 1186

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அழகிய விளக்கொன்று அந்த வீட்டுக்குள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அந்த விளக்கு எப்போது அணையும் என்று வீட்டுக்கு வெளியே ஓர் ஆள் காத்திருந்த காட்சியை நான் கண்டேன். யார் அந்த ஆள்? ஒளியிருக்கும்போது வீட்டுக்குள் நுழையத் தயங்குகிற ஆள்; ஒரு கள்வனாகத்தான் இருக்கவேண்டும்; அல்லது அந்த வீட்டிலிருக்கும் தன் இதயக்காதலியை அப்போதுதான் யாருமறியாமல் சென்று தொட்டுத் தழுவிக் களிக்கலாம் என ஏங்கித் தவிக்கும் கள்ளக் காதலனாக இருந்திடவேண்டும்.

ஆனால், நான் கண்ட ஆள் இந்த இருவகையினரும் இல்லை! கள்வனுமில்லை; கள்ளக் காதலனுமல்ல!

அப்படியானால், விளக்கு அணைவதை அத்துணைத் துடிப்போடு எதிர் பார்த்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே நிற்பதுதான் யார்?

பெயர் சொல்லட்டுமா? “இருள்” என்பதுதான் அந்தப் பெயர்!

விளக்கொளி, எப்போது மறையும்; வீட்டுக்குள் சென்று ஆதிக்கம் செலுத்தலாம் என்று இருள் காத்துக் கிடக்கிறது. விளக்கணைந்தால் இருள் சூழ்ந்துவிடும் என்பதைத்தான் வள்ளுவர் முற்றிலும் புதுமையான முறையில் எழுதி காட்டுகிறார்.

விளக்கு எப்போது ஒளியிழக்கும் என்று இருள் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

இந்தக் கற்பனையை எந்த நிகழ்ச்சியுடன் ஒப்பிடுகிறார் என்று பார்க்கும் போதுதான், இலக்கியச் சுவையை முழுவதுமாக அனுபவிக்கும் மனநிறைவு ஏற்படுகிறது. விளக்கு எப்போது நிறுத்தப்படும்; நாம் உள்ளே நுழையலாம் என்று காத்துக் கிடக்கும் இருளைப்போலவே - இன்னொரு ஆளும் காத்துக் கிடக்கிற காட்சியை வள்ளுவர் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

அது யார் தெரியுமா? பெயர் பசலை! இருட்டுத்தான் விளக்கொளி மறைவதற்காகக் காத்திருக்கிறது; இந்தப் பசலை எதற்காகக் காத்திருக்கிறது? ஒரு பெண்ணின் மேனியிற் சென்று படர்வதற்காகக் காத்துக் கிடக்கிறதாம்! அதற்கு வழி என்ன?

தலைவியைத் தழுவிக் கொண்டிருக்கிறான் தலைவன்! மெழுகால் இரண்டு ஆண் பெண் உருவங்களைச் செய்து இரண்டையும் தழுவுவதுபோல் ஒட்டிக்காட்டி இடையே நெருப்புக் கனலையும் மூட்டிவிட்டால், எப்படி இரண்டு உருவங்களும் உருகி ஒன்றாகி இணைந்து கிடக்குமோ அவ்வாறு அந்தத் தலைவனும் தலைவியும் தழுவி மகிழ்ந்தனர். பசலை நிறமோ அந்தப் பைங்கிளியின்மீது படரத் துடிக்கிறது!

விளக்கு அணைந்தால்தானே இருள் நுழைய முடியும்! அதைப்போல்- தலைவன், தலைவியைத் தழுவுவதில் இடைவெளை ஏற்பட்டால் உடனடியாகப் பறந்தோடிச் சென்று பசலைநிறம் அந்தப் பாவையை ஆட்கொண்டுவிடும் ஆரத்தழுவி அகமகிழும் அந்தக் காதல் நிகழ்ச்சியில், தலைவி தனித்து விடப்பட்டால் போதும்; பசலை நிறம் அவள்மீது படர்ந்து விடுமாம்!

அதற்காகத்தான் விளக்கின் மறைவை எதிர்பார்க்கும் இருளைப்போல, தலைவியைத் தழுவுகின்ற தலைவன் எடுத்துக் கொள்கிற ஓய்வை எதிர்பார்த்துக் காத்திருக்கிறதாம் பசலை! அந்த இன்ப அணைப்பில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் பசலையின் படையெடுப்பு அந்தத் தலைவியின் உடலைத் தாக்கிவிடும்.

என்ன சிறப்பான கற்பனை! விளக்கின் மறைவுக்குக் காத்திருக்கும் இருள்-தழுவலின்போது ஏற்படும் ஒருகணச் சோர்வுக்காகக் காத்திருக்கும் பசலை-இரண்டையும் ஒப்பிட்டுக் காட்டும் இனிமைக் குறள் இதோ!

“விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.”

அதிகாரம் - 119 - பசப்புறுபருவரல்; பாடல் - 1186

முயக்கம் - தழுவுதல்; அற்றம் - நீங்குதல்; பசப்பு - பசலை.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்