பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 100 / 300

களித்தானைக் காரணம்

அச்சுப் பக்கம் 222223 · ஸ்கேன் 239240 · அதிகாரம் 93 (கள்ளுண்ணாமை) — குறள் 929

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

விழி சிவந்தது. மொழி குழறியது. வெறி ஏறிக்கொண்டேயிருந்தது. ஏன்? பகை வெட்டிச் சாய்க்கும் வெஞ்சினம் கொண்டதாலா? இல்லை! கொண்ட கொள்கைக்கு ஊறு விளைத்துச் சில துரோகிகள் முளைத்துவிட்டனரே என்ற உள்ளக் குமுறல் அப்படி வெளிப்பட்டதா? அதுவுமில்லை. பின் எதற்காக? அவன் ஒரு குடிகாரன். வழக்கமாகக் குடிப்பவன். மொந்தையிற் கள்ளை மொண்டு குடிப்பதைவிட அவன் சிந்தையில் எதுவும் சிறப்பாகத் தோன்றுவதில்லை.

ஆடி நடப்பது - பாடிச் சிரிப்பது - கூடிக் குடிப்பது - அவன் அன்றாட அலுவல்கள். இழித்துப் பேசுவர் ஊரார், அவன் எதிரில் அல்ல, திண்ணைக்குத் திண்ணை அமர்ந்திருப்போர் அவனைப்பற்றி ஏசுவர்; ஏகடியம் செய்வர். தெருவோரம் அவன் தள்ளாடி வருவதைக் கண்டு விட்டால் வாய்பொத்திக் கொள்வர். சிலர் அவனை வாழ்த்தவும் செய்வர். வசவுக்கும் வாழ்த்துரைக்கும் வேறுபாடு தெரியாத நேரம்தானே அவன் கண்களில் அதிகம். அதற்கோர் சிரிப்பு! தொடர்ந்து ஓர் அழுகை! வீட்டுக்குள் நுழைந்தாலோ துணைவியின் முதுகு வீங்கும்; முகம் கிழியும். தாய் தந்தை குறுக்கிட்டாலோ, அவர்களுக்கு ‘நாய் நரி’ பட்டம்தான் மிஞ்சும். “அப்பா” என அலறி அழும் செல்வங்கள், அவன் முரட்டுக் கால்களால் மிதிபடும்.

அவனில்லாத நேரம், அந்த ஊர்ப் பொதுமன்றத்தில் அவனது சேட்டைகள் குறித்துப் பலரும் வருந்தினர். அவன் செயல்களால் அவன் வீட்டுக்கு மட்டுமல்ல;

ஊருக்கே அவமானம் சூழ்கிறது எனக் கலங்கினர். இந்தக் களங்கத்திற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டத்தான் வேண்டும் என்று சிலர் முழங்கினர். அவனை ஊரைவிட்டே துரத்தினால் என்ன என்று ஒருவன் துடிப்புடன் கேட்டு விட்டுச் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான், அவன் எங்கேயாவது வருகிறானா என்று!

அவனை என்னால் திருத்தமுடியும் என்று ஒருவன் நெஞ்சைத் தட்டிக் கொண்டு எழுந்து நின்றான். அப்போது ‘கலகல’ என ஒரு சிரிப்பொலி. அனைவரும் வியப்புடன் திரும்பி நோக்கினர். “முடியாதப்பா முடியாது” என்று கூறியவாறு வள்ளுவர், மன்றத்தில் நுழைந்தார்.

“ஏன் முடியாது? என்னால் முடியும்” என்றான் முன்னால் முழங்கியவன்.

வள்ளுவர் அமைதியாகச் சொன்னார்: “யாரிடமாவது ஒரு பொன் நாணயமிருந்தால் இதோ எதிரேயுள்ள குளத்தில் வீசி எறியுங்கள்”

வள்ளுவர் சொன்னதைக் கேட்டு ஒருவர், தன்னிடமிருந்த பொன் நாணயத்தைக் குளத்தில் வீசி எறிந்தார்.

அங்கிருந்தவர்களைப் பார்த்து வள்ளுவர், “யாராவது ஒருவர் நீரில் மூழ்கி அந்த நாணயத்தைத் தேடி எடுத்து வரமுடியுமா?” எனக் கேட்டார். என்னால் முடியுமென ஓர் இளைஞன் நீரில் மூழ்கி நாணயத்தைத் தேடத் தொடங்கினான்.

குடிகாரனைத் திருத்த முடியுமென வீரம் பேசியவனைக் கூப்பிட்டு, “தம்பி! பொன் நாணயத்தைத் தேட நீரில் மூழ்கியிருக்கிற இளைஞன் இப்போது எந்தப் பகுதியில் தேடிக் கொண்டிருக்கிறான் என்பது தெரியுமா?” என வினவினார்.

“தெரியாது” என விடை கிடைத்தது. “இதோ இந்த விளக்கை எடுத்துக்கொண்டு நீயும் நீரில் மூழ்கித் தேடினால் அவனிருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விடலாமே” என்றார் வள்ளுவர். ஓர் அகல் விளக்கையும் அவன் கையில் தந்தார்.

அவன் ஏளனச் சிரிப்புடன் கூறினான்: “என்னய்யா வேடிக்கை. நீருக்குள் இருப்பவனைத் தேட விளக்கை எடுத்துக் கொண்டு போவதா? விளக்கு அணைந்து விடாதா?”

“அதைத்தான் தம்பி நானும் சொல்கிறேன். நீரில் மூழ்கியிருப்பவனைத் தீ விளக்குக் கொண்டு தேடுகிற முயற்சியைப் போன்றுதான், கள்ளுண்டு மயங்கிக் கிடப்பவனிடம் காரணங்களைச் சொல்லித் திருத்துகிற செயலுமாகும்” என வள்ளுவர் கூறிவிட்டு, அதற்கோர் குறளையும் மொழிந்தார்:

“களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று.”

அதிகாரம் - 93 - கள்ளுண்ணாமை; பாடல் - 929

களித்தான் - குடிகாரன் எனப் பொருள்படும்.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்