பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 99 / 300

அ. அறுவாய் நிறைந்த / ஆ. மாதர் முகம்போல்

அச்சுப் பக்கம் 220221 · ஸ்கேன் 237238 · அதிகாரம் 112 (நலம்புனைந்துரைத்தல்) — குறள் 1117, 1118

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அழகு! அழகு! அழகு! அந்தக் கவிஞன் எங்கும் எதிலும் அழகைத்தான் காண்பான்; அழகைத்தான் வழிபடுவான்; அழகைத்தான் காதலிப்பான். அவன் கவிதைக் கற்பனையில், உலகத்து அழகையெல்லாம் ஒன்று திரட்டி எழிற்பாவை யொருத்தியை உருவாக்கிக் கொண்டான்.

செந்தாமரை மலர்களின் சேர்க்கை! முல்லை மொட்டுக்களின் குவிப்பு! உதய வானத்தின் ஒளிமயம்! மாலைநேரத்து இளங்காற்றின் இன்ப சுகம்!

இத்தனையும் கூடிய இணையற்ற அழகுமங்கை அவன் மடியில் படுத்து, அவன் தரும் முத்தங்களைச் சுவைத்து மகிழ்ந்து, பதிலுக்குப் பதில் வழங்கிக் கொண்டிருந்தாள், கடற்கரையோரத்தில்!

கலவி மயக்கத்தில் ஏற்பட்ட களைப்பு நீக்கும் தேன்கலந்த பாலாக இருந்து அவளுக்கு, அவன் தந்த இதழ்ப்பரிசு! மெல்ல இமை மூடினாள்; கண்ணயர்ந்தாள்.

அழகின் திருவுருவத்தின் கூந்தலை மெல்ல வருடியவாறு, வானத்தை நோக்கினான் கவிஞன். ஒளி மழை கொட்டிக்கொண்டிருந்த நிலவைக் காணவில்லை. எனினும் அவனைச் சுற்றி ஒளி நிறைந்தே இருந்தது. நிலவில்லாது ஒளி எவ்வாறு பொழிகிறது எனும் வியப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தான்.

நிலவு பெண்ணுருவங்கொண்டு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவன் விழிகள் விரிந்தன. நிலவுப்பெண், தன்னை நோக்கி வருவதை உணர்ந்தான். அவள்,

அவனருகே வந்தே விட்டாள். வந்தவள், அவன் பக்கத்தில் மண்டியிட்டு அந்த வெள்ளி மணலில் உட்கார்ந்துகொண்டாள்.

“திங்களே! எங்கு வந்தாய்; என்ன வேண்டும்?” என்று கவிஞன் கேட்டான்.

“என் காதற் கவிஞனே! நானிருக்க, என் இதழில் தேனிருக்க - நீ இவளைக் காதலிப்பது முறைதானா?” எனச் சினுங்கினாள் நிலவுப்பெண்!

கவிஞன், தன் மடியில் துயில்கொள்ளும் மங்கையின் முகத்தைப் பார்த்தான். பிறகு நிலவுப்பெண்ணின் முகத்தையும் பார்த்தான்.

“நிலவே! நீ பேரழகுப் பெட்டகம்தான். நான் மறுக்கவில்லை. ஆனால், நான் உன்னைவிட இவளைக் காதலிப்பதற்குக் காரணம், உன் முகத்தில் உள்ள களங்கம் இவள் முகத்தில் இல்லை!

“அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து!”

என வள்ளுவர் எழுதியுள்ளதை மறந்தனையோ! அந்த மறுவும் இல்லாத முகம் படைத்த இந்த உயிரோவியத்தை நான் காதலிப்பது கண்டு நீ வருந்துவதில் பயனில்லை” என்று, கவிஞன் இனிய குரலில் பதிலளித்தான்.

திங்களழகியோ கை கூப்பி தொழுதவாறு கண்கலங்க, அவனைப் பார்த்துக் கெஞ்சிக் கேட்டாள்.

“என் அன்புக் கவிஞனே! அப்படியானால் உன்னைக் காதலிக்கும் உரிமை கிடையாதா எனக்கு?”

கவிஞன் மெல்ல நகைத்து விடையளித்தான்.

“இதோ என் மடியில் தலைவைத்து உறங்கும் இந்த அழகியின் முகத்தைப் போல ஒளிவீச உன்னால் முடியுமானால், நீயும் இவளைப்போல என் காதலுக்கு உரிமை கொண்டாடும் தகுதியைப் பெறுவாய்! இதைக்கூட வள்ளுவர் குறளாகத் தீட்டியிருப்பதை நீ அறியமாட்டாயா?

இதோ அதையும் சொல்கிறேன் கேள்:

“மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி”

களங்கமுள்ள முகம், கவிஞனின் காதலைப் பெற உரிமையில்லாத அளவுக்கு அவன் காதலியின் முகத்து ஒளியோடு போட்டியிட முடியாத முகம்!” இந்த விளக்கத்தைக் கேட்டதும் நிலவு மங்கை வெட்கத்தால் தலைகுனிந்து எழுந்தாள். அவனிடம் விடைபெற்றுக் கொள்ளாமலே விண்ணோக்கிப் பறந்து கருமுகில் திரைக்குள்ளே ஒளிந்துகொண்டு கண்ணீர் சிந்தினாள்.

மணாளன் மடிமீது தூங்கிய மங்கையின் முகத்தில் மழைத்துளிகள் விழுந்தன. எழுந்தாள்! எழுந்தாள்! இருவரும் கடற்கரை விடுத்து இல்லம் நோக்கி வேகமாக நடந்தார்கள்! அவர்கள் வீடுபோய்ச் சேரும் வரையில் விண்மங்கையாம் திங்கள், வெளியில் தலைகாட்டவில்லை.

அதிகாரம் - 112 - நலம்புனைந்துரைத்தல்; பாடல் - 1117, 1118

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்