பொருளடக்கம் 98 / 300
மோப்பக் குழையும்
அச்சுப் பக்கம் 218–219 · ஸ்கேன் 235–236 · அதிகாரம் 9 (விருந்தோம்பல்) — குறள் 90
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
அன்புமணி, இன்பமணி இருவரும் பிஞ்சுப்பருவத்து நண்பர்கள். அவர்கள் பிறந்த ஊரில் கல்வி பயிலப் பள்ளியொன்று இல்லாமையால், நாள் தோறும் நாலு கல் தொலைவு நடந்துசென்று, அயலூரில் படித்துத் திரும்புவது வாடிக்கை.
இன்பமணி, செல்வம் கொழிக்கும் தந்தைக்கு ஒரே மகன்! அன்புமணியும் வீட்டுக்கு ஒரே பிள்ளை; ஆனால், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன்!
ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் முடிவுற்றுத் தங்களூருக்குத் திரும்பும் போது வழியில் உள்ள சிற்றுண்டிச்சாலை சென்று முறுக்கோ, அப்பமோ தின்பது அந்த நண்பர்களின் வாடிக்கை! ஆனால், ஒரு நாளாவது அவர்கள் உண்டதற்குரிய பணத்தை இன்பமணி, கடைக்காரனுக்குத் தந்ததில்லை. எல்லா நாட்களுமே அன்புமணிதான் பண்டங்களுக்குரிய பணத்தை இன்பமணிக்கும் சேர்த்துக் கொடுத்து வந்தான். இன்பமணி அவ்வளவு செட்டானவன்.
அவர்தம் பள்ளிப்பருவமும் துள்ளி விளையாடிய நாட்களும் பறந்தோடின. வேலை வாய்ப்புத் தேடி அன்புமணி தலைநகரப் பக்கம் சென்று விட்டான். இன்பமணியோ தந்தை தேடிவைத்த சொத்தினைக் கொண்டு பெருந்தொழில் ஒன்றினை நடத்த நாட்டின் துறைமுகப்பட்டினத்திற்குக் குடியேறிவிட்டான்.
ஒருநாள், வெளிநாடு செல்லும் கப்பல்களில், தனது தொழிற்சாலையில் உற்பத்தியான பொருட்களையெல்லாம் ஏற்றி அனுப்பிவிட்டு, மகிழ்வுடன் இல்லம் திரும்பிக் கொண்டிருந்த இன்பமணி, திடீரெனத் தன் இளமைக்கால நண்பன் அன்புமணியைக்
கடைத் தெருவில் சந்தித்தான், “ஏ, அப்பா! எவ்வளவு காலத்திற்குப் பிறகு ஒருவரையொருவர் பார்க்கிறோம்” என்று கூறியவாறு, இருவரும் தழுவிக் கொண்டனர்.
அன்புமணி, தலைநகரில் காவல்துறை தலைமையகத்தில் அலுவலில் சேர்ந்து வாழ்க்கையை நடத்திக்கொண்டு கடமையாற்றுவதாகச் சொன்னான். இன்பமணி, துறைமுகப் பட்டினத்தில் தொடங்கிய தொழிலின் காரணமாகச் செல்வச் சீமானாக விளங்குவதாக விவரித்தான். இருவரும் கடைத்தெருவின் ஓரப்பாதையில் நின்றுகொண்டே ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
ஒரு முக்கிய அலுவலின் நிமித்தம் துறைமுகப்பட்டினத்திற்கு வந்ததாகவும் அலுவல் முடிந்து திரும்புவதற்குமுன்பு இன்பமணியின் வீட்டுக்கு வருவதாகவும் கூறி, இல்லத்து முகவரியும் பெற்றுக்கொண்டு, அன்புமணி தன் பழைய நண்பனைப் பிரிந்து சென்றான். சிரிப்புத் தழைத்த முகத்துடன் அன்புமணிக்கு விடைகொடுத்துவிட்டு, இன்பமணி இல்லம் திரும்பினான்.
அன்றைய தொழிற்சாலைப் பணிகள் பற்றிய விசாரணைகளையெல்லாம் முடித்துவிட்டு, இனிய குரலில் இல்லத்தரசியை அழைத்து உணவு பரிமாறச் சொன்னான், இன்பமணி!
அவளும் இலைபோட்டுப் பரிமாறி, கணவனை உணவருந்த அழைத்தாள்.
அப்போது “இன்பமணி!” என்று கூப்பிட்டுக்கொண்டே அன்புமணி உள்ளே நுழைந்தான். “வாப்பா வா!” என்றான் இன்பமணி, சற்று இழுத்தாற் போன்ற குரலில்!
“சரியான நேரத்தில்தான் வந்திருக்கிறேன், எனக்கும் ஓர் இலை போடச் சொல்லு!” என்று புன்னகை சிந்தப் புகன்றான் அன்புமணி!
அந்தச் சொற்கள் அன்புமணியின் நாவிலிருந்து வெளிப்பட்டவுடனே, இன்பமணியின் முகம் அவனையுமறியாமல் மாறியது! விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கும் பழக்கத்தையே அறியாத அவனுடைய முகத்தில் அவனாலேயே தடுத்துக்கொள்ள முடியாத ஒரு வேறுபாடு தோன்றியதைக் கண்ட அன்புமணியின் உள்ளம், தனலில் விழுந்த தளிர் என வாடிவிட்டது. எப்படியும், உடனடியாக அங்கிருந்து திரும்பிவிட வேண்டுமென்று முடிவு செய்துகொண்டான்.
“அடேடே! மறந்துவிட்டேன். வருகிற வழியில் நான் ஒரு நண்பரைப் பார்ப்பதாகச் சொல்லியிருந்தேன். அவர் வேறு எங்கேயும் போய் விடுவதற்குள் பார்த்து விட்டு வந்துவிடுகிறேன். எனக்காகக் காத்திராதே! நீ உணவருந்து!” என்று சொல்லிக் கொண்டே, பதிலுக்குக் காத்திராமல் அன்புமணி அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.
இன்பமணி, தன் துணைவியின் முகத்தைப் பார்த்தான். அவளுக்கு, விருந்தோம்பல் பிடிக்காத தன் கணவனைப்பற்றி நன்கு தெரியும். அவள், கணவனைப் பார்த்து அடக்க உணர்வோடும் அதே நேரத்தில் அவனுக்கு அறிவில் படுமாறும் ஒரு குறளைச் சொன்னாள். அந்தக் குறள் இதோ!
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.”
அதாவது, அனிச்ச மலரை மோந்தால் உடனே வாடிவிடும்! அதைப் போலவே முக மலர்ச்சியின்றி விருந்தினரை வரவேற்றாலும் அவர்கள் வாடிவிடுவார்கள் என்று பொருள்!
அதிகாரம் - 9 - விருந்தோம்பல்; பாடல் - 90
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்