பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 97 / 300

கண்ணாம் கழும்வது

அச்சுப் பக்கம் 216217 · ஸ்கேன் 233234 · அதிகாரம் 118 (கண்விதுப்பழிதல்) — குறள் 1171

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

விழாக் காணச் சென்றிருந்தேன். வெள்ளம்போல் கூடியிருந்த மக்களிடையே என் தாயின் துணையுடன் விழா நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தேன். வண்ணவண்ணத் துணிகளைத் தோளில் சுமந்து விற்பனை செய்பவர்கள், பெண்கள் நிறைந்திருந்த பகுதிகளையே சுற்றிச்சுற்றி வந்தனர். பச்சை வண்ணச் சேலையொன்றின்மீது என்

பார்வை பட்டதை, அன்னை புரிந்து கொண்டாள். அதை விலை பேசி வாங்கி என் கையில் கொடுத்தாள்.

புலிகளைப்போல், பூதங்களைப்போல் வேடமிட்டோர் நடத்திய ஆட்டங்கள் - பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்துக் கூவியவாறு கரும்பு விற்கும் சிறுவர்களின் பாட்டுக்கள் - கொட்டு முழக்குகள் - விழாக்காண வந்திருந்தோர் அனைவரையும் இன்பத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தன. வானவில்லை வடிவில் சிறியதாகி ஓராயிரத்தை அடுக்கி வைத்திருந்ததுபோல் ஒரு வளையல் கடை! வளையல் போட்டுக் கொள்கிறாயா என்று அன்னை ஆசையுடன் கேட்டாள். “வேண்டாம் அம்மா” என்று கூறிவிட்டேன். அதுவரையில் வளையல்கள் மீது மொய்த்திருந்த என் விழிகள் திடீரென வளையல் கடைக்காரன் மீது திரும்பின.

வளையல் வேண்டாமெனத் தாயிடம் சொல்லிவிட்ட நான், அந்தக் கடையின் முகப்பைவிட்டு நகரவில்லை. ஆம், அவன் அழகு என்னை நகரவிடவில்லை. அந்த வளையல்கார வாலிபன், குழந்தைப் பருவத்தில் என்னோடு சேர்ந்து வீதிகளில் விளையாடிய ஊர்ச் சிறுவர்களில் ஒருவன். பிறகு அவன் குடும்பம் நகர்ப்புறத்திற்குச் சென்றுவிட்டது. இப்போது அவன் சிலப்பதிகாரத்துக் கோவலன் போல் எழிற்சிலையென என் எதிரே தோன்றிவிட்டானே! என் செய்வது, ஒருவேளை அவனுக்கு ஒரு கண்ணகி உண்டோ என்னவோ; அதைப் பற்றியெல்லாம் ஆராயாமல் நான் மாதவியாக மயங்கி நின்றேன்.

அவனும் என்னை விழிகளால் தழுவினான். என் உடற்கட்டின் ஒவ்வொரு பகுதியையும் அவன் விழிகள் அளந்து கொண்டிருந்தன. என் விழிகளோ அவனை விடுத்து விழாக்காண மறுத்துவிட்டன. தாய் என் தோளை அழுத்தி, என்னை அங்கிருந்து அகற்றி வேறுபக்கம் இழுத்துச் சென்றாள். எத்தனையோ வகை வகையான விழா நிகழ்ச்சிகள்! எதிலும் இதயம் ஈடுபடவில்லை. அந்த வளையல் கடையையே என் நெஞ்சு வட்டமிட்டுக் கொண்டிருந்தது. விழா முடிந்து வீடு திரும்பியாகிவிட்டது. படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறேன், வயிற்றுக்கு ஒரு பருக்கையும் தேவையில்லையென்று கூறிவிட்டு!

வளையல்கடை வடிவழகன், என் மனத்தில் ஓவியமாக ஆகிவிட்டான். என்னையறியாமல் என் கண்கள் அழுகின்றன.

“இது என்ன வேடிக்கை! இந்தப் பொல்லாத கண்கள் அவனைக் காட்டிய காரணத்தால்தான், தீராத காதல் நோய் எனக்கு ஏற்பட்டுள்ளது! அப்படியொரு நோய்க்கு என்னை ஆளாக்கிவிட்ட இந்தக் கண்கள் இப்போது எதற்காக அழுகின்றன?”

இப்படி விழிகளை நோக்கி வினாக்கணை தொடுக்கின்ற ஓர் இளமங்கையின் ஏக்கப் பெருமூச்சே இந்த இன்பம் பொங்கும் குறளோவியம்.

“கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண்டது.”

அதிகாரம் - 118 - கண்விதுப்பழிதல்; பாடல் - 1171

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்