பொருளடக்கம் 96 / 300
பொருட்பெண்டிர் பொய்ம்மை
அச்சுப் பக்கம் 214–215 · ஸ்கேன் 231–232 · அதிகாரம் 92 (வரைவின் மகளிர்) — குறள் 913
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
குன்றின்மேல் அசைந்தாடும் முகில்புகை போன்ற மேலாடையை, வேண்டுமென்றே நழுவ விட்டுக் கொண்டு, இடைக்குமேல் இருக்கும் தாமரைமொக்குக்கு வேண்டுமா - அல்லது மலர்ந்த செந்தாமரை முகத்தை முத்தங்களால் ஈரப்படுத்த
வேண்டுமா - எதற்கும் தயார் - என்று காமக்களத்தில் அறைகூவல் விடுகின்ற அறைப்பாவை அவள். ஆம்; பள்ளியறைப் பாவை! இன்ப வெறிக் கூத்தாடும் ஆடவர்க்கு ஆடவரங்கம்தான் இந்த உடல் என்று ‘ஏலம்’ போடும் ஏந்திழையாள். சந்தனத்தைச் சேராக்கி மிதித்து, அதில் அத்தரும் புனுகும் சேர்த்துக் கட்டப்பட்ட அழகு மணிமண்டபம்தான் அந்த மங்கை. அவள் அங்கமனைத்தும் காமனின் கேளிக்கைக் கூடம். கண்ணல் மொழிக்காரியின் மின்னலிடையைக் கரம் நீட்டிப் பிடிக்க முயலுகின்றான் கட்டழகுக் காளை. காதல் சுவையைக் கடையிலே வாங்க வந்த ஆளைக் கடைக்கண்ணால் மாய்த்தவாறு, “என் புன்னகையைக் காண்பதற்கே பொன் குவியல் தரவேண்டும். கண்ணா; முன்னழகு, பின்னழகு, என் அழகு முழுவதுமே சுவைப்பதற்கு மன்பதையையே தந்தாலும் ஈடாகுமா மன்னா?” எனக் கேட்டுப் பொருள் முழுவதும் பெற்ற பின்னர்; இன்ப அருள் காட்ட இழுத்துப் போட்டாள் கட்டில் மீது! ஆடை எதற்கென்று அவன் தாடையிலே இதழ் பதித்தவாறு ஆரணங்கு கேட்டதோடு விடவில்லை; செயல்பட்டாள்; தழுவினாள்; சிறிது நழுவினாள்; தவித்திட்டான்; தனித்திட்டான் அவன் தனக்குள். ‘உயிரே!’ என்றாள். அந்த அழைப்பில் உயிர்தான் இல்லை. ‘கண்ணே!’ என்றாள்; அந்தச் சொல்லில் ஒளிதான் இல்லை. ‘அன்பே’ என்றாள்; அந்த மொழியில் மெய்தான் இல்லை! மெய்யிரண்டும் விலங்குகளின் உணர்ச்சி விளையாட்டில் திளைத்திடும் செயலுக்குப் பெயரோ இன்பம்! இல்லை இல்லை! இல்லவே இல்லை!!
அலைபோல நெளிகின்ற உடலை, இரவு விலைபோக வளர்ப்பவள் அவள். அவள் ஆயிரத்தைச் சொல்லிக் கொஞ்சினாலும் குலவினாலும் கூடல் இன்பக்கலை வழங்கும் கூடாரமாய் விளங்கினாலும் அதனை உண்மை இன்ப உணர்வாக ஒப்புதற்கு வள்ளுவர் ஒருபோதும் இணங்கவில்லை. இருட்டில் ஒரு பிணத்தை அணைத்துக் கிடப்பதற்கும் வரைவின் மகளிராம் விலைமாதருடன் கூடுதற்கும் வேறுபாடில்லை என இழிந்துரைக்கிறார்.
“பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ யற்று.”
அதிகாரம் - 92 - வரைவின் மகளிர்; பாடல் - 913
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்