பொருளடக்கம் 95 / 300
நினைத்தொன்று சொல்லாயோ
அச்சுப் பக்கம் 212–213 · ஸ்கேன் 229–230 · அதிகாரம் 125 (நெஞ்சொடு கிளத்தல்) — குறள் 1241
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
மருத்துவத் துறையில் பட்டம் பெற்றவள் மரகதம். அவள் அலுவல் பார்க்கும் மருத்துவமனையில் நோயாளிகள் அனைவருமே, அவள் கையால் மருந்து வாங்கிக் குடித்தால் நோய் தீரும் என்று கருதுவார்கள்.
கொஞ்சு வாயுடையாள், குறையொன்றிலா அழகுடையாள், அவள் மருத்துவ மனைக்குள் நுழைந்துவிட்டாலே ஒரு புதிய பரபரப்பு ஏற்படுவது வாடிக்கை. படுக்கையில் இருக்கும் ஒவ்வொரு நோயாளியையும் அருகே சென்று கவனிப்பாள். ஒரு நோயாளியைத் தலைவலி படாதபாடு படுத்திக்கொண்டிருக்கும்; அந்த வலியை உடனடியாக நிறுத்த மருந்தொன்று கொடுக்கச் சொல்வாள்.
இன்னொருவன் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பான். காய்ச்சல் எவ்வளவு என அளக்கும் கருவிகொண்டு ஆராய்ந்து, அதனை மெல்ல மெல்லக் குறைத்து அவன் நலிவு தீர்ப்பது எப்படி என்பதற்கான குறிப்புக்களையும், கொடுக்கவேண்டிய மருந்துகளையும் உதவியாளர்களிடம் எழுதிக் கொடுப்பாள்.
மின்னல் வேகத்தில் வயிற்றின் அடிப்புறத்தில் தாக்கிய வலியால் துடித்துப் போன ஒரு பெண், “அம்மா! என்னால் தாங்க முடியவில்லை. சாவதற்கு ஏதாவது மருந்து இருந்தால் கொடுங்கள்” என்று கதறி அழுவாள். அப்போதும் மரகதம் புன்னகை மலர அவளைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறி - உடனடியாக அவளுக்கு அடிவயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்து குணப்படுத்துவாள்.
“என் பெண், இருந்தாற்போல் இருந்து ஏதேதோ பிதற்றுகிறாள். பேய்ச் சேட்டை போல் தெரிகிறது. உங்களிடம் ஏதாவது மருந்து இருக்கிறதா அம்மா? மந்திரவாதியோ
வெளியூர் போயிருக்கிறார்!” என்று ஒரு வயதான தாயார், தன் மகளை அழைத்துக் கொண்டு மரகதத்திடம் வருவாள். மரகதம், அந்த முதியவள் அறியாமையை எண்ணி வருந்துவாள். இப்படி ஒரு மூடநம்பிக்கை தாய்க் குலத்தைப் பிடித்து ஆட்டுகிறதே என்று கவலைப்படுவாள்.
“பேயுமில்லை - பிசாசுமில்லை! ஏதோ அதிர்ச்சியில் மூளை கலங்கிப் போயிருக்கிறது. நாளைக்கு நாட்டின் மருத்துவமனையில் என் கண்காணிப்பிலேயே இருக்கட்டும். அவருக்கு ஓய்வும் அமைதியும் தூக்கமும் தேவை! அத்துடன் மருந்துகளும் தர வேண்டும்” என விளக்கமளித்து, அந்தப் பெண்ணின் பிதற்றல் பிணியைப் போக்கிடுவாள்.
இப்படிக் காலை முதல் இரவு வரையில் விதவிதமான நோயாளிகள்! எந்த நோயாளி வந்தாலும் அலுத்துக் கொள்ளாமல், அந்த நோயைப் போக்கிவிடலாம் என்ற துணிவுடனும் நம்பிக்கையுடனும் அவள் செயல்பட்ட காரணத்தால், அவளது திறமை, ஊரெங்கும் புகழ்ப் பெற்றது. ஆனால் ஊரார் நோயை எல்லாம் தீர்க்கக்கூடிய முறைகளையும் மருந்துகளையும் தெரிந்து வைத்திருந்த மரகதத்திற்கு, தனக்குற்ற நோயைத் தீர்த்துக்கொள்ளத்தான் மருந்து தெரியவில்லை. அந்த நோய், மாபெரும் மருத்துவ மேதைகள் கண்டு பிடித்த மாத்திரைகளால் தீர்க்கக்கூடியதல்ல!
அந்த அழகிய மரகதத்திற்கு ஓர் அழகிய காதலன் உண்டு! அவனும் மருத்துவத்துறையில் வல்லவன்தான்! அவன், மருத்துவத்துறை அறிவைப் பெருக்கிக்கொள்ள அயல் நாடு சென்று ஆறு கிழமைகள் ஓடிவிட்டன. இன்னும் மூன்று திங்கள் கழிந்தே அவன் தாயகம் திரும்புவான்.
காலை முதல் நூற்றுக்கணக்கானவர்களின் உடல் நோய் தீர்க்கும் மரகதத்திற்கு, இரவு நேரத்தில் அவளுக்குத் தொல்லைகொடுக்கும் மனநோயைத் தீர்க்க மருந்து கிடைக்கவில்லை!
மருந்து, ஆயிரக்கணக்கான கல் தொலைவில் அல்லவா இருக்கிறது! அவனைப் பிரிந்து தன்னந்தனியாகப் படுக்கையில் புரளும் மரகதம், அவளருகே கிடக்கும் நீண்ட தலையணையை அழுத்திப் பிடித்து அணைத்தவாறு, அவளாகவே தனக்குத் தானே பேசிக்கொள்கிறாள்.
“நெஞ்சே! காதலால் உருவாகி என்னைத் தொல்லைப்படுத்தும் இந்தத் துன்ப நோயைத் தீர்க்கக்கூடிய மருந்தொன்றை, நீயாவது நினைத்துப் பார்த்துச் சொல்ல மாட்டாயா?”
இவ்வாறு ஏக்கத்தோடு தன் நெஞ்சையே கேட்கிறாள், மருந்தொன்று கண்டு பிடித்துக்கொடு என்று!
எல்லா நோய்க்கும் மருந்து அளிக்கும் அவளுக்குத் தனக்குற்ற காதல் நோய்க்கு, காதலன் வருகையைத்தவிர வேறு மருந்து இல்லை என்று தெரியும்; எனினும், நெஞ்சிடம் கெஞ்சுகிறாள்! அதை ஓவியமாக்கித்தருவதுதான் இந்தக் குறள்:
“நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து.”
அதிகாரம் - 125 - நெஞ்சொடு கிளத்தல்; பாடல் - 1241
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்