பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 94 / 300

அ. அகழ்வாரைத் தாங்கும் / ஆ. அறன்நோக்கி ஆற்றும்கொல்

அச்சுப் பக்கம் 210211 · ஸ்கேன் 227228 · அதிகாரம் 16 (பொறையுடைமை) — குறள் 151; அதிகாரம் 19 (புறங்கூறாமை) — குறள் 189

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

ஒருநாள் மாலைப்பொழுது! ஏரிக்கரை ஓரமாக வள்ளுவர் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். ஆழ்ந்த சிந்தனை. சற்று நிற்பார். மீண்டும் நடப்பார். அவரைக் கடந்து இருவர் ஏதோ வாயாடிக்கொண்டு போயினர்.

“யாரப்பா இந்த ஆள்? எப்போதும் பார்த்தாலும் ஏரிக்கரை, குளக்கரை, மலைப்பாறை என்று அலைந்து கொண்டேயிருக்கிறான். வானத்தைப் பார்க்கிறான். பூமியைப் பார்க்கிறான். நெற்றியைச் சுருக்குகிறான். யார் இது?”

இப்படி ஒருவன் கேட்க, மற்றவன் என்னமாக விளக்கமளித்தான்.

“வள்ளுவனாம்! அதுவும் சாதாரண வள்ளுவன் இல்லையாம்! திருவள்ளுவனாம்! சிந்திக்கிறானாம்! அறநூல் எழுதுகிறானாம் கிறுக்கன்! எத்தனையோ பித்தர்களில் இவன் ஒரு பித்தன்!”

சிந்தனை கலைந்து வள்ளுவப் பெரியாருக்கு! செவியில் விழுந்தது அவர்கள் வாரியிறைத்த வசைமொழி! இழிமொழி! அவர்களைத் திரும்பிப் பார்த்தார். அவர்கள் வள்ளுவரை நோக்கி எகடியம் செய்துகொண்டே போய்விட்டனர். ஏரியோரத்தில் சிலர் கழனி வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். நிலத்தை வெட்டிக் கொண்டிருந்தனர் ஒரு பகுதியில்! கழனியில் உழுது கொண்டிருந்தனர் ஒரு பகுதியில்! கிணறு தோண்டிக் கொண்டிருந்தனர் மற்றொரு பகுதியில்! அனைத்தையும் பார்த்த வள்ளுவருக்கு ஓர் அழகான உவமைக் குறள் கிடைத்தது!

“தன்னை வெட்டியும் தோண்டியும் புண்படுத்துகிறவரையும் நிலம் பொறுத்துக்கொண்டு அவர்களையும் தன்மீதே தாங்கி நிற்கிறதல்லவா? அதைப் போலத்தான் நம்மை இகழ்ந்து பேசுகிறவர்களையும் பொறுத்துக் கொள்வது நம் தலையாய பண்பாகும்.” என்று தனக்குத்தானே வள்ளுவர் சொல்லிக் கொண்டார். குறள் பிறந்துவிட்டது.

“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.”

நெஞ்சில் இந்தக் குறளை எழுதிக்கொண்ட வள்ளுவர், நிலமகளைப் பார்த்து ஒரு கேள்விக் கணையைத் தொடுத்தார்.

“நிலமகளே, உன்னைத் துன்புறுத்துவோரை நீ பொறுத்துத் தாங்கிக் கொள்கிறாய்! உன்னைப் பார்த்து நானும், என்னை என் எதிரில் இகழ்ந்து பேசியோரைப் பொறுத்துக் கொண்டேன். ஆனால் எனக்கு ஓர் ஐயப்பாடு! அதனை நிலமகளே, நீ எனக்கு விளக்குவாயாக! நேரில் பழிச்சொல் கூறுவோர் ஒருபுறமிருக்க, ஒருவர் நேரில் இல்லாதபோது அவர்மீது பழிச்சொல் கூறுவதைச் சிலர் தங்கள் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்களே, அத்தகையோர் உடல் பாரத்தையும் சுமப்பதுதான் உனக்கு அறம் என்று நீ கருதிக் கொண்டிருக்கிறாயா?”

வள்ளுவர் கேட்ட இந்தக் கேள்வியும் ஒரு குறளாக வடிவெடுத்துவிடுகிறது.

“அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.”

அதிகாரம் - 16 - பொறையுடைமை; பாடல் - 151 அதிகாரம் - 19 - புறங்கூறாமை; பாடல் - 189

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்