பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 93 / 300

அ. நினைப்பவர் போன்று / ஆ. தும்முச் செறுப்ப / இ. மறைப்பேன்மன் யான்

அச்சுப் பக்கம் 208209 · ஸ்கேன் 225226 · அதிகாரம் 121 (நினைந்தவர் புலம்பல்) — குறள் 1203; அதிகாரம் 132 (புலவி நுணுக்கம்) — குறள் 1318; அதிகாரம் 126 (நிறையழிதல்) — குறள் 1253

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“தும்மல்” பற்றி வள்ளுவர் மூன்று நான்கு இடங்களில் குறிப்பிடுகிறார், குறளின் மூன்றாவது பாலில்!

அன்பால் பிணைக்கப்பட்ட நெருங்கிய உறவினர் நினைக்கிற காரணத்தால், அவ்வாறு நினைக்கப்பட்டவருக்குத் தும்மல் வரும் என்று கூறுவது, அக்காலத்தில் நம்பிக்கையாகக் கொள்ளப்பட்டிருந்தது. இன்றும் அப்படி நம்பிக்கையுடையோர் இருக்கின்றனர். அந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து வள்ளுவர் தீட்டியுள்ள அற்புதக் குறட்பாக்களுக்கு ஈடு இணைய்தான் உண்டோ?

கட்டிலில் தழுவிய நிலையில் இருந்த காதலன் தும்முகிறான். தும்மல் ஒலி கேட்டதும் காதலி, “நூறாண்டு வாழ்க!” என வாழ்த்துகிறாள். வாழ்த்திய பிறகு, அவளுக்குத் திடீரெனச் சந்தேகம் மின்னலிடுகிறது! “யார் உம்மை இந்நேரத்தில் நினைத்ததால் தும்மினீர்? யார் அவள்?” என்று கேட்டு, தன் வாழ்த்தையும் விட்டுவிட்டு அழத்தொடங்கினாள் அந்தக் காதலியென்று, ஒரு காட்சியை அமைத்துக் காட்டுகிற வள்ளுவர், மேலும் சில சுவையான காட்சிகளையும் நம்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.

அழகியொருத்தி, தன் ஆளனைப் பிரிந்த வேதனையில் நிலா முற்றத்தில் அமர்ந்திருக்கிறாள். ‘அவருக்குள்ள ஓயாத பணிகளுக்கிடையே அவர் தன்னை நினைப்பாரா’ என்று அவள் ஏங்குகிறாள்! அந்த ஏக்கம் வினாக்குறியாக விரிவடைகிறது! அப்போது அவளுக்குத் தும்மல் வருவது போன்ற ஓர் அறிகுறி! ஆம்;

அவள் தும்மிடப் போகிறாள். ஆனால், வந்த தும்மல் அப்படியே அடங்கிவிட்டது. அவளால் அந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

‘அய்யய்யோ! தும்மல் வருவதுபோல் அறிகுறி காட்டி, வராமல் அடங்கிப் போய்விட்டதே! இதற்கு என்ன காரணம்? ஒருவேளை என் காதலர் என்னை நினைப்பவர்போல இருந்து நினைக்காமல் விட்டுவிட்டாரோ?’

இப்படி எண்ணிக் கவல்கிறாள் அந்த எழிலரசி!

“நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்.”

சினைத்தல் என்றால், அரும்புதல் எனப் பொருள்! தும்மல், அரும்பிய நிலையிலேயே கெட்டுவிட்டதால், காதலன் நினைத்த நிலையிலேயே அந்த நினைப்பை மறந்துவிட்டதால்!

இன்னொரு காதற்கூடம்! அங்கே காதலனுக்கு ஓர் அச்சம்! என்ன அது? அவனுக்குத் தும்மல் வருகிறது. அதனை எப்படியாவது அடக்கிக் கொள்ள வேண்டுமென்று முயற்சி செய்கிறான். தும்மிவிட்டால், காதலி உடனே ஐயுற்றுக் கேட்பாள், யார் உம்மை நினைத்தது? என்று. அதன் தொடர்பாக ஊடல் ஏற்படக்கூடும் - எதற்காக இந்த வம்பு என்று அவன் தும்மலை அடக்கிக் கொள்ளத் தவிக்கிறான். அதைப் பார்த்துப் புரிந்து கொள்கிறாள் அந்தப் பாவை! “ஏன் தும்மலை அடக்குகிறீர்? உம்மை ஒருத்தி நினைப்பதை எனக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ?” எனக் கேட்டு அழத் தொடங்கி விடுகிறாள்.

“தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல் எம்மை மறைத்திரோ என்று.”

அந்தப் பச்சைக் கிளியின் சந்தேகத்தைப் போக்க அவன் என்ன பாடுபட்டிருப்பானோ?

இன்னொரு இளம்புறா எப்படி வருந்துகிறது என்பதற்கு, தும்மலை உவமையாகக் கொண்டு, இதோ மற்றொரு இனிமைக் குறள்:

“நான் என்னடி செய்வேன் தோழி! அவர்பால் எனக்கேற்பட்டுள்ள காம உணர்வை எனக்குள்ளாகவே மறைத்துக் கொள்வதற்கு எப்படியெல்லாமோ முயலுகிறேன். ஆனால் அது என் கருத்தின்படி மறையாமல், தும்மலைப் போல், தானே வெளிப்பட்டு விடுகிறது.”

காம உணர்வு மறைக்கமுடியாத ஒன்று என்பதற்கு ‘தும்மல்’ உவமையை எத்துணைப் பொருத்தமாகத் தீட்டிக் காட்டுகிறார் - அந்தத் தேன் தமிழ்ப் புலவர் ஏறு!

“மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்.”

அதிகாரம் - 121 - நினைந்தவர் புலம்பல்; பாடல் - 1203 அதிகாரம் - 132 - புலவி நுணுக்கம்; பாடல் - 1318 அதிகாரம் - 126 - நிறையழிதல்; பாடல் - 1253

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்