பொருளடக்கம் 92 / 300
அ. மையல் ஒருவன் / ஆ. பெரிதினிது பேதையார்
அச்சுப் பக்கம் 206–207 · ஸ்கேன் 223–224 · அதிகாரம் 84 (பேதைமை) — குறள் 838, 839
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
‘பேதைமை’ என்ற சொல்லையோ, அல்லது ‘பேதை’ என்ற சொல்லையோ நாம் அடிக்கடிப் பயன்படுத்துகிறோம். சில சொற்களைப் பயன்படுத்தும்போது, அதற்குரிய ஒழுங்கான பொருள் என்ன என்பதைப்பற்றி நாம் ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை. வழக்கத்தில் நீண்ட காலமாக வந்துவிட்ட ஒரு சொல் என்ற அளவில், அதன் பொருளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் நமக்கு ஏற்படுவதில்லை. ஒருவன்மீது சினம் கொள்கிறபோது, “அவன் கிடக்கிறான் பேதை!” என்று கூறுகிறோம். அந்தப் பேதை, பேதைமை என்ற சொற்களுக்கு வள்ளுவர் வடித்தளிக்கும் குறட்பாக்களின் வாயிலாக எத்துணை தெளிந்த பொருள் கிடைக்கிறது!
தனக்குத் தீமையானவைகளைக் கைக்கொண்டு, நன்மையானவைகளைக் கைவிடுவதற்குப் பெயர்தான் ‘பேதைமை’ எனச் சுட்டிக் காட்டுகிறார் அவர். சுருங்கச் சொல்ல வேண்டுமானால், நல்லது கெட்டது தெரியாத தன்மை! அதனால் நல்ல மனம் படைத்தவன் என்றும் கூறிவிட முடியாது. ஒழுக்கத்திற்குப் புறம்பானவற்றைச் செய்வதிலேயே தனி விருப்பமுடையவராகப் பேதைகள் இருப்பார்கள் என்பதும் வள்ளுவர் கருத்தாகும். இதோ பேதையைப்பற்றி ஓர் அழகான உவமையை நம் முன் வைக்கிறார் பொய்யாமொழிப் புலவர்.
தெருவில் ஒருவன் பித்துப் பிடித்து உளறிக்கொண்டிருக்கிறான். சிறுவர்கள், கூட்டம் கூட்டமாக அவனைச் சூழ்ந்து கொண்டு கேலிமொழி பேசுகிறார்கள். அவன், “நான்தான் இந்த ஊருக்கே மன்னன்! எங்கே என் செங்கோல்? கூப்பிடு மந்திரியே! கோட்டைச் சுவருக்கு, இன்னும் ஏன் சுண்ணாம்பு அடிக்கவில்லை? தளபதி என்ன செய்கிறார்? போர்வாளுக்குச் சாணை பிடித்துக் கொண்டிருக்கிறாரா? எல்லோரையும்
பிடித்துத் தொழுவத்தில் கட்டிப் பருத்திக் கொட்டைப் பிண்ணாக்கு போடுங்கள்! எது எனக்கு அரண்மனை? நான் தான் ஆகாயத்தில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேனே!” என்று உளறியவண்ணம் கூத்தாடுகிறான். அப்போது ஒரு குறும்புக்கார வாலிபன் கையில் ஒரு குவளையுடன் அவனை நெருங்கி, “மன்னாதி மன்னரே! நீங்கள் மிகவும் களைத்துப் போயிருக்கிறீர்கள். கொஞ்சம் பால் சாப்பிடுங்கள்” என்று பணிவுடன் கேட்கிறான். பைத்தியக்காரன் அந்தக் குவளையை வாங்கி அதில் உள்ளதை மளமளவென்று குடித்து முடிக்கிறான். வாலிபன் சொன்னது என்னவோ பால்தான்! ஆனால் குவளையில் இருந்தது மரப்பால்! ஏற்கனவே பைத்தியம் - அத்துடன் கள்ளும் குடித்துவிட்டால் எப்படியிருக்கும்? ஏற்கனவே ஏறியுள்ள பித்தமுடன் இந்தப் பித்தமும் துணை சேர்ந்து கொள்கிறது. அந்த மனிதனை யாருடன் ஒப்பிடுகிறார் வள்ளுவர்?
பேதை ஒருவனுக்கு அவன் கையில் ஒரு பொருள் கிடைக்கிறதாம். அந்தப் பொருளைப் பெற்றதும் அவன் நிலைமை எப்படி ஆகிவிடுகிறது தெரியுமா? பித்துப்பிடித்த ஒருவன், கள்ளையும் குடித்து விட்டதுபோல் ஆகிவிடுகிறதாம்!
இந்த விளக்கத்திற்கு இதோ ஒரு குறள்:
“மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின்.”
இவ்வளவு இழிவுகொண்ட பேதை ஒருவனிடம் கொள்கிற நட்பு, மிகவும் இனிமையானது என்று சிறப்பிக்கிறார் குறளார்.
விந்தையாக இருக்கிறதல்லவா? நல்லது கெட்டது தெரியாதவன், ஒழுக்க நெறியில் செல்லாதவன், ஒரு பொருள் கையில் கிடைத்தால் - பித்தன் கள்ளுக்குடித்ததுபோல ஆகிவிடக்கூடியவன்; அவனுடைய நட்பு மிகவும் இனிமையுடையது என்கிறாரே? இது என்ன வேடிக்கை!
“பெரிதினிது பேதையார் கேண்மை....”- ஆமாம்! பேதைகளின் நட்பு பெரிதும் இனிமையுடையதாம்.
ஏன்? எப்படி?
“.....பிரிவின்கண் பீழை தருவதொன்று இல்.”
அந்த நட்பைப் பிரியும்போது, துன்பம் எதுவும் ஏற்படுவதில்லை. பேதையின் நட்பு, பட்டுப் போய்விட்டால் - வேதனைக்கு ஆளாவதில்லை நெஞ்சம்! எனவே பேதையின் நட்பு இனிமையானது! அறிவாளர்கள், ஆற்றலாளர்கள், நல்லவர்கள், வல்லவர்களின் நட்புக்குக் கேடு ஏற்பட்டால் அது உள்ளத்தை வருத்தும். பேதைகளின் நட்பு ஒழிந்தால் உள்ளத்திற்குக் கலக்கமில்லை. ஆகையால் பேதையின் நட்புச் சிறந்தது.
எவ்வளவு மகத்தான உண்மையை, மறைமுகமான நகைச்சுவை ஓவியமாக இந்தக் குறள் வரைந்து காட்டுகிறது என்பதை எண்ணிட எண்ணிட இதயம் மகிழ்ச்சியால் விம்முகிறது அல்லவா!
“பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன்று இல்.”
அதிகாரம் - 84 - பேதைமை; பாடல்கள் - 838, 839
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்