பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 91 / 300

செறிதொடி செய்திறந்த

அச்சுப் பக்கம் 204205 · ஸ்கேன் 221222 · அதிகாரம் 128 (குறிப்பறிவுறுத்தல்) — குறள் 1275

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour pastoral illustration of a woman carrying a basket in the foreground while an ayar youth with a staff stands behind.

பச்சைப் பட்டாடை உடுத்தி அழகு மிளிர விளங்கினாள் நிலமடந்தை! பசுக்களும், கன்றுகளும், காளைகளும் வயிறுபுடைக்கப் புல்லைத் தின்றும்கூட நிலமங்கையின் அழகுவளம் குறையவில்லை.

இன்றைக்குப் போதும் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்பதைப் போல, மாடுகளும் கன்றுகளும் அந்தப் பரந்த மேய்ச்சல் நிலத்தில் செழித்து வளர்ந்து கிடக்கிற புல்லை அலட்சியப்படுத்திவிட்டுத் தலைநிமிர்ந்து நின்றன.

அந்த வீட்டு விலங்குகளை மேய்ச்சல் காட்டுக்கு ஓட்டிவந்த ஆயர்குடி மகன், திரும்ப ஊர்நோக்கி நடக்கிச்செல்ல ஆயத்தமானான். கூரான கொம்புகளைக் கொண்ட காளைகள், துள்ளியாடும் கன்றுகள் அனைத்துமே அவன் குரல் ஒலிக்குக் கட்டுப்பட்டு ஊர்நோக்கி அணிவகுத்தன.

இடுப்பில் மடித்துக்கட்டிய வேட்டி! தலையில் முண்டாசாக ஒரு துண்டு! கையில் ஒரு நீளமான கம்பு! கழுத்தில் புலி நகம் கோக்கப்பட்ட ஒரு சங்கிலி! அரும்பு மீசையுடன் அமைதியும் வீரமும் ஒருசேரக் கலந்த ஒளி படைத்த முகம்!

அந்த ஆயர்குடி வாலிபனுக்குப் பெயர் அழகன். அழகனுக்கு ஒரு அழகுவல்லியும் உண்டு. முழுமையாக மலராத நிலையில் இருந்த காதலுக்கு, இருவரும் தங்கள் நெஞ்சைப் பறிகொடுத்திருந்தனர்.

மாடுகளை மேய்ச்சல் முடிந்ததும் ஓட்டிச்செல்லும் வேளையில், நாள்தோறும் அழகுவல்லியும் அவளின் தாயும் அந்த வழியேதான் வருவார்கள். பால், தயிர், வெண்ணெய் விற்பனைக்காகப் பக்கத்துச் சிற்றூர்களுக்குச் சென்றுவிட்டுப் பொழுது சாய்வதற்குள் வீடு திரும்புவது அவர்களுக்கு வாடிக்கை!

காலைமுதல் கடும் வெயிலில் மாடுமேய்க்கும் அழகனுக்கு, மாலை மயங்கும் வேளையில் அவளைச் சந்திப்பதுதான் மிகப் பெரிய ஆறுதல்! இப்படி எத்தனையோ நாள் அவளைச் சந்தித்திருக்கிறான். இவன் அவளைக் காதல் பொங்கப் பார்த்திடுவான். அவளோ எந்தவிதமான பொருளையும் கண் வாயிலாகக் காட்டாமல் அவனைச் சாதாரணமாகப் பார்த்துவிட்டுப் போவாள்.

அவளுக்கு, அவன் மீது அளவு கடந்த ஆசைதான். எனினும் அருகே தாய் இருக்கிறாள் என்பதற்காக அவள் விழிமூலம் குறிப்பை உணர்த்துவதற்கும் அஞ்சி நடுங்கினாள்.

அன்றைக்கு என்றுமில்லாத துணிவை வரவழைத்துக்கொண்டு, அழகன் அவளுடைய தாயாரிடம் பேச்சுக் கொடுத்தான். “இன்றைக்கு வியாபாரமெல்லாம் எப்படி?” என்று கேட்டான். அழகுவல்லியின் தாய், பேச ஆரம்பித்தால் நிறுத்துவது கடினம். மழை பொழிவது போலத்தான் இருக்கும். அவள் என்ன பதில் சொல்கிறாள் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் அழகன், அழகுவல்லியின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.

நல்லவேளையாகத் தாயின் பின்புறமாக நின்று கொண்டிருந்த அழகுவல்லிக்கு, அவனைத் தன் நீள்விழிகளால் செல்லமாகக் கண்டித்து, தாயின் முகத்தைப் பார்த்துப் பேச என்று ஊமை மொழியில் உத்தரவிட வாய்ப்புக் கிடைத்தது. பேசிக்கொண்டே அழகுவல்லியின் தாய் நடந்தாள். அழகுவல்லியும் அவனைத் திரும்பிப் பார்த்து, கண்ணால் கள்ளக் குறிப்பொன்றைக் காட்டிவிட்டுத் தாயைப் பின்தொடர்ந்தாள்.

மேய்ப்போன் பின்னால் வருகிறான் என்ற உணர்வோடு, மாடுகள் வெகு தொலைவு சென்றுவிட்டன. அழகன் மட்டும் அசைவற்று நின்றான். அவன் நாடி நரம்புகளில் சூடு பரவியது, மின்னல் வேகத்தில்! அவன் முகத்தில் நம்பிக்கையொளி!

“அடாடா! என் காதலி, என்னை நோக்கிச் செய்துவிட்டு சென்ற அந்தக் கள்ளமான குறிப்பில் என் காதல் நோயைத் தீர்க்கும் மருந்தல்லவா குழைக்கப்பட்டிருக்கிறது! இனி என் பிணி அகலும்.”

என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு மகிழ்ச்சியடைகிறான். அதனை விளக்கவே இந்தக் குறள்:

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கு மருந்தொன்று உடைத்து.

அதிகாரம் - 128 - குறிப்பறிவுறுத்தல்; பாடல் - 1275

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்