பொருளடக்கம் 90 / 300
கெடுங்காலைக் கைவிடுவார்
அச்சுப் பக்கம் 202–203 · ஸ்கேன் 219–220 · அதிகாரம் 80 (நட்பாராய்தல்) — குறள் 799
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration of an aged, tearful warrior reclining beneath a fire motif while another armed man looks away.
நாட்டுக் காவலர் அவர். பாட்டுத் தமிழ்ப் புலவர்க்குப் புரவலர். வரலாற்று ஏட்டுக்கு ஒளிசேர்க்கும் வலிமை படைத்த தோளுடையவர். அவர் நெஞ்சு வீட்டுக்குள் கலக்கமெனும் காரிருள், கணநேரமும் நுழைந்ததில்லை. களம்பல கண்டவர் எனினும், பகைப் புலம் மீது பழி தீர்க்க எண்ணிடாத இதயம் கொண்டவர். எதிரிகளின் வாள்வீச்சு அவர் மார்பகத்தில் வீர ரேகைகளை உருவாக்கியதுண்டு. போர்க்களத்தில் பொல்லாப் பகைவர்களை ஆயிரக்கணக்கில் சாவுக்கு விடை கொடுத்தனுப்பி, வெற்றி மாலைகளைச் சூடிய அந்த வீரர்குலச் சிங்கம், இதோ சாவறியிலிருந்து வந்துள்ள அழைப்பிதழைப் படித்துக்கொண்டு படுக்கையில் கிடக்கிறது. தூதுவர் செல்ல அஞ்சி நடுங்கியதால், தானும் சென்றிடப் பயந்துகொண்டு காலன் அவருக்கே அழைப்புக் கடிதம் விடுத்தனன் போலும், அத்தனை ஆற்றல் மிகு மறவனன்றோ அவர்! அணிதேர்ப்புரவி, ஆட்பெரும் படையுடன் அவரது தலைநகரை முற்றுகையிட்டவர்கள், மஞ்சத்தில் சிரித்து மறுநாள் காலையில் வாடிய மலர்களைப்போல அள்ளிக் கொட்டப்பட்டனர், அவரது போர் முறையின் திறனால்!
அவருக்கும் இயற்கை ஒரு முடிவுரையை எழுதித்தானே தீரவேண்டும். இல்லையேல் மனிதனின் கதை முடிவுறாமல் போய் விடுமே! முடியாத மனித சமுதாயத் தொடர் கதையில், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு கதையுண்டல்லவா? அந்தக் கதையை முடிக்கச் சாவு, ஏட்டைப் புரட்டிக் கொண்டிருக்கிற நேரம்! எழுத்தாணியைக் கையில் எடுத்துவிட்ட வேளை!
மாவீரர், வயது முதிர்ச்சி, நோயின் தாக்குதல் - இவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இளநகை இதழ்களில் தேக்கி மரணப்படுக்கையில் வேங்கை நோக்குடன் வீழ்ந்து கிடக்கிறார். படுக்கையைச் சுற்றி மருத்துவர்கள், உற்றார், உறவினர், பெற்றெடுத்த கண்மணிகள்! பேரன்புப் பெட்டகமாம் வாழ்க்கைத் துணைவி! அனைவரது விழிகளுமே அருவிகள்தாம்! விம்மியெழும் வேதனைக் குரல்கள், சுற்றுத் தொலைவில்! இன்னும் சில நொடிகள்தான் மிச்சமிருக்கின்றன. மருத்துவர்கள் புரிந்து கொள்கிறார்கள். மாவீரர், தன் வெள்ளிக்கம்பி மீசையைத் தடவிக் கொண்டே சூழ்ந்து நிற்போரைப் பார்த்து ஆறுதல் கூறுகிறார். கொலு மண்டபத்தில் அமர்ந்து தீர்ப்புக் கூறுவாரே, அதே போன்று அழுத்தம் திருத்தமான தொனி:
“கவலையற்று நான் மகிழ்ச்சியுடன்தான் புறப்படுகிறேன். அழாதீர்கள். அழுது கொண்டு பிறக்கிறவர்கள் சிரித்துக்கொண்டு சாகவேண்டும் என்ற தத்துவத்தை மறவாதவன் நான். பிரியமுள்ளவர்களே! பிரிவு நம்மை நெருங்குகிறது. விடை கொடுங்கள், வருகிறேன்.”
மலர்ந்த முகத்துடன் மாவீரர் விடை கேட்டார். அவர் கண்களில் புத்தொளி வீசியது. அனைவரையும் ஒருமுறை ஆர்வத்துடன் பார்த்தார். திடீரென ஒரு மாற்றம்! மலை குலைந்தாலும் நிலைகுலையா மனம்படைத்த அவரது விழிகள் குளமாயின. சுற்றி நின்றோர் வியப்புடன் அவரைப் பார்த்தனர்.
அவர் அவர்களிடம் மீண்டும் பேசினார் - ஆமாம்! கடைசியாகப் பேசினார்:
“என்னை வியப்படைகிறீர்கள்? எதற்கும் கலங்காத என் விழிகளில் ஏன் கலக்கம் என்றுதானே! களத்தில் வேல்பட்டுச் சாகாமல் இயற்கையான மரணத்தைத் தழுவுகிறேனே என்பதற்காகக் கலங்குகிறேன் என்று கருதுகிறீர்களா? அந்தக் கவலையுண்டு எனினும் அதைவிடப் பெரும் வேதனையொன்று என்னை இப்போது தாக்கிவிட்டது. ஆம்! சாகும்வரையில் மறக்க முடியாத துன்பந்தான் அது! அதனால்தான் கலங்கிவிட்டேன். சாவுக்காகக் கலங்கவில்லை! உங்களுக்கு நினைவிருக்கிறதா? பத்தாண்டுகட்கு முன்பு பழையனூரைப் படையை எதிர்த்து நான் தலைமையேற்றபோது, தங்கியிருந்த பாசறைக்குத் தீ மூட்டப்பட்டுவிட்டது. எதிரிகள் சூழ்ந்து கொண்டனர். என்னுடைய தளபதிகளில் ஒருவரைக் காணவில்லை. அவர் எனக்குத் தளபதி மட்டுமல்ல, இளமைக் காலந்தொட்டு நண்பருங்கூட! ‘என்ன ஆனாரோ?’ என்று நான் பதைத்து நின்றபோது, அவர் தான்மட்டும் உயிர் தப்பினால் போதுமென்று என்னை ஆபத்தில் விட்டு ஓடிவிட்டார்! நானும் என் வீரர்களும் எஞ்சியிருந்த தளபதிகளும் இறுதிவரை போரிட்டுப் பழையனூர்ப் படையைத் துரத்தியடித்து மீண்டோம்! இப்போது அந்த நண்பரின் செயலை நினைத்துக்கொண்டேன். கலங்கி விட்டேன்.”
இந்த வார்த்தைகளுடன் அந்த மாவீரர் விழிகள் மூடின. உயிர் நின்றது. கண்ணீர் மழையால் அவர் உடல் நனைந்தது.
அந்த நீர்த்துளி எடுத்துத் தீட்டப்பட்ட குறளோவியம்தான் இது!
“கேடு வருகிற நேரத்தில் கைவிட்டு ஒதுங்குகிறவனின் நட்பு, சாகும்போது நினைத்தாலும் உள்ளத்தைச் சுடக்கூடிய வேதனையளிக்கக் கூடியதாகும்.”
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும்.
அதிகாரம் - 80 - நட்பாராய்தல்; பாடல் - 799
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்