பொருளடக்கம் 89 / 300
உப்பமைந்தற்றால்
அச்சுப் பக்கம் 200–201 · ஸ்கேன் 217–218 · அதிகாரம் 131 (புலவி) — குறள் 1302
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour domestic illustration of a husband eating while his wife sits nearby.
அலுவலகம் சென்றிருந்த கணவனின் வரவை எதிர்பார்த்துக் கால்கடுக்க, வாயிற்புறத்தில் நின்றிருந்தாள் துணைவி. “காலொடிந்து போகுமுன்னே கணவனும் வந்து சேர்ந்தான்” என்ற பாரதிதாசனின் கவிதைக்கேற்ப அவன் வீட்டுப் படியை மிதித்ததும் அவள் புன்னகை சிந்த வரவேற்று கைகால் முகம் கழுவத் தண்ணீர் மொண்டு தந்தாள். ஈரம் துடைக்கத் துண்டொன்றும் ஏந்தி நின்றாள். அவன் கண்ணாடியில் முகம் பார்த்துச் சீர் செய்து கொண்ட பின்னர், உணவருந்தும் மேடையில் உட்கார்ந்து கொண்டான்.
வாழை இலையை அவன் எதிரே போட்டவாறே “என்னத்தான் இன்று இவ்வளவு நேரம்? அலுவலகத்தில் பணிப்பளு அதிகமோ?” என்று கிள்ளை மொழியில் கேட்டாள்.
“இல்லை! வரும் வழியில் குறள் விழாக் கருத்தரங்கம் ஒன்று நடைபெறுகிறது. சற்று அந்த இன்பத்தையும் பருகலாமே எனச் செலவிட்டேன் கொஞ்ச நேரத்தை” என்றான் அவன்.
“தமிழ் மணக்கும் அந்த மண்டபத்திற்கு அழைத்திருந்தால் நானும் வந்திருப்பேனே” என்றபடி, வெள்ளியுருக்கியதுபோல் குழைந்திருந்த வெண்சோற்றை இலையில் இட்டாள். வெங்காயம் உடலுக்கு நல்லதென்று அடுத்த வீட்டு சித்தவைத்தியர் சொல்லியிருந்தார்; தவறாமல் நாள்தோறும் செய்யும் அந்தப் பச்சடியையும் இலையின் ஓரத்தில் வைத்தாள். “கிழங்கு வறுவல், அதிகம் உண்ணக் கூடாதாம்; ஒன்றிரண்டு மட்டும் சுவை பாருங்கள்” என்று சிரித்துக் கொண்டே சொல்லி அதையும் பச்சடிக்குப் பக்கத்தில் வைத்தாள். “கசக்குமேனினும் பாகற்காய், பகுத்தறிவுக் கொள்கை போல நல்ல பயன் தரும் என்பீர்களே; அதற்காக இன்று அதைச் சமைத்தேன்” என்று நான்கைந்தை எடுத்து வைத்தாள். ‘பிஞ்சு முருங்கைக்காய்க் குழம்புதான் பிடிக்குமே’ எனப் புன்னகை புரிந்தவாறு, கண்களில் குறும்பினை நடமாடவிட்டுக்கொண்டு, குழம்பினையும் சோற்றிலே ஊற்றிவிட்டு, ஆளன் உணவருந்தும் அழகை அருகே உட்கார்ந்து பார்க்கத் தொடங்கினாள். இது அவளுக்கு வாடிக்கை!
குழம்பும் சோறும் பிசைந்த ஒரு பிடிச் சோற்றை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். “குழம்பு எப்படி இன்றைக்கு?” எனக் கொஞ்சினாள் அவள்.
“நேற்றிரவு நீ புரிந்த ஊடல் போலிருக்கிறது” என்று குழம்புக்கு ஒப்புவமை காட்டினான் கணவன்.
“குழப்பமாயிருக்குதத்தான் உங்கள் உவமை! தெளிவாகக் கூறுக!” என்று சிணுங்கினாள்.
“வரும் வழியில் குறள் அரங்கம் சென்று வந்தேன் என்று சொன்னேன் அல்லவா; அங்கு ஊடலைப்பற்றி ஒரு விளக்கம் கூறப்பட்டது. ஊடல், காதலர்க்கு இன்பம் தரக்கூடிய ஒன்றுதான் என்றாலுங்கூட, அந்த ஊடலையும் அளவு கடந்து நீட்டித்துவிட்டால், அது உணவில் சிறிதளவு உப்பு அதிகமாகிவிட்டால் எப்படியிருக்குமோ அப்படி ஆகிவிடுமாம். உணவில் அளவோடு கலக்கப்படும் உப்புப்போல இருக்கவேண்டுமாம் ஊடல்! இவ்வளவு அழகாக ஊடல் குறித்து வள்ளுவர் எழுதியிருக்கிறார். அந்த விளக்கம் கேட்ட நினைவோடு வீட்டுக்கு வந்தேன். அதனால் இன்றைய உணவு பற்றி அப்படிச் சொன்னேன்” என்று மலர்ந்த முகத்துடன் அவன் பதிலிறுத்தான்.
“அப்படியானால் குழம்பில் உப்பு அதிகமோ?”
மனவாட்டத்துடன் அவள் கேட்டாள்!
“ஓகோ! நேற்றிரவு நீ நடத்திய ஊடல் சற்று அளவுக்கு மீறியது என்பதை ஒப்புக்கொள்கிறாயா?” என்று அவன் அவளைக் கேலி செய்தான்.
அன்றிரவு, தான் கொண்ட ஊடலை அளவுக்கு அதிகமாகவே நீட்டித்ததை எண்ணிப் பார்த்து அந்தப் பேரழகி வெட்கத்தால் தலை குனிந்து கொண்டாள்.
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.
அதிகாரம் - 131 - புலவி; பாடல் - 1302
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்