பொருளடக்கம் 88 / 300
புறந்தார்கண் நீர்மல்க
அச்சுப் பக்கம் 198–199 · ஸ்கேன் 215–216 · அதிகாரம் 78 (படைச் செருக்கு) — குறள் 780
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour battlefield illustration of a commander cradling a wounded or fallen warrior.
சேனை தழையாகிச் செங்குருதி நீர்தேக்கி ஆனை மிதிக்கும் அருஞ்சேறாம் போர்க்களத்தில் எதிரிகளின் முடி நடுவதற்கு முரசம் ஆர்த்துவிட்டது. அழைப்பு வந்துவிட்டது, அந்த வீரனுக்கு!
“படை முழக்கம் பாராய் கண்ணே - தடையின்றி விடை தாராய் பெண்ணே” என வேண்டுகின்றான், விழுப்புண்படாத நாளெல்லாம் வீணான நாட்கள் எனக்கருதும் வீரமகன் விழிப் பண்பாடும் வடிவழகி, முத்துநகை சிந்துகின்ற இதழ் குவித்து முத்தமிட்டு, ‘வெற்றியோடு திரும்பிடுக அத்தான்’ என்று அணைத்து நின்றாள் - கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் அவன் தோளில் துடைத்துக்கொண்டு!
“வேலெடுத்து வா” என்பான் - விழி தருவாள். “ரத்தம் படிந்த வாள் எங்கே” எனக் கேட்பான். செவ்விதழ் கொடுப்பாள். “அக்கணமில்லை பெண்ணே, இக்கணம்! இணையிரியா எந்தன் துணையே!” தலைவனவன் தயாராய் நின்றிருப்பான் எனை நோக்கி! “வேல் தருவாய்; விடை தருவாய்! இடையில்லாப் பேரழகே!” என மடை திறந்த காதல் வெள்ளம்விட்டு மறவனவன் நடக்கவுற்றான் மாவீரர் அணிவகுப்பின் பக்கம்!
வழியில் தாய் கண்டாள்; வாழ்த்தினாள்; ‘வருக புலியே வெற்றியோடு!’ என்றாள். “தலைவனவன் உன்மீது சிறு கோபம் கொண்ட சேதி நானறிவேன். நீ மறைத்தால் தெரியாமல் போகுமா தம்பி! தாயகத்தின் மேன்மைக்குத் தலை கொடுக்கச் செல்கின்ற படைவரிசை காத்திருக்கும் - கடமை செய்து வா, என் கண்ணே” என்று முன்பவன் மார்பிலே பெற்றிருந்த புண்மீது முத்தமிட்டாள்.
போருக்குச் சென்ற வீரன் எதிரிகளைப் பொடிசெய்து எழும்புப் புழுதியிலே சேர்த்துவிட்டான். இரத்தச் சகதியிலே இரு தரப்புவீரர்களும் இறுதி யாத்திரைக்குச் சித்தமானார்கள். கடைசி வெற்றி பகைவருக்கு என்றோர் சேதி பறந்து வர, “கண்ணிருந்தும் குருடரா நாம்?” எனக் கேட்டபடி களத்தினிலே, நம் காளை சுழல்காற்றாய்ப் பறந்து சென்றான். தனியொருவன் - தலைவனவன் கண்ணெதிரே பகைப் படையின் பலமழித்தான்; தோல்விப் புகைப்படலம் ஒழித்து நின்றான்; வெற்றிக்கு வித்திட்டான். அம்மவோ! இறுதியில் மறைந்துவந்த அம்புக்கு இரையானான்!
வெற்றிகண்ட படைத் தலைவன், வீரன் சாய்ந்துவிட்ட காட்சிதனைக்கண்டு கதறிவிட்டான்.
சிறியோர் சேட்டை விளைத்த சிறு கசப்பால் கருத்தினிலே வேறுபாடு கொண்டிருந்த காவலனும், களம்பட்டு வீழ்ந்திருந்த காளைதனைக் கண்ணீரால் குளிப்பாட்டுகின்றான்.
சாகின்ற வீரன் சொல்வான்:
“தலைவா! தமைக்காத்த தலைவன் கண்களில் நீர்ப்பெருக்கெடுக்குமாறு ஏற்படுகின்ற இதுபோன்ற களச் சாவுகளை - வீரர்கள் யாசித்தாவது பெறுதல் வேண்டும்.”
தலைவன், தன் சாவு கண்டு கண்ணீர் விடுவது, வீரனுக்கு அவ்வளவு பெருமையாக இருக்கிறது! தலைவனுக்குக் கண்ணீரை வரவழைத்த அந்த வீரச் சாவு பாராட்டுக்குரியது. அதற்கு இதோ குறள்:
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து.
அதிகாரம் - 78 - படைச் செருக்கு; பாடல் - 780
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்