பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 87 / 300

நாணும் மறந்தேன்

அச்சுப் பக்கம் 196197 · ஸ்கேன் 213214 · அதிகாரம் 130 (நெஞ்சொடு புலத்தல்) — குறள் 1297

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

Large colour night illustration of பூங்குழலி waiting by a tree while a distant figure approaches through the grove.

அன்று நிலவின் ஒளி இல்லை. விண்மீன்கள் மட்டுமே கார்த்திகை விளக்குகளைப்போல் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. கட்டுப்படுத்த முடியாத இன்ப உணர்ச்சி கட்டுடல் முழுதும் பரவிய நிலையில், துடிதுடிக்கும் விழிகளோடு, பூங்குழலி மாங்கொல்லையில் காத்திருந்தாள். அங்குதான் அவன் வந்து அவளைச் சந்தித்துச் சங்கமமாவதாகக் கூறியிருந்தான். ஒரு கிழமைக்கு முன்பு அதே மாங்கொல்லையில்தான் அந்தச் சந்திப்பு நடந்தது. அவர்கள் வரைந்த காதற் கலவி ஓவியங்களைக் கண்டுகொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்த மாமரங்கள், இப்போது பூங்குழலி தனியே நிற்பதைப் பார்த்து, அவன் எப்போது வருவான்? அடுத்த காட்சி எப்போது தொடரும்? என எதிர்நோக்கிக் கொண்டிருந்தன.

அன்று கண்ட சுவையை நினைத்து நினைத்து எழில்மேனியைச் சூடாக்கிக் கொண்டு, ஒரு மரத்தின்மீது சாய்ந்தவாறு, தான் சாய்வதற்கேற்ற அந்தக் காதலனின் தோளுக்காகத் தவமிருந்தாள் பூங்குழலி! நாழிகை, நகர்ந்தது- பின்னர் ஓடியது!

இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவான்; இனியும் தன்னைவாட விடமாட்டான்; வாரியணைப்பான் - மாரியெனப் பொழிவான் முத்தம். இந்த நினைவோடு, அவள் சாய்ந்திருந்த இளம் மாமரத்தைத் தங்கக் கரத்தால் தடவினாள். அதுகண்டு, மற்ற மரங்கள் சிலிர்த்தன. அந்த இளம் மாமரத்தின்மீது பொறாமைப் பார்வையை வீசின! சந்தனச் சிலையாள் தங்கள் மீது சாய்ந்திட வில்லையே என்ற ஏக்கத்தில் பெருமூச்சு விட்டன. அவள் விழிகளோ, அவன் வரும் வழிபார்த்து வெறிபேறிக் கிடந்தன.

அதோ! அதோ! மங்கலான ஒளியில் அந்த ஆடவனின் உருவம் அசைந்தாடி வருகிறது. வழக்கமாக அவன் அணியும் தூய வெண்ணிற ஆடை! கையின் மணிக்கட்டு வரையில் மறைந்திருக்கும் சொக்காய்! தலையில் அழகிய முண்டாசு! அந்த உருவத்தின் வரவுக்காகத்தான் பருவக்கிளி ஏங்கித் தவித்துக்கொண்டிருந்தது. அவன் வருகிறான் என்றதுமே வீங்கிப் புடைத்து நின்ற நெஞ்சகம், அருகில் நெருங்கிவிட்டான் என்றதும் துள்ளிக் குதித்தது. “அத்தான்!” என்று கத்திவிட்டாள். அந்த ஒலியிலேதான் எவ்வளவு விரகதாப வேதனை!

அவனோ எதுவும் பேசாமல் எதிரே வந்து நின்றான். “என்னத்தான் இவ்வளவு நேரம்?” என்று கேட்டவள், அவனிடமிருந்து பதில் வருவதற்குள் அவனைத் தாவி அணைத்தவாறு தரையில் விழுந்தாள், அவனுடன் சேர்ந்து! “ஏ அப்பா! அவ்வளவு அவசரமா?” என்று அவன் கேட்டுக் கலகலவெனச் சிரித்தான். பூங்குழலி மிரண்டு போனாள்! காரணம், அவளுடன் பேசிய குரல் ஆண்குரல் அல்ல; பெண்ணின் குரல்!

அதுவும் அவளுடைய அருமைத் தோழி, ‘இனியவள்’ என்பவளின் குரல்! பூங்குழலி, அவளை உதறிவிட்டு எழுந்து நின்றாள். தோழி இனியவளும், தான் அணிந்திருந்த ஆணுடையைக் களைந்துவிட்டு எதிரே நின்றாள். உயிர்த் தோழிதான் என்றாலும் தன்னுடைய ஏக்கத்தையும் தாபத்தையும் அவளிடத்தில் இவ்வளவு வெளிப்படையாகக் காட்டிக் கொண்டோமே என்ற வெட்கம் பூங்குழலியைத் தலைகுனிய வைத்துவிட்டது. இனியவள், பூங்குழலியை ஏமாற்றியதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். பிறகு இருவரும் மனம்விட்டுப் பேசிக் கொண்டார்கள். பூங்குழலி, இனியவளிடம்:

“என்னடி செய்வது? அவர் மறந்தாலும் அவரை மறக்க முடியாத மாட்சிமையற்ற மடநெஞ்சத்துடன், நானும் சேர்ந்து வெட்கத்தையும் மறந்து விட்டேன்” என்றாள்.

அதற்கு, இனியவள்;

“ஆமாம்! ஆமாம்! கண்டவுடனே கட்டித்தழுவிக் காதல் காவியம் பாடத் தொடங்கிவிட்ட உன் செயலை நோக்கும்போது, நீ நாணம் எனும் சிறந்த பண்பை மறந்துதான் விட்டாய் என்பதை உடனே புரிந்து கொண்டேன்” என்று கேலி செய்தாள்.

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென் மாணா மடநெஞ்சிற் பட்டு.

அதிகாரம் - 130 - நெஞ்சொடு புலத்தல்; பாடல் - 1297

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்