பொருளடக்கம் 86 / 300
அறிவினுள் எல்லாம்
அச்சுப் பக்கம் 194–195 · ஸ்கேன் 211–212 · அதிகாரம் 21 (தீவினையச்சம்) — குறள் 203
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration of an armed warrior confronting two men in a wooded setting.
அலைகடலெனத் திரண்டு வந்த பகையரசின் படைகள், திடீரெனத் தென்னவனின் கோட்டையை முற்றுகையிட்டுத் தாக்கின. எதிர்பாராமல் ஏற்பட்ட அதிர்ச்சியினால், தென்னவனின் படைகள் திகைத்துப் போயின. மன்னவன் தென்னவனுக்குப் பெரும் வியப்பு. ஆற்றல் மிக்க ஒற்றர்களிருந்தும் அவர்களையுமறியாமல் பகைநாட்டான் தன் கோட்டையை முற்றுகையிட்டது எப்படி என்ற கேள்விக்கு அவனால் விடைகாண முடியவில்லை. எனினும், அந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமலே போய்விடவில்லை.
எதிரியின் வசம் கோட்டை சிக்கியது; பகைவனின் கொடி, கோட்டை முகப்பில் ஏற்றப்பட்டது. முன்னேறி எதிரிகளைத் தாக்கிக் கொண்டிருந்த தென்னவனை, முகமூடியணிந்த மூவர் சூழ்ந்து கொண்டு அப்படியே பிடித்துவிட்டனர். பகையரசன், தென்னவனின் முன்னே வெற்றிச் சிரிப்புடன் வந்து நின்றான். ‘தன்னைப் பிடித்துக்கொண்டவர்கள், தன் படைவரிசையில் இருந்து நுழைந்தார்கள்... அவர்கள் யார்’ என்று அறியத் தென்னவன் திரும்பிப்பார்த்தான். அந்த மூவரும், தங்கள் முகத்தை மூடியிருந்த துணியை அகற்றினார்கள். வேறு யாருமல்ல! தென்னவன் மிகவும் நம்பியிருந்த தலைமைத் தளபதியும், தென்னவனின் அந்தரங்க ஒற்றர்களுந்தான்! அவர்களைப் பார்த்து, கைதாகிவிட்ட மன்னன் கலகலவெனச் சிரித்தான்: “பரவாயில்லை! என் படையின் திறமையின்மையால் நானும் என் நாடும் தோற்றுவிட்டோமோ என்று கவலைப்பட்டேன்! இல்லை! இல்லை! துரோகிகளால் ஏற்பட்டது இந்தத் தோல்வி என்பதை எனக்குத் தெளிவாக்கி, என் கவலையைப் போக்கி விட்டார்கள்!” என்று தென்னவன் மிக அமைதியாகப் பேசினான்.
பகை மன்னன், தென்னவனைத் தனிப்பொருளாக நாடு கடத்தி “அவனை யாரும் பின்தொடரக் கூடாது” என்று ஆணை பிறப்பித்தான். அந்த ஆணை கேட்டு அதிகமாக மகிழ்ந்தவர்கள் தென்னவனின் முன்னாள் தளபதியும் ஒற்றர்களுந்தான்! தென்னவனின் ஒரே மகனைச் சிறைபிடித்து, யானைக்காலால் அவன் தலையை இடித்துத் துவைக்குமாறு மற்றொரு உத்தரவும் பறந்தது! துரோகம் செய்தவர்களைப் பார்த்துத் தென்னவன், “நண்பர்களே! வருகிறேன்! வாழ்க நீங்கள்!” என்று கூறிவிட்டுத் தனிப்பொருளாக நாட்டை விட்டு வெளியேறினான். நாட்டைத் துறந்து காட்டில் வாழ்ந்த தென்னவனை, அங்கேயும் அமைதியாக வாழவிடவில்லை பகையரசன். ஏற்கனவே அவனைக் காட்டிக் கொடுத்தவர்கள், பகையரசனிடம் தூபம் போட்டுத் தென்னவனுக்குத் தொல்லைகள் கொடுக்கும் பணியைத் தாமே மேற்கொண்டனர்.
தென்னவன் வசித்த பகுதியில் கொடிய வனவிலங்குகளை விரட்டி விட்டனர். அவற்றையெல்லாம் தனது மனவலிமை கொண்டு வீழ்த்தினான் அந்த மன்னவன்.
தங்களின் முயற்சி பலிக்காமற் போனதுகண்டு துரோகிகள் வருந்தினர். நாட்கள், மாதங்கள் உருண்டன. பகை மன்னன் சிந்திக்கலானான். துரோகம் செய்து தங்கள் அன்புக்குரிய மன்னனையே காட்டிக் கொடுத்தவர்கள், தன்னையும் சூழ்ச்சியால் வென்றிட எவ்வளவு நாளாகும் என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். பகையரசன் தங்களைச் சந்தேகப்படுகிறான் என்பதைப் புரிந்து கொண்ட துரோகிகள், சூழ்ச்சி வலையை வேகமாகப் பின்னுகிறார்கள். அவர்களது சூதுமதி யால் அந்தக் கோட்டையையே கைப்பற்றுகின்றனர். அவர்களிடம் சிக்கிக் கொண்ட ஏமாளி பகைமன்னன் கோட்டையை விட்டு ஓடிவிடுகிறான். தன்னந்தனியாக ஓட நேரிட்ட அவன், காட்டில் தென்னவனைச் சந்திக்கிறான்: “உனக்குத் துரோகம் செய்தவர்கள், எனக்கும் துரோகம் செய்துவிட்டனர்” என்று கூறுகிறான். அப்போது அங்கே ஒரு வீரன், ஓங்கிய வாளுடன் பாய்கிறான். அவன் யார்? தென்னவனின் மீது உயிரையே வைத்திருக்கும் ஒரு படைவீரன்தான் அவன்! பகையரசனை வெட்டிச் சாய்க்கத்தான் அவன் தனது நாட்டிலிருந்து புறந்தோடி வந்திருக்கிறான். ஆனால், தென்னவன், அவனைத் தடுத்து நிறுத்தி பகை மன்னன் உயிரைக் காப்பாற்றுகிறான்.
“தென்னவா! உனக்கு அடுக்கடுக்காகத் துன்பங்களைக் கொடுத்தேன் நான். போதாதென்று, துரோகிகள் உனக்கு விளைத்த தொல்லைகளையும் அனுமதித்தேன். ஆனால், நீ அதற்கு மாறாக என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாயே; என்ன காரணம்?”
என்று பகை மன்னன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
“தன்னை வருத்துவோர்க்கும் தீய செயல்களைத் திருப்பிச் செய்யாமல் இருப்பது தான் எல்லா அறிவிலும் தலையான அறிவு என்று வள்ளுவர் கூறியிருக்கிறார்.”
என்று விடையளித்துவிட்டுத் தென்னவன் அந்தக் குறளையும் பகையரசனுக்குப் பாடிக் காட்டினான். அந்தக் குறள் இதோ:
அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.
அதிகாரம் - 21 - தீவினையச்சம்; பாடல் - 203
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்