பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 85 / 300

உளம்போன்று உள்வழி

அச்சுப் பக்கம் 192193 · ஸ்கேன் 209210 · அதிகாரம் 117 (படர்மெலிந்திரங்கல்) — குறள் 1170

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration dominated by a tearful young woman's face, with silhouetted departing figures above.

வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த வெள்ளத்தைக் கண்டதும் அவளது கண்களுக்கு ஓர் ஆறுதல். அவளையும் அறியாமல் அவைகள், வெள்ளத்தில் குதித்து நீந்திச் செல்கின்றன.

“எங்கே போய்விட்டீர்கள், என் கண்களே!” என்று அவள் அலறுகிறாள். அந்தக் கண்கள் அவளுக்குப் பதில் சொல்லத் தவறவில்லை.

“அவனைக் காணாமல் எங்களால் இருக்க முடியவில்லை. அவனைத் தேடித்தான் இந்தக் கண்ணீர் வெள்ளத்தில் நாங்கள் நீந்திச் சென்று கொண்டிருக்கிறோம்” என்று கண்கள் சொன்னதும் அவளது சோகம் படிந்த முகத்தில் ஒரு புன்னகை பளிச்சிட்டு மறைந்தது.

அந்தக் கணநேரத்தில், காதலன் அவளைப் பிரிந்துசென்ற நிகழ்ச்சி அவள் நெஞ்சில் நிழலாடத் தொடங்கிவிட்டது.

‘பொழுது’ கறுப்புப் போர்வையைப் போர்த்திக் கொண்டவுடன், அதற்குள்ளே அவனும் அவளும் புகுந்து கொண்டனர்.

தங்களை யாரும் காணமுடியாதபடி இரவுத்திரை போடப்பட்டுவிட்டது என்ற நினைவில், இன்பத்தின் எல்லைக்கோடு வரையில் சென்றனர். முத்து விரிசைகள் மோதிட மோதிட- செம்பவள இதழ்கள் கலவிச் செய்திகள் கூறிடக் கூறிட- முகத்தொடு முகமும் அகத்தொடு அகமும் இணைந்து களித்தனர்.

இரவோ, இவர்கள் ஆட்டத்தால் மிதிபட்டுக் களைத்துப் போயிற்று. இனிப் பொறுக்க முடியாதென்று ‘பொழுது’ தனது கறுப்புப் போர்வையைக் களைந்து வெண்துகிலை உடுத்தக் கிளம்பிற்று.

வைரம் பாய்ந்த பனைமரத்தில் தழுவிக்கிடக்கும் பசலைக் கொடியைப் பார்ப்பது அரிது! ஆனால், இங்கே அவனை, அவள் அப்படித்தான் தழுவிக்கிடந்தாள்.

வைகறையின் வரவு, அவளை வாட்டி வதக்கியது. வாணிபத்தின் நிமித்தம் அவன் புறப்பட்டு விடுவானே என்பதால்தான், அவ்வளவு வேதனை! “போய் வருகிறேன்” என்று சொல்லி முடிப்பதற்குள் உச்சரித்த எழுத்துக்கு ஓர் முத்தம் வீதம் அவன் கொடுத்து, ஒன்றுக்கு இரண்டு வீதம் திரும்பப் பெற்றான்.

அந்த முத்தத்தின் சத்தம் இன்னும் காதுகளில் அவளுக்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அணைப்பின் சுகஉணர்வு அவள் அகமலரில் வண்டுபோல் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், கண்களில்தான் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. அந்த வெள்ளத்தில்தான், அவளது கண்கள் நீச்சலடிக்கின்றன, அவனைப்போய்க் காண்பதற்கு!

அவள், அந்தக் கண்களிடம் சொல்லுகிறாள்! என்ன அது!

“ஓ, என் கண்களே! என்னைப் பிரிந்துசென்ற காதலர் இருக்குமிடத்திற்கு என் உள்ளத்தைப்போல ஓடிச் செல்லும் ஆற்றல் உங்களுக்கு இருக்குமேயானால், இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீங்கள் நீந்த வேண்டியதில்லையே!”

இந்த ஓவியம் தீட்டக் கிடைத்த குறள்தான் இது;

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.

அதிகாரம் - 117 - படர்மெலிந்திரங்கல்; பாடல் - 1170

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்