பொருளடக்கம் 84 / 300
அ. விழுப்புண் படாத / ஆ. விழித்தகண் வேல்கொண்டு
அச்சுப் பக்கம் 190–191 · ஸ்கேன் 207–208 · அதிகாரம் 78 (படைச்செருக்கு) — குறள் 776, 775
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour battlefield illustration of a commander with a spear piercing his torso.
வேலும் வாளும் உண்டாக்கிய குருதிக் கடலில் பயங்கர மூச்சு விட்டுக் கொண்டு மிதந்து செல்லும் வீரர்களின் தலைகளை முத்தமிட்டபடி பயணம் நடத்தும் முறிந்த எலும்புத் துண்டுகளையும் அறுந்த நரம்புத் துகள்களையும் கண்டு முகாரி பாடாமல், முதுகு காட்டாமல், “முன்னேறு நீ! முன்னேறு நீ!” என முரசொலித்து, எஞ்சிய வீரர்களை நெஞ்சுரம் கொள்ளச் செய்து ‘எந்த நேரத்தில் எந்தப் பக்கமிருந்து ஈட்டி பாயுமோ? எதிரியின் கணை பாயுமோ?’ என்று சாவு முகட்டிலே வினாடிகளைக் கணக்குப் பார்ப்பதும் வீரர்களுக்கு அழகில்லை எனும் போர்க்களத்து அரிச்சுவடியைத் தவறியும் மறந்து விடாமல்- ‘மரணம், மாவீரனுக்குத் தரப்படும் மலர்ச்செண்டு; மங்கையின் இதழைவிடச் சுவையானது’ என்று மனவலிமையோடு படையை நடத்திச் செல்பவனே மாவீரன்; மறவர் படைத் தலைவன் எனும் பாசறைக் காவியத்தின் சிறப்புப் பாயிரத்தைப் படித்தவன்தான் அவன்.
அவன் தலைமையில் அணிவகுத்து நால்வகைச் சேனை.
தலைநகரை முற்றுகையிட்ட பகைவர் படை, கோட்டைக்குள் நுழைந்திடவும் கொடிமரத்தை வீழ்த்திடவும் பரபரப்புக் காட்டியது.
சூழ்ந்து வந்த பகையைச் சுக்குநூறாக்குவதிலேதான், தங்கள் நாட்டின் எதிர்கால நல்வாழ்வே இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட படைத்தலைவன், அணிவகுத்த வீரர்களுக்கு மத்தியில் போர் முழக்கம் செய்தான்:
“காளை நிகர்த்த வீர்க்கண்மணிகாள்! வீரனுக்கு அழகு என்ன தெரியுமா? தன் வாழ்நாளில்; கழிந்து போன நாட்களில்; எல்லா நாட்களும் நாட்கள் அல்ல! வேறு எந்த நாள் அவனுக்குரிய நாள்? அவன் விரும்பும் பொன்னாள் எது?
இதோ! வள்ளுவர் கூறுகிறார்; கேளுங்கள்:
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து.
போர்க்களம் சென்று அவன் உடலில் விழுப்புண் ஏற்காத நாட்கள் எல்லாம் பயன்படாத நாட்களேயாகும் என்பது வள்ளுவரின் வீர வரிகளன்றோ!
அதை யுணர்ந்துள்ள என் ஆருயிர் வீரர்களே!
ஆறிலும் சாவுதான்; நூறிலும் சாவுதான்; ஆனது ஆகட்டுமே என்று போர்க்குரல் கொடுங்கள்! அதோ! நமது பகைவன்! விழுப்புண்களை விலையாகக் கொடுத்து வெற்றிக்கனியைப் பெற்றிடுவோம் வாரீர்! நம் கோட்டை மதிலைச் சுற்றிப் பார்க்கிறது, எதிரியின் கொடித்தேர்! அதனை உடைத்துப் பிளந்து அகழியில் வீசுவோம் புறப்படுவீர்! அதோ! அதோ! அவை விண்வெளியின் அடித்தளத்து மின்னல்களல்ல; பகைவர் படையின் வாள் ஒளி!
உங்கள் விழிகள் பகைவர்களை நோக்கிக் கோபம் கொப்பளிக்கத் திறக்கட்டும். ஆனால் ஒன்று; மறந்து விடாதீர்கள்! பகைவரைச் சினந்து நோக்கிய கண்களுக்குரிய இலக்கணத்தை, வள்ளுவன் வகுத்திருக்கும் சிறப்பினை மறந்து விடாதீர்கள்! பகைவரை நோக்கிச் சீற்றமுடன் திறந்த விழிகள், பகைவர் எறியும் வேலைப் பார்த்திடும்போது மூடி இமைக்குமானால், அது வீரர்களுக்கு ஏற்பட்ட தோல்வியையே காட்டுவதாகும்.
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
வேலின் பாய்ச்சல் கண்டு விழி இமைப்பதும் கோழைத்தனம் என்று கூறுகின்றார் குறளார்!
அந்தக் குறளை ஒலித்திடுக! முரசை முழக்கிடுக! தேன்போல் திரளும் பகையைத் தூள் தூளாக்குக!”
போர் தொடங்குகிறது-
இந்த வீரமிகு காட்சிக்கேற்ற இரண்டு குறள்களைத்தான் நாம் மறக்க இயலுமோ?
அதிகாரம் - 78 - படைச்செருக்கு; பாடல்கள் - 776, 775
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்