பொருளடக்கம் 83 / 300
நெய்யால் எரிநுதுப்போம்
அச்சுப் பக்கம் 188–189 · ஸ்கேன் 205–206 · அதிகாரம் 115 (அலர் அறிவுறுத்தல்) — குறள் 1148
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration of two women, one reclining and one standing, beneath a small vessel/flame motif.
குறளில் ‘அலர்’ என்ற சொல்லுக்குப் ‘பலர் அறிதல்’ என்று பொருள் கூறுவர். அதாவது, தங்களுக்குக் கிடைத்த ஒரு தகவலைப் பலரும் அறியும்படியாக அந்தத் தகவலுக்குக் கால் கைகளை ஒட்டவைத்துப் பரப்புதல் என்று விரித்துரைக்கலாம். குறிப்பாகவும் சிறப்பாகவும் காதல் வயப்பட்ட ஓர் ஆணைப்பற்றியோ பெண்ணைப்பற்றியோ - அந்தச் செய்தியைத் தங்கள் மனதுக்குள் புதைத்து வைக்காமல் - ஊர் பொது மண்டபத்தில், குளக்கரையில், கோயில் வாயில்களில், திருவிழாவில், சந்தையில் எப்படியாவது பிறருக்குத் தெரிவித்து அதுபற்றிய கற்பனைகளை அடுக்கிக்கொண்டே போகிற சிலர், ஊர்களில் இருக்கத்தான் செய்கிறார்கள்! “கெளவை” என்று குறளில் வருமிடத்தில் அதற்கு, ‘அலர்’ என்றே பரிமேலழகர் பொருள் கூறுகிறார். “கெளவை” என்பதற்கு ‘பழிதூற்றுதல்’ என்பொருள். எனவே ‘அலர்’ என்பதும் அப்பொருளையே குறிக்கிறது எனலாம். “கெளவையால்” என்பதற்கு எதிரார் எடுக்கின்ற அலரால் என்று பரிமேலழகர்
பொருள் காணுகிறார். இதில் மற்ற உரையாசிரியர்களிடம் மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. “எதிரார்” என்பதற்கு “யாரும் தொடர்பில்லாதவர்” என்று பொருள்!
இளநங்கை ஒருத்தியை, இளம் நம்பி ஒருவன் காதலுற்று, நிலவு காயும் நித்திலப் பந்தலில்கூடிக் கிடந்தான் எனில், அந்தப் பிரச்சினைக்குத் தொடர்பே இல்லாத ஊரார் சிலர், (எதிரார்) அதுபற்றி ‘அலர்’ கூறுவதைத்தான் இன்பத்துப்பாலில் பல இடங்களில் வள்ளுவர் பல்வேறு கோணங்களில் சித்திரித்துக் காட்டுகிறார்.
காதலனுடன் களித்திருந்து, கன்னங்களிலும் மார்பகத்திலும் நகக்குறி, பற்குறியுடன் இல்லம் திரும்பி, நடந்ததை எண்ணிக் குறுநகை புரிந்துகொண்டிருந்தவளைக் கேலி செய்தவாறு, அவளின் தோழி உள்ளே நுழைந்தாள். “என்னம்மா! உங்கள் காதலைக் கொஞ்சம் ரகசியமாக வைக்கக்கூடாதா? ஊர் முழுவதும் ‘அலர்’ கூறப்படுகிற அளவுக்கு ஆகிவிட்டதே! இனி என்ன செய்யப் போகிறாய்! உன் காதல் நினைவுகளைக் கட்டிப்போட வேண்டியதுதான்” என்று எச்சரித்தாள் அவள் தோழி!
ஆனால், ஆடை குலைந்தும் அகமகிழ்வு குலையாமல் சாய்ந்து படுத்திருக்கும் அவளோ, தோழியின் எச்சரிக்கைக்குப் பதிலாக ஓர் அலட்சியச் சிரிப்பை உதிர்த்தாள். தோழி ஒன்றும் புரியாமல் திகைத்துக் கன்னத்தில் கைவைத்துக் கொண்டாள். தன் தோழியின் மேனியில் பவழம்போல் சிவந்திருக்கும் அழுந்திய கோடுகளைக் கண்டபோது, எச்சரிக்கை விடுத்த தோழிக்குக்கூட என்னவோ போல்தான் இருந்தது. அப்போது அடுப்பிலிருந்த நெருப்பு, தேவைக்கு மேல் எரியத் தொடங்கியது. “அதை அவித்துவிடு” என்று வீட்டுக்காரியிடம் தோழி சொன்னாள். உடனே இல்லத்துக்குரியாள் எழுந்து சென்று உரியில் தொங்கிக் கொண்டிருந்த கலயத்தை எடுத்து, அதிலிருந்த நெய்யை அடுப்பின் நெருப்பில் கொட்டினாள். “என்னம்மா உனக்குப் பித்தம் தலைக்கேறிவிட்டதா? நெருப்பை நெய்யால் அணைக்க முடியுமா?” என்று கேலியாகக் கேட்டாள் தோழி.
அதற்கு அவள், “நெய்யை ஊற்றுவதால் நெருப்பை அவிக்க முடியாதல்லவா? இதைப் போலத்தான் ஊரார் ‘அலர்’ கூறுவதால் நான் அவர் மீது கொண்ட காதலை (காமம்)யும் அவிக்க முடியாது! நெய் ஊற்றுவதால் நெருப்பு அவியாமல் பெரிதாக எரிவது போல- ‘அலர்’ கூறுவதால் எனது காதல் தணியாமல் மேலும் வளரும் என்பதை அறிந்து கொள்வாயாக” என்று விளக்கமளிக்கிறாள். அதற்கான குறட்பா இதோ:-
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்.
அதிகாரம் - 115 - அலர் அறிவுறுத்தல்; பாடல் - 1148
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்