பொருளடக்கம் 82 / 300
கைவேல் களிற்றொடு
அச்சுப் பக்கம் 185–187 · ஸ்கேன் 202–204 · அதிகாரம் 78 (படைச்செருக்கு) — குறள் 774
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour battlefield illustration with an elephant and a warrior amid fallen fighters.
தெற்குச் சீமை வீரத்தின் விளைநிலம். ஈட்டியின் பாய்ச்சல் கண்டு இமை கொட்டியவன் கோழை; இது தமிழர்களின் போர்க்குரல்.
இருபெரும் நாட்டு வீரர்கள் சந்தித்துப் பேசினார்கள்.
ஒருவன் சொன்னான் பெருமையோடு, “எமது மன்னர் முதுகிலே கவசம் அணியும் பழக்கமில்லை” - என்று!
முழுப்பக்க ஓவியம் — இப்பக்கத்தில் அச்சிட்ட உரை இல்லை.
வீரர்கள் இருவர் சந்திக்கும்போது விருந்து மண்டபத்திலும் விழியாலே மொழி பேசும் அரங்கிலும் தமிழகத்து வீரம் முதலிடம் பெறத் தவறியதில்லை. புறங்காட்டி ஓடுதலும் முதுகில் தழும்பு ஏற்றலும் புவி நிகர் தமிழர் வாழும் பூமிக்கு இழுக்குத் தருவன என்பதை நமது களம்புகு காதைகள் விளக்குகின்றன.
ஒரு போர்க்களம். தானைகள் மோதிக்கொள்கின்றன; யானைகள் முட்டிக் கொள்கின்றன; குருதியாறு பெருக்கெடுத்தோடுகிறது; வேலும் வாளும் விண்ணிலே மின்னி, வீரச்சிரிப்பைக் கொட்டுகின்றன; மண்ணிலே கிடக்கும் வீரர்கள் மரணத்தைப் பூரிப்போடு அணைத்து மகிழ்கிறார்கள். மார்பிலே பாய்ந்த வாளை எடுத்து முத்தமிட்டு, வீரச் சத்தமிட்டுச் சாகிறார்கள் மறவர்குடிப் பெருமக்கள்.
அந்தக் களத்திலே ஒரு நிகழ்ச்சி. வீரனொருவன் தன் கையிலிருந்த வேலை ஒரு யானையின்மீது எறிந்து எதிர்க்கிறான். அடுத்து இன்னொரு யானை வருகிறது; அதனை எதிர்க்க அவனிடம் ஆயுதம் இல்லை. வேலோ வாளோ தேடி அலைகிறான்; கிடைக்கவில்லை! திடீரென்று நினைவு வருகிறது, அவன் மார்பிலே ஒரு வேல் பாய்ந்திருக்கிறது. அதை எடுத்து யானை மீது எறிய முயலுகிறான். வேல் கிடைத்தமைக்காக மகிழ்கிறான்.
இந்த வீரன் யார் தெரியுமா?
திருக்குறளிலே வரும் போர்க்களத்துக் ‘கதாநாயகன்.’
இதோ, வீரஞ்செறியும் குறள்:-
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்!
அதிகாரம் - 78 - படைச்செருக்கு; பாடல் - 774
காப்பக விவரிப்பு: Small centred Valluvar memorial/chariot device below the chapter/song metadata.
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்