பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 81 / 300

வீழும் இருவர்க்கு

அச்சுப் பக்கம் 183184 · ஸ்கேன் 200201 · அதிகாரம் 111 (புணர்ச்சி மகிழ்தல்) — குறள் 1108

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration of an embracing reclining couple beneath a dark sky.

கன்னத்துடன் கன்னம் பதித்து கட்டித் தழுவினர்.

களத்தில் அவன் பெற்ற விழுப்புண்ணை மார்பில் கண்டு, இதமாக இதோ தருகின்றேன் ஒத்தடமென்று இறுகத் தழுவினாள் இரு மாங்கனியழுந்திட! யாழ் மீட்டி இசையெழுப்பும் அவள் செங்காந்தள் விரல்களுடன் வாள் தூக்கிப் போராடும் அவன் விரல்கள் பின்னிக் கொண்டன. விடுவித்துக்கொண்ட விரல்களாலே அவள் பட்டு மேனியினைத் தடவிச் சுகம் கண்டான். அந்தச் சுகம் அவனையுமறியாமல் அவளைக் கசக்கிப் பிழிவதுபோல் தழுவிக்கொள்ளச் செய்தது. மகிழம்பூ விரிந்ததுபோல் தோன்றுகின்ற தொப்பூழ் அவளுக்கு!

தன் வயிற்றோடு அது ஒட்டிக் கொள்ளும் வண்ணம், மெய்மறந்து தழுவினாள். அவளோ, அவன் குன்றத் தோள்களைத் தனதாக்கிக்கொண்டு தழுவற் போராட்டத்தில் அவனை வென்றிடத் துடித்தாள்.

ஆனைத் தந்தமெடுத்து அழகுறச் செதுக்கியதோ இந்தக் கால்கள் - அதற்கு மேல் ஒரு நூலிற் பாதியாய் நெளியுதே இடையும்!

தழுவலில் அவை வகிக்கும் இடம்; அடடா! சொல்லித் தெரிவதோ அந்த இன்பரசக் கலை! வெள்ளி நிலவும் வெட்கி மறையுது முகில் திரையில்!

நான்கு இதழ்கள் உமிழ்நீரை அமுதமாக்கி, நாடி நரம்புகளில் எல்லாம் இசை பெருக்கச் செய்கின்ற அற்புதம்தான் என்னே!

இப்படித் தழுவியும் அவளுக்கு நிறைவு ஏற்பட்டதா?

“இருவருக்குமிடையில் தென்றலைப் புகவிடாதீர் அத்தான்!” என்று அவள் வேண்டுகோள் விடுத்ததாகப் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிக் காட்டி, தழுவிக் கிடக்கின்ற காதலரைக் காட்சியாக்கினார் தனது கவிதை வரிகளில்! காற்று நுழையவும் இடமில்லாதபடி தழுவிட வேண்டுமாம்!

அந்தக் காதல் இணையொன்றை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே, வள்ளுவர், குறள் வாயிலாக அறிமுகப்படுத்தும் அழகே அழகு!

“ஒருவரையொருவர் உயிர்போலக் கருதும் காதலர் இருவர்க்கும் இனிமையான இன்பம் அளிப்பது; காற்று இருவர் உடலுக்கும் நடுவில் நுழைந்துவிடாதபடி தழுவிக் கொள்ளுதலேயாகும்”

என்று தழுவலின் சிறப்பைக் கூறுகிறது குறள்:

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.

அதிகாரம் - 111 - புணர்ச்சி மகிழ்தல்; பாடல் - 1108

காப்பக விவரிப்பு: Small centred Valluvar statue device below the chapter/song metadata.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்