பொருளடக்கம் 80 / 300
இன்பத்துள் இன்பம்
அச்சுப் பக்கம் 180–182 · ஸ்கேன் 197–199 · அதிகாரம் 63 (இடுக்கண் அழியாமை) — குறள் 629
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour court/praise illustration showing two bearded men in the foreground with a gathered group behind them.
“அன்பரே! தங்களுடைய தகுதி, திறமை, அறிவு, புலமை இவற்றை நான் இதுவரையில் யாரிடத்திலும் கண்டதுமில்லை; இனிமேல் காணப்போவது மில்லை. தங்களின் தலையெல்லாம் மூளை; அந்த மூளையிலிருந்து கிளம்பும் ஒலிக் கதிர்கள் இந்த உலகத்தின் இருட்டையே போக்கிடும் வல்லமை வாய்ந்தவை என்பேன்! தாங்கள் புன்னகை புரிகிறீர்கள்; வெறும் சிரிப்பா அது? இல்லை! தங்கள் இதயக் கடலின் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்ட சிந்தனை முத்துக்களின் கோவை அது! தங்கள் எழுத்து - தேன் பாகு, செங்கரும்பின் சாறு, ஆவின் பால், அமுத ஊற்று!
☆ தங்கள் பேச்சோ - யாழின் ஒலி, தென்றலின் தாலாட்டு, அருவியின் கீதம்! ☆ தங்களுடன் உரையாடுவதே ஒரு தனி இன்பம்! ☆ தங்களைப் போற்றாத நாவும் ஒரு நாவோ? ☆ தங்களை வணங்காத கரமும் ஒரு கரமோ?
☆ இப்படி ஓர் அறிவாளி இந்த உலகத்தில் இதுவரையில் பிறந்திடவே இல்லை.
இப்படிப் புகழ்ந்து கொண்டே இருந்தான் ஒருவன், அரங்கில் அமர்ந்திருந்த விழாத் தலைவரைப் பார்த்து!
விழாத் தலைவர் புன்னகை புரிந்தவண்ணம் அமர்ந்திருந்தாரேயொழிய அந்தப் புகழ்ச்சி மயக்கத்தில் ஆழ்ந்துவிடவில்லை என்பதை, அவரது முகமே தெளிவாக்கிக் கொண்டிருந்தது. புகழ்ந்து கொண்டிருந்தவன், தன் பேச்சை முடித்துவிட்டு எழிலார் பொன்னாடையொன்றை எடுத்து விழாத் தலைவருக்கு அணிவித்தான். மல்லிகை மாலை யொன்றினைச் சூட்டினான். அவர் கால்களில் விழுந்து வணங்கினான். மண்டபத்தில் அமர்ந்திருந்தோர் அனைவரும் வாழ்த்து முழக்கம் செய்தனர். புகழ்ந்து கொண்டிருந்தவன், விழாத் தலைவர் குறித்துத் தான் இயற்றிய பாடல் ஒன்றை இசைகூட்டிப் பாடத் தொடங்கினான். விழாத் தலைவரிடம், அருகிலிருந்த அவரின் நண்பர் கேட்டார்:
“உமக்குத்தான் எவ்வளவு பெருமை! எவ்வளவு புகழ்! இதைப் பார்க்கும்போது என் இதயமே இன்பத்தால் நனைக்கிறதே! ஆனால், உமது முகத்தில் இன்பத்தின் சாயலே தெரியவில்லையே, என்ன காரணம்?”
நண்பரின் கேள்விக்கு விழாத் தலைவர், அவர் காதோடு பதில் சொன்னார்:
“நண்பரே! எனக்கு ஏதோ பெருமையும் புகழும் ஏற்பட்டிருப்பது உண்மை தான்! ஆனால் இதோ இவர் வரம்பு கடந்து வானளாவப் போற்றிப் புகழுகிறாரே!... அவ்வளவுக்கு நான் ஏற்பவனா என்றால் இல்லை! மன்னர் அவைக் களத்துத் தலைமைப் புலவராக என்னை நியமித்திருக்கிறார்கள். அதற்கு உரிய பொறுப்புக்களை நான் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டுமே தவிர, ஆகா! இந்தப் பெருமை யாருக்குக் கிடைக்கும்? இதுவன்றோ இன்பமான நாள்? என்று நான் கருதிக்கொண்டு செயல்பட்டால் நாளைக்கு இந்தப் பொறுப்புப் போய்விடும். பிறகு, அய்யோ! பெருமை போய்விட்டதே! என்று நான் கவலையுற நேரிடுமல்லவா? எனவேதான் கூறுகிறேன்; இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றக்கூடாது.”
நண்பரால் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் மறுத்து வாதாடினார். விழாத்தலைவரான புலவர், நண்பரிடம் இறுதியாக ஒன்றைச் சொன்னார்:
“நண்பரே! நான் சொன்னால் நம்பமாட்டீர்! செயல் வாயிலாகக் காட்டுகிறேன்.”
புகழ்ந்தவன் பாடி முடித்ததும், புலவர் எழுந்து சிறிது நேரம் உரையாற்றி நன்றி கூறிவிட்டு ஓர் அறிவிப்பைச் செய்தார்.
“மன்னர் அவைக்கலைப் புலவர் பொறுப்புக் கிடைத்தமைக்காக என்னை இவ்வளவு பாராட்டினீர்கள். ஆனால், இந்த இன்பத்தை என்னால் அதிக நேரம் அனுபவிக்க முடியவில்லை. இப்போதுதான் அரண்மனையிலிருந்து ஓலை வந்தது. என்னை அந்தப் பொறுப்பில் நியமித்த ஆணையைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்களாம்!”
மன்றத்தில் கூடியிருந்தோரிடையே அதிர்ச்சி! இடிகொட்டு அமைதி! கண்ணீர் வெள்ளம்! அரங்கில் நின்று புகழ்ந்து கொண்டிருந்தவனைக் காணவில்லை.
புலவர் எழுந்து நடந்தார், மன்றத்தை விட்டு! அவருடன் அவர் நண்பரும் தொடர்ந்தார்!
அருகாமையில் ஒரு சிறிய மண்டபம். அங்கே அந்தப் புகழ்ந்தவன் நாலு பேரைக் கூட்டிவைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறான். அதனைப் புலவரும் அவர் நண்பரும் மறைந்திருந்து கேட்டுக் கொண்டனர்.
“என்ன தெரியும் இவனுக்கு? நான் அப்போதே நினைத்தேன். இவனைக் கொண்டு போய் அவைக்கலைப் புலவராக ஆக்கி இருக்கிறார்களேயென்று! நாடோடி இவன்! எழுத்தா அது? தலையெழுத்து! பேச்சா அது? பேயின் கூச்சல்! இவன் மூளையைச் சூளையில்தான் வைக்க வேண்டும். நல்ல காரியம் செய்தார் மன்னர்!”
புலவரின் நண்பரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; அவரைப் புலவர் அமைதிப்படுத்தினார்.
“அய்யோ! இது தாங்கமுடியாத துன்பம்! என்னை விடுங்கள். அவனைச் சின்னாபின்னமாக்குகிறேன்!” என்று நண்பர் குதித்தார்.
புலவர் விளக்கினார்:
“நண்பரே! இதை ஏன் துன்பம் என்று கருதுகிறீர்? சற்று முன்பு இதே மனிதர் என்னைப் புகழ்ந்தார்; இப்போது இகழ்கிறார்; அவ்வளவுதானே! அவர் புகழும்போது இன்பமாக இருந்தால்தானே இகழும்போது துன்பமாக இருக்கும்! இன்பம் வந்த காலத்தில் அதை விரும்பிப் போற்றி பாராட்டாமல் இருந்தால், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தின் வேதனையை அடையத் தேவையில்லை. அதனால்தான் நண்பரே, வள்ளுவர் கூறுகிறார்:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.
என்பதாக! எனவே இன்பத்தைத் தாங்கிக் கொண்டால், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளலாம். இன்பத்தில் மயக்கமுற்று அலைந்தால், துன்பத்தைப் புறங்காண இயலாது!
இவன் புகழ்ந்ததையும் இப்போது இகழ்ந்ததையும் நான் ஒன்றாகவே கருதுகிறேன். வாரும் போகலாம்!”
புலவரும் நண்பரும் அந்த இடத்தைவிட்டு அகன்றார்கள்.
அதிகாரம் - 63 - இடுக்கண் அழியாமை; பாடல் - 629
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்