பொருளடக்கம் 79 / 300
அ. ஒண்ணுதற் கோழ / ஆ. கடாஅக் களிற்றின்மேல் / இ. நோக்கினாள் நோக்கெதிர்
அச்சுப் பக்கம் 178–179 · ஸ்கேன் 195–196 · அதிகாரம் 109 (தகையணங்குறுத்தல்) — குறள் 1088, 1087, 1082
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration of a returning warrior approaching a young woman in a grove.
போர்க்களத்தில் யானைகளை வேல் எறிந்து வீழ்த்தி, குதிரைப்படைகளைத் தன் கணைகளின் வலிமையால் துரத்தியடித்து, எதிரிகளின் தேர்க்கால்களை வாள் கொண்டு வெட்டிச் சாய்த்து, வெற்றி முழக்கமிட்டவாறு வீரனொருவன் வீடு திரும்புகிறான். அவனை வரவேற்று மாலை அணிவித்து, மார்பகம் அழுந்தத் தழுவி, விழுப்புண்களில் இதழ்களால் ஒத்தடம் கொடுக்க, அவன் இனிய மனைவியாட்டி வீட்டில் காத்திருக்கமாட்டாள். காரணம்; இன்னும் மணமாகாத இளம் வீரன் அவன். அவனைப் பெற்றெடுத்த வீரத்தாய், வழிமேல் விழி வைத்து வீட்டின் வாயிற்புறத் திண்ணையிலே காத்துக் கிடக்கிறாள்; வீரத்திருமகனை வாரியணைத்து வாழ்த்து மலர் தூவ!
ஆனால் அந்த வீரனுக்கு அவன் வரும் வழியில், பிறிதோர் பெரும் படையை எதிர்த்து நிற்கும் எதிர்பாராத நிலைமை ஏற்பட்டு விடுகிறது. மலர்ந்த மலர்கள், மரம் செடி கொடிகளிலும் உதிர்ந்த மலர்கள், மண்ணிலும் அழகூட்டிக் கொண்டிருக்கும் சோலையிடையே தனியாக நடந்து வந்துகொண்டிருக்கும் அவனை, அந்தச் சேனை திடீரெனத் தாக்கி அதிர்ச்சியடையச் செய்துவிடுகிறது.
அவன் எதிரே நின்றது ஒரு பெண்தான்! அவளைக் கண்டவுடன் களம் பல கண்ட அந்தத் தீரன் திகைத்து நின்றுவிடுகிறான்.
ஒண்ணுதற் கோஓ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு.
என்ற குறள் அவன் நினைவுக்கு வருகிறது.
அதாவது, போர்க்களத்தில் பகைவர்கள் அஞ்சி நடுங்கிடக் காரணமாக உள்ள என் வலிமை, இந்தப் பேரழகியின் ஒளிபொரியும் நெற்றிக்கு முன்னால் முடங்கிப் போய்விட்டதே என்று வியப்படைகிறான். களத்தில் தேர்களின் முகப்பில் கதிரின் ஒளிபட்டு அந்தத் தேர்கள் ஒவ்வொன்றும் ஒளிப் பிழம்பாகக் காட்சி தரும்போதுகூடக் கண் கூசாமல் எதிர்த்து நின்று போர்புரிந்து, வெற்றி பெற்றிருக்கிறேன். அந்தத் தேர்ப்படையை வென்ற எனக்கு, இவளது நெற்றியின் ஒளிக்கு முன்னால் நிற்கவும் முடியவில்லையே என ஏங்குகிறான்.
தேர்ப்படையை அடுத்து யானைப்படையையும் அவளிடமே காணுகிறான். அதை வள்ளுவர் தீட்டும் அழகே அழகு!
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில்.
மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்துள்ள அழகிய மேலாடை, மதம் பிடித்த ஆண் யானையின் மேல் இட்ட முகபடாம் போன்று இருக்கிறது.
கண்ணை மறைக்கின்ற அளவுக்கு யானையின் முகத்தில் போடப்படுகிற முகபடாம் அமைவதால், அதனைக் ‘கட்படாம்’ என்கிறார் வள்ளுவர். யானை முகபடாத்தினையும் மாதர் மேலாடையையும் ஒப்பிடுவதன் வாயிலாக, விம்மிப் பூரித்து நிற்கும் பெண்ணின் மார்பகத்திற்கு யானையின் தலையையே உவமையாக்குகிறார் போலும்! தேர்ப்படையை அடுத்து, அந்த வாலிப வீரன் இந்த யானைப் படையையும் தன் எதிரே காண்கிறான்.
எதிர் எதிரே இரு படைகளும் எவ்வளவு நேரம் நின்றுகொண்டிருக்க முடியும்? “கீதை உபதேசம்” நடக்கிறதா என்ன? இல்லையே! அவள் கணை வீசத் தொடங்கினாள். ஆம்; அவனை நோக்கினாள். அந்தப் பார்வை அவனுக்கு எப்படியிருக்கிறது? அவன் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான்.
“அவள் என்னை நோக்கினாள். நான் அவளை நோக்கினேன். நான் பார்த்த பார்வைக்கு, அவள் திரும்ப என்னை எதிர்ப்பார்வை பார்க்கிறாள். அய்யோ! அவள் ஒருத்தியே போதும் என்னைத் தாக்கி வீழ்த்துவதற்கு! அத்துடன் நில்லாது, அவள் விழிகளால் என்னை நோக்குவது எப்படியிருக்கிறதென்றால்; அவள் என்னை வீழ்த்த ஒரு சேனையையும் கொண்டு வந்ததுபோல் இருக்கிறதே!”
போர்க்களத்தில் பகைவரைப் புறங்கண்ட அந்த மாவீரன், தன் எதிரே தேர்ப்படையாக, யானைப்படையாகத் தோற்றமளிக்கும் ஒரு தோகையைக் கண்டு எவ்வளவு தோல்வி மனப்பான்மைக்குத் தன்னை ஆளாக்கிக் கொள்கிறான் என்பதற்கு இந்தக் குறட்பாக்கள் அளிக்கும் விளக்கம், பலாச்சுளைபோல் இனிக்கிறதல்லவா?
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து.
அதிகாரம் - 109 - தகையணங்குறுத்தல்; பாடல்கள் - 1088, 1087, 1082
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்