பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 78 / 300

சாதலின் இன்னாது

அச்சுப் பக்கம் 176177 · ஸ்கேன் 193194 · அதிகாரம் 23 (ஈகை) — குறள் 230

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour forest illustration showing Kumanan-like ruler and a bearded poet conversing among trees.

குமண மன்னன், தனது தம்பியின் சூழ்ச்சியால் காட்டில் வாழ நேரிடுகிறது. நாடிழந்து நகரிழந்து நலிவுற்றுக் காட்டில் வாழும் அவனை, உயிருடன் விட்டுவைப்பதும் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து என நினைத்த அவனது தம்பி, அண்ணனின் தலையைக் கொண்டு வருபவர்க்குப் பொற்கிழி வழங்கப்படுமென்று அறிவிக்கிறான்.

குமணனுக்கும் இந்தச் செய்தி எட்டுகிறது.

அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையுடன் அரண்மனையில் வீற்றிருந்த மன்னன், அடவியில் அலைந்து திரியும் நிலையைப் பெற்றதுடன் துன்பம் அவனை விட்டுவிடவில்லை. சாவின் வடிவில் அவனைத் துரத்தத் தொடங்கியது.

களத்திலே வீரர்கள் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் சாவு என்றாலுங்கூட, அந்தச் சாவு தரும் துன்பத்தைத் திருவள்ளுவர் மற்ற துன்பங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தவறவில்லை.

அதனால்தான் அவர் “சாதலின் இன்னாதது இல்லை” என்றார். அதாவது சாவைவிடத் துன்பமானது வேறொன்றுமில்லையென்று அழுத்தமாகக் கூறுகிறார்.

அந்தத் துன்பத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உள்ள உறுதி கொண்டவர்கள் இருக்கலாம். ஆனாலும் சாவது என்பது துன்பமானதுதான். அதைவிடத் துன்பமானது வேறொன்றுமில்லையென்பது வள்ளுவரின் கருத்து. ஆனால், அந்தத் துன்பம்கூட இனியதாக ஒரு சமயத்தில் ஆகிவிடுகிறது என்கிறார் வள்ளுவர்! அது எந்தச் சமயத்தில்?

மீண்டும் குமணனிடம் செல்வோம்.

தம்பியின் ஆணைப்படி சாவு என்னும் துன்பம், தன்னை என்றாவது ஒருநாள்- அதுவும் விரைவில் அணுகிவிடும் என்று குமணன் எதிர்பார்க்கிறான். எப்படியும் ஒருநாள் மனிதன் மறைந்துதான் தீரவேண்டும் என்பது உண்மையென்றாலும், அதனை மாற்றிட இயலாது என்றாலும் வழுவிலே சென்றுகூடச் சாவைத் தழுவிக்கொண்டாலும் அந்த நேரத்தில் சாவு தரும் துன்பம் கொடுமையானதுதானே! அந்தத் துன்பத்தின் வருகையை எதிர்பார்த்துக் காட்டில் வாழும் காவலன் குமணனிடம், வறுமையில் வாடிய புலவர் ஒருவர் சென்றார்.

அவர் பெயர் சாத்தனார் என்பர்.

சாத்தனாரின் வறுமைக் கோலத்தைக் கண்டதும் குமணன் மனம் வருந்தினான்.

அவரது வறுமை நிலையவிட, அவன் மனத்தை மிகவும் வாட்டியது வேறொன்று உண்டு. என்ன அது? “அய்யோ! வறியவராக வந்துள்ள புலவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலைமை எனக்கு வந்துவிட்டதே!” என்று கலங்குகிறான்.

“அந்தநாள் வந்திலை அருங்கவிப் புலவோய் இந்தநாள் வந்துநீ நொந்தனை அடைந்தாய் தலைதனைக் கொண்டுபோய்த் தம்பிகைக் கொடுத்து விலைதனைப் பெற்றுன் வறுமைநோய் களையே!”

என்று புலவரைப் பார்த்துக் கூறுகிறான்.

சாவதைவிடத் துன்பம் வேறொன்றுமில்லையென்று உணர்ந்திருந்தாலும், தன் எதிரே நிற்கும் வறியவருக்கு ஒரு பொருள் வழங்கிட முடியாத நிலை வந்துவிட்ட போது சாவதுகூடக் குமணனுக்கு இனியதாக ஆகிவிடுகிறது. அதனால், தன் தலையைக் கொண்டு போய்த் தன் தம்பியிடம் கொடுத்தாவது பொற்கிழியைப் பெற்று வறுமையிலிருந்து விடுபடு என்று அவன் வேண்டுகிறான்.

தன் தலையை வெட்டித்தரத் தானே முன் வருகிறான்.

சாவதைவிடத் துன்பமானது வேறொன்றுமில்லை என மொழிந்த வள்ளுவர், வறியவர்க்கு எதுவும் வழங்கிட முடியாத நிலை வந்துவிட்டபோது அந்தச் சாதலும் இனியதே என்ற அருங்கருத்தினைப் பொழிந்திடுகிறார். இந்தக் குறளுக்கேற்ற ஓவியமாகத்தான் குமண வள்ளலின் வாழ்க்கைக் காவியம் அமைந்திருக்கிறது.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை

அதிகாரம் - 23 - ஈகை; பாடல் - 230

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்