பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 77 / 300

அ. இல்லை தவறவர்க்கு / ஆ. புலத்தலின் புத்தேள்நாடு

அச்சுப் பக்கம் 174175 · ஸ்கேன் 191192 · அதிகாரம் 133 (ஊடலுவகை) — குறள் 1321, 1323

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration showing a young couple beneath a flowering tree.

வானத்தில் முகிற்கூட்டம் திரள்கிறது. நிலமங்கை அண்ணாந்து பார்த்து முகம் பூரித்துக் கிடக்கிறாள். மழைக் காதலனைச் சந்தித்து நீண்ட நாட்களாயின. அவன் குறும்புத்தனங்களின் தழுவலுக்காக ஏங்கியிருந்தவளுக்கு, அவன் வரப்போகிற அறிகுறிகள் தெரிவதால் மகிழ்ச்சி பொங்குகிறது. நிலமகளின் எழிலுடலைத் தொடும் ஆசை தான், மழைக் காதலன் பாய்ந்தோடி வந்துவிட்டான். அவனை வாரி அணைத்துக்கொள்கிறாள் பூமகள்! நிலமும் நீரும் பொருந்திக் கலந்துவிட்டால் அதனைப் பிரிப்பது எளிதில் முடியுமா? எளிதில் முடியாது என்கிறது திருக்குறள். குறுந்தொகை, இந்தக் கருத்தை மெருகூட்டி மேலும் விரிவாக வழங்குகிறது. சிவப்பு நிறமுடைய மண்ணில் மழைபெய்து தேங்கி நின்றால், அந்த மண்ணின் நிறத்தை அந்த நீரும் பெற்று இரண்டறக் கலந்துவிடுகிற காட்சியைக் குறுந்தொகை காட்டுகிறது.

நிலமும் நீரும் ஒன்றிக் கலந்திடுவதைக் குறளும் குறுந்தொகையும் அன்புடைய காதலர்களின் நெஞ்சம் இணைந்திடுவதற்கு உவமையாகக் கூறுகின்றன.

அத்தகைய நிலையில் உயிர், மெய், உள்ளமெலாம் ஒன்றாகமாறிப் பின்னிப் பிணைந்துள்ள காதலரைக் காணுகிறோம், அந்த மாந்தோப்பின் நடுவில்!

மாங்குயில்கள் இசை முழங்க, தென்றலின் நட்டுவாங்கத்திற்கேற்ப மாவிலைகள் நடனமாடுவதைத் தங்கள் காதல் கொலுமண்டபத்தின் கலை நிகழ்ச்சியாகக் கொள்கிறார்கள் அவர்கள்!

அந்த அன்புநிறை இணையிடையேய்தான் ஊடல் ஏற்படவேண்டும்; அதுவே இன்பம் என்று அறுதியிட்டுக் கூறுகிறது குறள். அந்த இன்பமும் எப்படிப்பட்ட இன்பமாம்! அந்தக் காதலர்களையே பேச வைக்கிறார் வள்ளுவர்; நாமும் கேட்டறிவோம்.

“கண்ணே! என்மீது எந்தத் தவறும் இல்லாதபோதுகூட ஊடல் கொண்டு கூட மறுத்திடுகிறாயே; சிலநேரங்களில் - அது ஏன் இன்பமே?”

“அத்தான்! தவறேதும் நீங்கள் இழைக்கவில்லையென்றாலும் தவறு இழைத்தது போல் நான் பாவித்துக்கொண்டு ஊடுவதிலும் எனக்குப் பெரும் இன்பம் இருக்கிறது.”

“எப்படி கண்ணே! எங்கே அதனை விளக்கிடு!”

“நான் ஊடல் கொண்டு அகன்று செல்வதால், உங்களுக்கு என்மேல் அன்பு மிகுதியாகிறது. உங்கள் அழகிய கரங்கள் என்னைப் பற்றித் துடிக்கின்றன. என்னை இழுத்துப் போர்த்திக்கொள்ள மாட்டீர்களா? என்று என் இதயமும் துடித்திடும். இப்போது புரிகிறதா நான் ஊடல் கொள்வதன் ரகசியம்?”

“அன்பே! அந்த ரகசியத்தை நீ வெளியிட்டு விட்டாலுங்கூட, நீ இனி எத்தனை முறை ஊடல் புரிந்தாலும் ஊடலுக்குப்பின் விளைகிற இன்பம் குறைந்துவிடப் போவதில்லை!”

“அத்தான்! தேவருலகம் என்று கூறுகிறார்களே; நிலமும் நீரும்போல் நெஞ்சாற் கலந்த நாம் ஊடுவதிலே இன்பம் தரக்கூடிய இடமா அது? இருக்காது! இந்த உலகத்தை மிஞ்சக்கூடிய உலகமாக அது இருக்கவே இருக்காது!”

மாங்குயில்கள் இசையை நிறுத்தின! அந்தக் குயில்கள் ஒன்றையொன்று துரத்திப் பறந்தன! அவர்களால் வந்த வினை அது!

இந்தக் குறளோவியத்திற்கான இரண்டு குறட்பாக்கள் இதோ:

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவரளிக்கு மாறு.
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து.

அதிகாரம் - 133 - ஊடலுவகை; பாடல்கள் - 1321, 1323

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்