பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 76 / 300

வெள்ளத் தனைய

அச்சுப் பக்கம் 172173 · ஸ்கேன் 189190 · அதிகாரம் 63 (இடுக்கண் அழியாமை) — குறள் 622

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour household illustration showing a seated bearded man handling goods inside a house while a woman stands at the doorway.

நல்ல பாம்பு எனச் சொல்கிறோம் என்றாலும் கொடிய நஞ்சு கொண்ட பாம்பு அது! பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழி அதனால்தானே பிறந்தது! அதனுடைய போக்கில் ஏதாவது தடை ஏற்பட்டால் அந்தத் தடை, தன்னை எதிர்ப்பதற்காகவே வந்த தடை என அது கருதிக்கொண்டு சீறிப் பாய்ந்து தன்னுடைய நச்சுப் பல்லை அழுத்திவிடும். அந்தப் பல்லின் ஊசி போன்ற துளையின் வழியாக நஞ்சு இறங்கி, தாக்கப்பட்ட உடலின் உள்ளே சென்று குருதியை நஞ்சாக்கிக் கொண்டுவிடும். அப்படித் தாக்கப்பட்டது, ஒரு மிருகமாகவும் இருக்கலாம்; அல்லது மனிதனாகவும் இருக்கலாம். பெரும்பாலும் தனக்கு ஒரு தடை வரும்போது தன்னைக்

காத்துக்கொள்ளவே அது கடிக்கிறது. பூந்தோட்டத்தில் புல் தரையில் பஞ்சுப்பாதம்பட நடந்து செல்லும் பாவையொருத்தி, அவளையறியாமல் பாம்பொன்றை மிதித்துவிட்டால், உடன் அதனுடைய நச்சுப் பல்லுக்கு இரையாக நேரிடுகிறது.

என் அருமைத் தந்தை முத்துவேலரின் வாழ்க்கையில் நடைபெற்ற, ஒரு நிகழ்ச்சியைக் கூற விழைகிறேன். என்னைப் போலவே அவர் வாழ்விலும் துன்பங்கள் தொடர்கதைகளாக இருந்திருக்கின்றன. ஒரு நாள் அவர், கிராமத்து ஓட்டு வில்லை வீட்டின் உள்ளே அமர்ந்து அமைதியாக ஏதோ பணியில் ஈடுபட்டிருக்கிறார். கிராமத்து வீடுகளில் வழக்கமாக இருக்கும் பரண், அவர் தலைக்கு மேல் இருந்திருக்கிறது. அதில்தானே வீட்டில் உள்ள தட்டுமுட்டுச் சாமான்கள், பாய்கள், படுக்கைகள் எல்லாமே நிறைந்து கிடக்கும்.

அந்தப் பரணில் நெளிந்துகொண்டிருந்த நல்ல பாம்பொன்று எப்படியோ தவறிப்போய், ஓர் இடுக்கின் வழியாகக் கீழே விழுந்திருக்கிறது. விழுந்த பாம்பு, நேராகத் தரையில் விழாமல், என் தந்தையின் தோள்மீது விழுந்திருக்கிறது. உடனே என் தந்தை கூச்சலிட்டு அலறிக் கையால் அந்தப் பாம்பைத் தூக்கி எறிய முயன்றிருப்பாரேயானால், பாம்பு தலையைத் தூக்கிப் படத்தை விரித்து இமைப்பொழுதில் அவர் உடலில் நஞ்சினை ஏற்றிவிட்டு ஓடியிருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தன் தோளில் பாம்பு விழுந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டார். அதே சமயம் பாம்பின் இயல்பையும் நினைவுபடுத்திக் கொண்டார். ‘நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் துடித்துத் துள்ளினால் அது கடித்துவிடும்; ஆகவே அமைதியாக இருப்பதே நல்லது’ என்ற முடிவுக்கு வந்தார். பாம்பு தோள்மீது ஊர்ந்து கொண்டிருக்கிறதே என்ற அதிர்ச்சிக்கு இடம் தராமல், ஆடாமல் அசையாமல் அப்படியே சிலைபோல உட்கார்ந்திருந்தார். தோளில் இருந்த பாம்பு, மெல்ல அவர் தொடை வழியாக இறங்கிப் பிறகு தரையில் நெளிந்து அங்கிருந்து அகன்றுவிட்டது. இந்த நிகழ்ச்சியை என் தாயார் அஞ்சுகத்தம்மை அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.

எனவே நமக்கு எவ்வளவுதான் துன்பம், வெள்ளம்போல் வந்தாலும் அந்தத் துன்பத்தின் இயல்பு என்ன என்பதை உணர்ந்துகொண்டு செயல்பட்டால், அந்தத் துன்பம் நமக்கு கேடு ஒன்றும் செய்யாது.

“அறிவுடைய ஒருவன் தனக்கு வரும் துன்பம் வெள்ளம்போல் அளவு கடந்ததாக இருந்தாலும் அவன் அந்தத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் அத்துன்பத்தின் வேதனையிலிருந்து விடுபடுவான்” என்பது வள்ளுவர் வாக்கு! அதாவது துன்பத்தின் இயல்பை நாம் புரிந்துகொண்டால், அந்தத் துன்பம் தானே கெட்டுவிடுமாம்.

பாம்பின் இயல்பைப் புரிந்துகொண்டது மட்டுமல்ல, அதை நினைவிலும் கொண்டதால்தானே பாம்பினால் ஏற்பட்ட இருந்த துன்பம் அகன்றது!

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்

அதிகாரம் - 63 - இடுக்கண் அழியாமை; பாடல் - 622

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்