பொருளடக்கம் 75 / 300
புன்கண்ணை வாழி
அச்சுப் பக்கம் 170–171 · ஸ்கேன் 187–188 · அதிகாரம் 123 (பொழுதுகண்டிரங்கல்) — குறள் 1222
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration showing two women in the foreground with a man's face represented in the sun behind them.
‘தன்னைப்போல உளம் கலங்கிய நிலையில் உலகில் எந்தப் பெண்ணும் இருக்கமாட்டாள்’ என்று எண்ணியவாறு அந்த அழகிய மங்கை கண்ணீர் உகுத்தாள். மாவிலையில் தேங்கியிருந்து வடிந்த பனித்துளிகள் மாங்கனிகளின் மீது ஊர்ந்து செல்வதைப்போல், அந்தக் கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தது.
‘இதயத்தை விட்டுப் பிரியாத துடிப்பைப்போல் என்னை விட்டுப் பிரியாமல் இருப்பேன்’ என்றார். இதோ பிரிந்துவிட்டார். ஆயினும் என் இதயம் இன்னும் நிற்காமல் இருக்கிறதே’யென்று பெருமூச்சு விட்டாள்.
உன் உயிர் மூச்சு நான்தான் என்றார். இதோ அந்த மூச்சு என்னைவிட்டு விலகிச் சென்றுங்கூட நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே! காலை மலர்ந்ததும் முத்தம் பொழிந்துவிட்டு, நாளை வருகிறேன் என்று அந்தக் காலை பிரிந்து விட்டான். நாளைக் காலைவரை பொறுத்திருக்க இயலாமல் அந்தப் பாவைச் சிரிப்பழகி பரிதவித்தாள்.
பகல்பொழுது முழுதும் அவளுக்குத் தணல்மீது தணல் கொட்டினாற்போல் இருந்தது. பகல் அகன்று மாலைப்பொழுதும் வந்தது. அந்த மாலைப்பொழுது எப்படி வந்தது? அதுவும் ஒரு மங்கை உருக்கொண்டு வந்தது. காதலனைப் பிரிந்து கலங்கித்
தவிக்கும் அவள், எதிரே வந்த மாலையெனும் மங்கையை நோக்கினாள். மாலைப்பொழுதுக்கு ஒளியில்லை அல்லவா?
பகலும் இரவும் தம்முன்னே விரவி, கலங்குதல் தோன்ற நிற்பதுதானே மாலை நேரம்!
அந்த ஒளியிழந்த மாலைப்பெண்ணை அவள் கேட்டாள்.
“நீ ஏன் மயங்கிக் கலங்கியிருக்கிறாய்? நான்தான் அவரைப் பிரிந்து வேதனை தாளாமல் துவண்டுபோன கொடியாகக் காட்சி தருகிறேன். உனக்கென்னடி வந்தது?”
அவள் கேள்விக்கு மாலைப்பெண் பதில் கூறவில்லை. மேலும் அவள் முகம் வாடத் தொடங்கியது.
அவளோ விடவில்லை. மாலை மங்கை கூறவேண்டிய பதிலை அவளே கூறினாள்.
“ஒருவேளை நீயும் என்னைப் போலத் துன்பப்படுகிறாயோ?”
மாலைப் பெண்ணாள், மெல்ல இதழசைத்துச் சோகம் இழையோடச் சொற்களைச் சிந்தினாள்.
“காலைமுதல் இதுவரையில், ஒளிபடைத்த மேனியளாய்க் களிநடனம் புரிந்தேன். என் கண்நிகர் காதலன் கதிரவன், என்னைக் கட்டித் தழுவிக்கொண்டே இருந்தான். அந்த இன்பசுகத்தில் மெய் மறந்திருந்தபோது, மெதுவாகத் தன் கரங்களைத் தளர்த்தி என்னைத் தரையில் கிடத்திவிட்டு மேலைத் திசை நோக்கிச் சென்றுவிட்டான். துன்பமிருக்காதா எனக்கு? நீயே சொல்!”
என்று, மாலை மங்கை அவள் தோள்மீது கைவைத்துச் சாய்ந்து கொண்டாள். மாலையின் கூந்தலைக் கோதியவாறு அவள் கூறினாள்.
“மயங்கிய மாலைப்பெண்ணே! என் துணைவன்தான் இரக்கமற்றவன். என்னை ஒளியிழக்கச் செய்துவிட்டுப் பிரிந்து சென்றான் எனக் கருதியிருந்தேன். உன் துணையும் என் காதலனைப்போல் இரக்கம் அற்றவன்தானா?”
ஒளி குன்றிய மாலைப்பெண்ணுக்கு, அந்த வார்த்தைகள் சற்று ஆறுதல் அளித்தன போலும்!
துணையைப் பிரிந்து துன்புறுகிற இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்வதோடு - தங்கள் துணைவர்களை இரக்கமற்றவர்கள் என்று குறிப்பிடுவதன் வாயிலாக, அவர்கள் மீது கொண்டுள்ள ஆறாக் காதலையல்லவா வெளிப்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்ல; மாலைப்பொழுது அவளுக்குத் துன்பம் செய்கிறதாம்! அதனால் அந்த மாலைப் பொழுதுக்கும் இன்பம் இல்லையாம். எனவே “வாழி!” என்று குமுறலோடு வாழ்த்துகிறாள். இதோ குறள்:
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை
அதிகாரம் - 123 - பொழுதுகண்டிரங்கல்; பாடல் - 1222
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்