பொருளடக்கம் 72 / 300
அ. இடுக்கண் வருங்கால் / ஆ. ஒன்றொன்றித் தந்த
அச்சுப் பக்கம் 162–163 · ஸ்கேன் 179–180 · அதிகாரம் 63 (இடுக்கண் அழியாமை) — குறள் 621; அதிகாரம் 59 (ஒற்றாடல்) — குறள் 588
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour royal-court illustration occupying the upper part of the page: a crowned king points outward while two attendants stand behind him.
தன் அமைச்சரிடம் கனிந்த அன்பு காட்டி வரும் மாமன்னன் ஒருவன், ஒரு நாள் சற்றுக் கடுமையாகப் பேசி அவமதியப்படுத்தி விட்டான். அதற்குக் காரணமே அமைச்சரைப்பற்றி மன்னனிடம் ஒற்றன் தந்த தவறான தகவலேயாகும். அரசனுக்கு எதிராக அமைச்சர் சூழ்ச்சியில் ஈடுபடுகிறார் என்பதே, அந்த ஒற்றன் கண்டறிந்ததாகக் காவலனிடம் கூறப்பட்ட செய்தியாகும். நாடாளும் காவலனால் முதலில் நம்பத்தான் முடியவில்லை. அந்த ஒற்றனுக்கு அமைச்சரைப் பிடிக்காது என்பதும் அந்த வெறுப்பின் காரணமாக இப்படி ஒரு விபரீதப் பொய்யை அவன் விளைத்து அறுவடை செய்து வெற்றி கண்டுவிட்டான் என்பதும், மன்னனுக்குத் தெரியவில்லை. தன் சினம் கண்டு தலைகுனிந்தவாறு வெளியேறிய அமைச்சரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்திட வேண்டுமென்று மன்னன் கருதினான். ஒற்றனை மீண்டும் அழைத்து, அமைச்சரின் ஒவ்வொரு அசைவினையும் மிகக்கூர்மையாகக் கவனித்திடுமாறு ஆணை பிறப்பித்தான். அதே ஒற்றன்தான்! அரசனுக்கும், அமைச்சருக்கும் பிளவு உருவாக்கிடச் செயல்பட்ட அதே ஒற்றன்தான்! ஒற்றர்களும் மனிதர்கள்தானே! அவர்களிலும் சிலர் விருப்பு வெறுப்புக்கு ஆட்படுகிறவர்கள்தானே! அரசாணையை நிறைவேற்ற அந்த ஒற்றன் கிளம்பிவிட்டான். அவனை அனுப்பியபிறகு, அரசனுக்கு சிந்தனை வேகமாகச் சுழன்றது. அந்த ஒற்றன் கூறுவது உண்மைதானா என்று அறிந்திடவும் அவன் நேர்மையாகச் செயல்படுகிறானா என்று தெளிந்திடவும் அவனுக்கும் தெரியாமல் இன்னொரு ஒற்றனை அனுப்புவதே சாலச் சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறான். அவ்வாறே இன்னொரு ஒற்றனுக்குக் கட்டளையிடப்படுகிறது. முதல் ஒற்றன் பெயர் ஒதியன்! அடுத்து அனுப்பப்பட்டவன் பெயர் இனியன்!
அன்றிரவு, அமைச்சர் இல்லத்துக்கு வெளியில் மாறுவேடத்தில் ஒதியன் உலவுகிறான். ஒதியனுக்குத் தெரியாமல் மாறுவேடத்தில் இனியனும் அந்தப் பகுதியில் திரிந்து கொண்டிருக்கிறான். அமைச்சர், மாளிகைக்குள் உரையாடுவது வெளியே
கேட்கிறது. ஒதியனும் இனியனும் ஒருவரையறியாமல் ஒருவர் வேறு வேறு இடங்களில் நின்று அந்த உரையாடலைக் காது கொடுத்துக் கேட்கின்றனர். அமைச்சரும் அவர் துணைவியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அமைச்சரின் மெய்க்காப்பாளன், மாளிகைக்கு வெளியே மாறுவேடத்தில் இருவர் பதுங்கியிருப்பதுகண்டு உடைவாளை ஓங்கிப் பாய்கிறான். ஒற்றர்கள் காற்றைக் கிழித்துக் கொண்டு புறந்தோடி விடுகிறார்கள்.
மறுநாள் காலை, மன்னனை ஒதியன் சந்திக்கிறான். “என்ன நடந்தது? என்ன நடக்கிறது?” எனக் கேட்கிறான் மன்னன்.
“தங்களை எதிர்ப்பது என்று அமைச்சர் முடிவுசெய்து, அதற்கு ஒப்பானது எதுவுமில்லையென்று தன்னுடைய மனைவியிடம் கூறியதை என் காதுகளாலேயே கேட்டேன்” என்கிறான் ஒதியன்.
“சரியாகச் சொல்! என்ன வார்த்தைகளைக் கூறினார்?”
“‘அடுத்தூர்வது அஃதொப்பது இல்’ என்று அமைச்சர் தன் துணைவியிடம் கூறினார். அதற்குப் பொருள்; நெருங்கி எதிர்ப்பதற்கு ஒப்பானது வேறு எதுவுமில்லை என்பதுதானே அரசே!” என ஒதியன் உருக்கமுடன் கூறியதும் மன்னன் உரக்கச் சிரித்து விட்டான். அந்தச் சிரிப்பு ஒலி அடங்குவதற்குள் இனியனும் அங்கு நுழைந்து விட்டான்.
“என்ன, இனியா? என்ன அறிந்து வந்தாய்?”
“அரசே! அமைச்சரின் துணைவியார் அமைச்சரைப் பார்த்து; ‘உங்களுக்கு இப்படி ஒரு துன்பம் வந்ததே! மன்னரே உங்களைச் சந்தேகித்துச் சோதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதே!’ என்று வருந்தினார். அதற்கு அவர் ஆறுதல் கூறும் பொருட்டு,
இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல்
என்ற குறளைக் குறிப்பிட்டார்.”
மன்னன் மீண்டும் சிரிக்கத் தொடங்கினான். பிறகு ஒதியனிடம் உரிமையாய்:
“ஒதியா! துன்பம் வந்தால் கலங்காமல் இருந்து அந்தத் துன்பத்தை எதிர்த்து வென்றிடவேண்டும் என்ற குறளின் கருத்தைக் கூறியிருக்கிறார் அமைச்சர். நீ, அவர்மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகப் பாதிக்குறளைப் பயன்படுத்தி எனக்கும் அவருக்கும் பகைமூட்டப் பார்க்கிறாய்! உன்னைப்போலவும் சில ஒற்றர்கள் இருப்பார்கள் என்று அறிந்துதான் வள்ளுவர், ‘ஒரு ஒற்றன் தெரிந்துவந்து சொன்ன செய்தியை, மற்றொரு ஒற்றனைவிட்டு அறிந்துவரச் செய்து ஒப்பிட்டுப் பார்த்து உண்மை காணவேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
இந்தக் குறள் தரும் அறிவுரையைக் கேட்டதனாலன்றோ உன் தவறு எனக்குப் புரிந்தது? ஓடு; என்னுமுன் நில்லாதே! இனியா! இப்போதே சென்று அமைச்சரை நான் அன்புடன் அழைத்ததாகக் கூறி அழைத்து வா!”
இனியனும் அமைச்சரை அழைத்திடச் சென்றான். மன்னனும் இன்முகத்துடன் அமர்ந்தான்.
அதிகாரம் - 63 - இடுக்கண் அழியாமை; பாடல் - 621
அதிகாரம் - 59 - ஒற்றாடல்; பாடல் - 588
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்