பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 71 / 300

அ. கொடியார் கொடுமையின் / ஆ. மன்னுயிர் எல்லாம்

அச்சுப் பக்கம் 159161 · ஸ்கேன் 176178 · அதிகாரம் 117 (படர்மெலிந்திரங்கல்) — குறள் 1168, 1169

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

மலர்ப்பூங்கா - அதனிடையே மணிமண்டபம் - மண்டபத்திற்குள் மஞ்சம் - மஞ்சத்தில் வஞ்சிக்கொடி!

கொடியல்லவா, அதனால் நினைவுக்காற்றில் நெளிந்துகொண்டிருக்கிறது. நினைவும் காதல் பிரிவைப் பற்றியது. ஆதலால், அந்தக் கொடியுடல், நெளிவதோடு மட்டுமல்ல; துவளவும் செய்கிறது.

இமைகளை மூடிப்பார்க்கிறாள். அவற்றையும் பொருட்படுத்தாமல் தடையை மீறி, அவள் விழிகள் அவனைத் தேடிப் புறப்படுகின்றன. தடையினால் பயனில்லையென்று இமைக்கதவுகளைத் திறந்து விட்டுவிடுகிறாள்.

அந்த இருண்ட அறையில் அவளது அழகை அணு அணுவாகக் கண்டு ரசித்துக்கொண்டிருக்கும் அந்த விளக்கை அணைத்துவிடலாமா என்ற கேள்வி எழுகிறது. ‘அணைத்தல்’ என்ற சொல் ஆயிரமாயிரம் உணர்வுகளை எழுப்புகிறது அவள் நெஞ்சில். தலையணையை மார்போடு இறுக அணைத்துக்கொள்கிறாள். காதலனின் வடிவை, அவளே எழுதி அங்கு வைத்திருக்கிறாள். அந்த ஓவியத்தின் கன்னங்கள் ஈரமாகின்றன. எனினும் அவள் இதழ்களின் பசி தீரவில்லை. பட்டுப் பாதங்கள் தரையில் பட்டிடச் சிறிது நேரம் உலவுகிறாள். பின்னர் தாமரை மொட்டுக்கள் மேலே நோக்கிட மஞ்சத்தில் சாய்கிறாள். அவள் அவசரத்திற்கு இரவுப்பொழுது ஓடுவதாகத் தெரியவில்லை.

காதலன் உடன் இருக்கும்போது, கட்டித் தழுவி இன்பக் கனிரசம் பருகிய போது இரவுகள், பந்தயக் குதிரைகள்போல் ஓடியதாகத் தெரிந்தது அவளுக்கு! அவசரக்கார இரவு அதற்குள் தொலைந்துவிட்டதே என்று வசைகூடப் பாடியிருக்கிறாள். இன்றோ, அந்த இரவு ஆமையைக் காட்டிலும் குறைவான வேகத்தில் நடப்பதாகத் தோன்றியது.

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா.

என்னைப் பிரிந்து சென்ற கொடியவர் எனக்கு விளைத்த பிரிவுக் கொடுமையைவிட; விடியாமலே நீண்டுகொண்டு போகிற இந்த இரவு கொடியதாகும் என்று இரவின்மீது சீறி விழுகிறாள். பாவம், இரவு!

அந்தப் பைங்கிளியின் கோபம்கண்டு நடுங்குகிறது. பிறகு அவளுக்கே, இரவைக் கடிந்து கொண்டது அந்த இரவின் மீது இரக்கத்தை ஏற்படுத்துகிறது. பிரிந்த இரவுகள் குறைவு; காதல் புரிந்த இரவுகள் அதிகமன்றோ! அதனால் ‘கொடிய இரவு’ என்று கூறிய அந்த வார்த்தையைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறாள்; இரவின்மீது இப்போது ஒரு பரிவு!

முழுப்பக்க ஓவியம் — இப்பக்கத்தில் அச்சிட்ட உரை இல்லை.

இந்த உலகத்தில் இரவு வேளையில் காதலைப் பிரிந்து, தான் ஒருத்தி மட்டுமே தனித்திருந்து தவிப்பதாக அவளுக்கு நினைவு! ஆம்; பிறரைப் பற்றி அவளுக்கென்ன கவலை? அவளும், அவள் காதலனும் இருக்குமிடமே அவளுக்கு உலகம். அவனில்லாத இடம் அவளுக்குப் பாலையினும் கொடிய பகுதியேயாகும்.

அதனால்தான், தணல்பட்ட தளிர்வாழைக் குருத்தைப் போல் அவள் வதங்குகிறாள். உண்ண உணவில்லையே என்று ஒருவன் வாடுவது இயல்பு! இங்கோ, உணவு; தன்னை உண்பதற்கு அவன் இன்னும் வரவில்லையே என்று வாடுகிறது.

அந்த வாட்டத்தின் காரணமாகத்தான் இரவுக்கு, வசை கிடைக்கிறது. பிறகு அதுவே இரவின்பால் இரக்கமாக மாறுகிறது.

“உலகில் எல்லா உயிர்களையும் தூங்கச் செய்கின்ற இரவே! உனக்கு இப்போது என்னைத்தவிர வேறு யாரும் துணையில்லை. உன் நிலை இரங்கத்தக்கது.”

என்று இரவைப் பார்த்து இரங்கல் தெரிவிக்கின்றாள். உயிரனைய தன் ஆளனை எண்ணி எண்ணி, அவள் ஒருத்திதான் தூக்கமின்றிப் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறாளாம். அவளும் தூங்கியிருந்தால், பாவம் - இரவுக்கு யாருமே துணையிருக்கமாட்டார்களாம். இரவில் தனக்கேற்பட்ட பிரிவுத் துன்பத்தை எவ்வளவு அழகாக வெளியிடுகிறாள் அந்தப் பாவை!

அவளா கூறுகிறாள் - அவளை வள்ளுவர் அவ்வாறு கூற வைக்கிறார்!

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை

அதிகாரம் - 117 - படர்மெலிந்திரங்கல்; பாடல்கள் - 1168, 1169

காப்பக விவரிப்பு: Small centred Valluvar-monument illustration printed below the chapter/song metadata.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்