பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 70 / 300

சிதைவிடத்து ஒல்கார்

அச்சுப் பக்கம் 157158 · ஸ்கேன் 174175 · அதிகாரம் 60 (ஊக்கம் உடைமை) — குறள் 597

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour battlefield illustration occupying the upper half of the page: a war elephant covered with arrows amid wrecked chariots and weapons.

நால்வகைப் படைகளும் மோதிக்கொள்ளும் போர்க்களம். வாள்கள் மின்னலென ஒளி வீசுகின்றன. கணைகள், மழையெனப் பொழிகின்றன. முரசுகள், இடியென முழங்குகின்றன. தேர்களும் புரவிகளும் பாய்ந்தோடித் தாக்கும் வேகத்தில், களத்தில் சாய்ந்து கெடுகின்றன. மேகக்கூட்டம்போல் வரும் யானைக் கூட்டம், குன்றுகள் மோதுவதுபோல் போரிடுகின்றன. பிறந்த மண்ணின் பெருமையைக் காக்க, இருதரப்பு வீரர்களும் களத்து மண்ணில் குருதி சிந்துகின்றனர். இறுதி வெற்றி, இருதரப்பினரில் ஒருதரப்பினர்க்கே கிட்டுகிறது. எனினும் புறங்கொடாது போரிட்டு மாண்டிடச் சபதமேற்று வில்லும் வேலும் வாளும் கேடயமும் தாங்கிய மறவர், அந்தக் களத்தினில் அங்குமிங்கும் துள்ளிச் சென்று வீர விளையாட்டு நிகழ்த்துகின்றனர்.

ஆங்கோர் யானை, தன் துதிக்கையைத் தூக்கியவாறு போர்முழக்கம் புரிந்துகொண்டு, எதிர்த்துவரும் வீரர்கள்மீது தாக்குதலைத் தொடங்குகிறது. விண்முட்ட வளர்ந்து நிற்கும் மலையொன்றின் உச்சியிலிருந்து பெரும் பாறையொன்று நகர்ந்து கீழ்நோக்கி வரும்போது இடையில் நிற்கும் செடி, கொடி, சிறு மரங்கள் அனைத்தும் அழிந்துபடுதல்போல், அந்த யானையின் தாக்குதலைத் தாளாது பல வீரர்கள் வீழ்கின்றனர். அதன் காலடியில், வீரர்கள் தலைகள் முற்றிய தேங்காய்கள் போல் ஆகின்றன.

வீறுகொண்டு போரிடும் அந்த யானையின்மீது, அதில் ஏறிவந்த தலைவனில்லை. அவன் களம்பட்டான் போலும். அதனால்தான் அந்த யானை சினங்கொண்ட புலிபோலப் பாய்கிறது. அதனை வளைத்து மாய்த்திட நான்குபுறமும் தேர்ப்படை சூழ்ந்தது. எட்டுத் தேர்கள் சுற்றி நின்றன. எஃகுள்ளம் படைத்த தளபதிகள், எடுத்தனர் வில்லை! பூட்டினர் கணைகளை! தொடுத்தனர் யானைமீது! ஒன்றிரண்டு நூறு எனப் பல நூறு அம்புகள் அந்தப் போரிடும் யானையின் உடலெங்கும் தைத்தன. அம்புகள் தைத்த அந்த யானையின் உடலே மறைந்துவிட்டது என்கிறார் வள்ளுவர்.

ஆம், அவ்வளவு பெரிய உடலை மறைக்குமளவுக்கு அம்புகள் அதன்மீது தொத்திக் கொண்டிருக்கின்றன என்றால், எவ்வளவு அம்புகள் பாய்ந்திருக்க வேண்டும்! யானை, முள்ளம்பன்றிபோல் காட்சி தந்திருக்கக்கூடும்! நூற்றுக் கணக்கான அம்புகளால் புண்பட்ட யானை, ஊக்கம் தளரவில்லை! அய்யோ! இத்தனை அம்புகளா? என்று அதிர்ச்சியடைந்து அந்த இடத்தைவிட்டு ஓடிவிடவில்லை. பிறகென்ன செய்கிறது? அந்தச் சூழ்நிலையிலும் அது ஊக்கம் தளராத தன்னுடைய பெருமையை நிலைநாட்டுகிறது. மேனியில் இனி ஒரு அம்புகூடப் படுவதற்கு இடமின்றி அத்தனை அம்புகள்!

யானை, தன் இரு முன்னங்கால்களையும் மேலே தூக்குகிறது. துதிக்கையைக் கம்பீரமாக உயர்த்துகிறது. தன்னைச் சுற்றி நிற்கும் தேர்களையும் தேர்களில் உள்ள தளபதிகளையும் பார்க்கிறது. இமை கொட்டித் திறப்பதற்குள் பெரும் ஓலியுடன் தன் எதிரேயுள்ள ஒரு தேரைப் பொடி செய்கிறது. மற்றொரு தேர் நொறுங்குகிறது. ஏனைய தேர்களில் உள்ள தளபதிகள் சிறிதுநேரம் திகைக்கின்றனர். தன் வாழ்வு முடிவதற்குள் அந்தக் களத்தில் பகைவர்கள் பலர் வாழ்வை முடிப்பதென அந்த யானை சுழலும் கடுமைகண்டு அனைவருமே வியப்படைகின்றனர். வள்ளுவரும் அதற்கென ஓர் அழகான குறள் வழங்கி ‘ஊக்கம் உடைமை’யின் உயர்வினை எடுத்துக் காட்டுகிறார்.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப் பாடூன்றும் களிறு.

‘மேனி மறையுமளவுக்குக் கணைகளால் புண்பட்டாலும்கூட யானை, இறுதிவரையில் தன் பெருமையை நிலைநாட்டும். அதுபோல், ஊக்கம் உடையவர்கள், அழிவே வந்தாலுங்கூடத் தளர்ச்சி அடைய மாட்டார்கள்’ என்பது இதற்குப் பொருள்.

அதிகாரம் - 60 - ஊக்கம் உடைமை; பாடல் - 597

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்