பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 69 / 300

பெண்ணினால் பெண்மை

அச்சுப் பக்கம் 155156 · ஸ்கேன் 172173 · அதிகாரம் 128 (குறிப்பறிவுறுத்தல்) — குறள் 1280

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration occupying the upper page: a young man and woman facing one another indoors.

காதல் ஒரு நிலவு - அது மாளிகையில் மட்டுமல்ல; மண் குடிசையிலும் இன்ப ஒளி பரப்பும். அதோ - ஆற்றோரத்தில் ஆலமரத்துக்கருகே வெண்ணிலவின் உதவியால் வெள்ளிக்கீற்று வேய்ந்ததுபோல் காட்சியளிக்கும் அந்தக் குடிலுக்குள்ளே, புனுகுப் பூனைபோல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கிறானே அந்த ஆணழகன்; அவன் பெயர் என்ன தெரியுமா? வேங்கை! வேட்டை நடத்திப் புசிப்பவனல்ல! வேளாண்மைத்தொழில் புரிந்து, தானும் புசித்துப் பசித்தோர்க்கும் துணைநிற்கும் இளைஞன். ஏரின் பின்னால் நிற்கும் உலகமென ஏர்த்தொழிலுக்கு ஏற்றம் தரும் மரபில் வந்தவன். அவன், தன் இளம் மனைவியின் வரவு பார்த்துத்தான் காத்திருக்கிறான். ஆருயிர்த் தோழியருடன் அவள் ஆற்றில் குளித்துவிட்டு, ஆளன் காத்திருப்பானே யென்று அவசர அவசரமாய் ஈர உடையுடன் மனைநோக்கி வருகிறாள். இரவு உணவு அத்தானுக்கு அளிப்பதற்கு முன், குளித்தால்தான் அவளுக்குக் கலகலப்பு!

குளித்த உடலை உணவாகப் புசிப்பதிலே அவனுக்கும் தனி இன்பம்! ஈர உடை, அவள் எழிலுருவின் மேடு பள்ளங்களை அவனுக்குத் தெளிவாக்கிப் புலன் மாற்றிப் போட்டுக் கொண்டிருந்தன.

அந்த உணர்ச்சிப் பெருக்கையும் மீறிய கவலையொன்று அவன் நெஞ்சைத் திசை திருப்பிக் கொண்டிருந்தது. மணமாகித் திங்களொன்று முடியவில்லை.

இளமை விருந்தின் சுவை, ஒரு கணமும் தெவிட்டவில்லை.

“வந்துவிட்டீர்களா? இதோ ஒரு நொடியில் இலை போடுகிறேன்” என்றவாறு அந்த ஏந்திழை; ஆம் - அவள் பெயரேகூட ஏந்திழைதான் - சுவரோரம் எரிகின்ற விளக்கருகே சென்று மறைவுக்குத் திரையிட்டுக் கொண்டு உடை மாற்றிக்கொண்டாள். விளக்கொளி அவள் வடிவில்விழ்ந்து, நிழல் வடிவு மறைவுத் திரையிலே அசைந்து கண்டு, வேங்கை வியப்புற்றான்; இவள் நிழலுக்கும் தன் நெஞ்சையள்ளும் திறன் இருக்கிறதே என்று!

வானத்து நிலவு, தெளிந்த நீர்த் தடாகத்திலே தெரியும்போது, அதைக் காண்பதிலே ஓர் அழகு உண்டல்லவா? அப்படித்தான் ஏந்திழையின் ஆடையற்ற அங்கத்தின் பொங்குதலைத் திரை நிழலில் கண்டு விழியெல்லாம் தித்திப்பாய் அவன் நின்றான்.

விரைவில் உடுத்தி, உடைதிருத்தி, இலையெடுத்துப் போட்டு உணவு பரிமாறினாள். அவளும் அருகே அமர்ந்தாள். இளங்குறும்பு விளையாட்டுக்கள், காதல் ஆர்ப்பாட்டங்களுடன் சாப்பாடு முடிவுற்றது.

தரை மெழுகித் தூய்மைப் படுத்திவிட்டு, வீட்டுக் கதவைத் தாழிடச் சென்றாள் அவள்.

“தாழிடாதே தங்கம்! தவிர்க்க முடியாத பணியொன்றுள்ளது. இரட்டைக் காளை வண்டிதனில் என் நண்பன் வீரன் வந்திடுவான்... இன்றிரவு வேற்றார் சென்று, நாளை இரவு வந்திடுவேன்” என்றான் வேங்கை.

அவள் திருக்கிட்டாள்; திகைப்புற்றாள்.

ஆயிரம் சொற்களை அள்ளிப் பொழிந்து, அவன் பிரிவைத் தடுக்கக் கெஞ்சிட வேண்டுமென்று துடித்தாள்.

அன்றிரவு ஈடில்லா இன்ப இரவாகக் கழியுமென்று அவள் கட்டிய மனக்கோட்டைகள் தூளாயின!

“அத்தான்! இன்றிரவு என்னால் உங்களைப் பிரியவே முடியாது. அரும்பு மீசை படர்ந்த உங்கள் உதடுகளுடன் போராடுவதற்காக, காலையிலிருந்தே என் இதழ்கள் தயார் நிலையில் இருக்கின்றன. உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கச்சிதமாய்த் தழுவிக்கொண்டு ஈருடல் ஒருடலாய் இருப்பதுகண்டு, காமவேளும் வெட்கத்தால் கண்மூடிக் கொள்ளவேண்டும் இன்றிரவு, என நினைத்திருந்தேன். என் நினைப்புக்கு மாறாக வேற்றார் செல்வது நியாயந்தானா? என் உடல் அனலாகக் கொதிப்பதை அறியவில்லையா? நான் வரவில்லையென்று நண்பருக்குச் சொல்லிவிட்டு, நங்கையென்றன் தாபம் தீர்த்திடுக; இல்லையேல் காமத்தீ என்னைச் சுட்டுப் பொசுக்கிவிடும்.”

இப்படியெல்லாம் ஏந்திழை, வேங்கையிடம் சொல்லவில்லை; இப்படி எண்ணினாள். எனினும், அவற்றை வாய்வழி வெளியிட இயலாமல் அவளது பெண்மை தடுத்தது. பிறகு தனது உணர்வை எப்படித்தான் வெளியிட்டாள் அவள்!

அவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவனும் அவள் விழிகளை நோக்கினான். அவள் பேச முடியாதவைகளையெல்லாம் அவளது விழிகள் பேசின.

அவளது அழகிய வாய்க்குப் பதிலாக இமை, உதடுகள் அசைந்தன. கண்ணின் கருமணிகள் காதலை வெளிப்படுத்திக் காம உணர்வைப் புலப்படுத்தின.

சுருக்கமாகச் சொன்னால், அவளுக்காக அவள் விழிகள் அவனிடம் கெஞ்சின. அவள், தன் காமநோயை வார்த்தைகளால் வெளிப்படுத்தாமல் - அல்லது வேறு எந்தச் செயலாலும் வெளிப்படுத்தாமல் - கண்ணால் மட்டுமே வெளிப்படுத்திய தானது, அவளது பெண்தன்மைக்கு மேலும் பெண்தன்மை நயத் தரக்கூடியது என்று வள்ளுவர் வர்ணிக்கிறார்:

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப நண்ணினால் காமநோய் சொல்லி இரவு.

அதிகாரம் - 128 - குறிப்பறிவுறுத்தல்; பாடல் - 1280

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்