பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 68 / 300

பெயக்கண்டும் நஞ்சுண்டு

அச்சுப் பக்கம் 153154 · ஸ்கேன் 170171 · அதிகாரம் 58 (கண்ணோட்டம்) — குறள் 580

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration occupying the upper page: Socrates seated in a stone-walled prison holding a cup, with another man standing behind prison bars.

“எனதருமை ஏதன்சு நகரத்துப் பெருமக்களே!” என நீட்டி முழங்கி அந்தக் கிழவன் அழைத்ததும் அவனைச் சுற்றிச் சூழ்ந்து கொள்வர் இளைஞரும் முதியோரும்-ஆடவரும் பெண்டிருமாக நூற்றுக்கணக்கில்! அந்தக் கிழவனின் நெஞ்சுரத்தைச் சுட்டிக் காட்டுவதுபோல் மார்பு நோக்கி நீண்டிருக்கும் தூய வெண்தாடி! சிந்தனையாளன் என்பதை விளக்கிடும் வண்ணம் அகன்ற நெற்றி! எதிர்காலத்தை ஊடுருவி நோக்குகின்ற எடுப்பான கண்கள்! சற்றுத் தழுதழுத்த குரலாயினும் அழுத்தம் திருத்தமான சொற்களின் நீர்வீழ்ச்சியாக அமைந்திடும் அழகு மிகு சொற்பொழிவு! குறிபார்க்க வளைப்பதற்குமுன் இருக்கின்ற வில்லின் தோற்றத்திலே, சிறிது வளைந்த உடல்! எப்போதும் மக்கள் மத்தியிலேயே இருக்க வேண்டும் என்ற துடிப்பும் ஆர்வமும் தொய்வின்றிச் சுழலும் இயல்பு! சூழ்ந்து நிற்கும் கூட்டத்தினரைப் பார்த்து அவன் உரைத்தது என்ன? “உன்னையே, நீ அறிவாய்!” என்பதுதான். “ஏமாற்றுக்காரர்களிடம் ஏமாந்துவிடாதே! சிந்தனைச் செல்வத்தை இழந்துவிடாதே! ‘ஏன்?’ ‘எதற்காக?’ ‘எப்படி?’ என்ற கேள்விகளை எழுப்பி, அறிவுப் புரட்சி செய்!” - இதுதான் அந்தக் கிழவனின் அறிவுரை. இதனை அவன், கிரேக்கத்து மூலை முடுக்குகளில் எல்லாம் பரப்பிட விரும்பினான். ஏதன்சு நகரத்து எழில்மிகு வீதிகள், வீதியோரத்துத் திண்ணைகள் அனைத்தும் அவன் அறிவுப் பிரச்சாரம் நடைபெறும் மேடைகளாயின.

அந்த எழுச்சியை, அவனுடைய எதிரிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவனை நீதிமன்றத்து நெடிய படிக்கட்டுகளிலே ஏறச் செய்தனர். குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினர்.

“சாக்ரடீஸ் என்னும் இந்தக் கிழவன், நச்சுப் பிரச்சாரம் செய்து நம் நாட்டு மக்களைக் கெடுக்கிறான்; குறிப்பாக இளைஞர்கள் மனத்தைக் குழப்புகிறான்.” என்று எதிரிகள் வாதாடினர். அந்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்கியவன் மெலிட்டஸ். விவாதங்கள் தொடர்ந்தன; விசாரணை முடிந்தது; சில வாக்குகள் வித்தியாசத்தில் சாக்ரடீஸ் குற்றவாளி என்று கூறப்பட்டது. நஞ்சு குடித்து மாண்டிட வேண்டும் என்று தீர்ப்பும் வழங்கப்பட்டது. சிறையில் அந்தச் சிங்கக் கிழவன், சிரித்துக்கொண்டே உலவினான். அவன் துணைவி எக்சேந்திப்பியும் குழந்தைகளும் அவனைக் கண்டு கதறி அழுதனர். தான் கொண்ட கொள்கைகளுக்காகத் தனக்குக் கிடைத்த தண்டனையை, அரியதொரு பரிசாகவே அவன் கருதினான். அவன் கையில் விஷக்கோப்பை தரப்பட்டது. அதை வாங்கிக்கொண்டான்; இன்முகத்துடன். புன்முறுவல் பூத்திட, விஷத்தை அருந்தினான். கண்கள் சுழன்றன; கால்கள் தடுமாறின; படுக்கையில் விழுந்தான். உயிர் பிரியும் தருவாயில் நண்பனை அருகே அழைத்து, “அடுத்த வீட்டுக்காரனிடம் ஒரு கோழிக்குஞ்சு இரவல் வாங்கியிருந்தேன். அதைக் கொடுத்துவிடு” என்றான். நிம்மதியாக உலகத்தைப் பிரிந்தான். பாவம், அவனோடு பழகியவர்கள்தான் அவனுக்கு நஞ்சு கொடுக்குமாறு வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றனர். அதற்காக அவன் யாரையும் கோபிக்கவில்லை.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.

என்ற குறள் எவ்வளவு பொருத்தமாக அமைகிறது, சாக்ரடீஸ் வாழ்க்கையோடு!

அதிகாரம் - 58 - கண்ணோட்டம்; பாடல் - 580

காப்பக விவரிப்பு: Small centred Valluvar-monument illustration below the chapter/song metadata.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்