பொருளடக்கம் 67 / 300
கெட்டார்க்கு நட்டாரில்
அச்சுப் பக்கம் 151–152 · ஸ்கேன் 168–169 · அதிகாரம் 130 (நெஞ்சொடு புலத்தல்) — குறள் 1293
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration occupying the upper page: two women seated together in conversation, one gesturing toward the other.
குங்கும நிறங்காட்டும் கொவ்வைச் செவ்வாய்! குத்துவிளக்குச் சுடர் காட்டும் ஒளிவிழிகள்! கோலத் திருநிலா முகம்; பளிங்குக் கல்லெடுத்து இயற்கையெனும் சிற்பி செதுக்கிய சிலை; மாதுளைகள் இரண்டு காய்த்துக் கிடக்கும் மார்பகம்; பால் உருக்கிச் செய்த பல்லவரிசை; பட்டுமேனி; கெட்டித் தங்கம்; கலைபெனும் பெயருக்குச் சொந்தக்காரி; களையிழந்து சோர்வுற்றுக் காணப்படுகிறாளே... ஏன் என்று தோகையெனும் அவள் தோழி அருகில் வந்தாள்.
“பூங்காற்றுக் கவர்ந்துவரும் மணம் பெற்று மகிழாமல் மனம் வாட்டம் ஏன் கலை, உனக்கு?”
தோழி கேட்டாள்:
“தோகை! தொல்லை எனக்கு வந்ததே அந்த மணம் பெற்றதால்தானே!” கலை, பதில் அளித்தாள்.
நந்தவன மணம் பற்றித் தோழி சொன்னாள். இவளோ, நடந்து முடிந்த மணம் பற்றிப் பதிலை அவிழ்த்தாள்.
“ஓ! ஓ! புரிந்து விட்டது, உன் புன்னகை பதுங்கிப் பதுங்கிக் கிடப்பதற்குக் காரணம்! பசலையுற்ற உனது மேனி, முழுக்கதையும் சொல்கிறது எனக்கு!”
அணைப்பதால் சொர்க்கத்தையும் அகன்று செல்வதால் நரகத்தையும் காட்டுகின்ற உன் அத்தானைச் சபித்துக் கொண்டிருக்கிறாய், பிரிவைத் தாளாமல்! இல்லையா கலை?
“இதுகூடப் புரியாவிட்டால் நீ எப்படியடி பெண்ணாக இருக்க முடியும்? ஒரு பெண்ணுக்குத்தானே இன்னொரு பெண்ணைப் பற்றித் தெரியும்?”
“பிறகேன்? பெண்ணைப் புரிந்து கொள்ளாத ஆணுக்கும் பெண்ணுக்கும் பிணைப்பை ஏற்படுத்துகிறது இந்தப் பாழும் இயற்கை, என்று வசைபாடத் தோன்றுகிறதல்லவா?”
“போடி! வாழ்க்கைத்தான் தோன்றுகிறது - நினைத்து நினைத்துப் போற்றத்தான் தோன்றுகிறது, தோகை!”
“அவர் பிரிந்துள்ள நேரத்தில் தூரமும் தோன்றுகிறதல்லவா?”
கலை, இந்தக் கேள்விக்கு விடையளிக்கவில்லை. அடக்கமுடியாத பெரு மூச்சால் அவள் நெஞ்சம் விம்மியெழுந்து பின் தணிந்தது. துணைவன் இருந்து காணவேண்டிய காட்சி! தோழியன்றோ இருக்கின்றாள்! என்ன பயன்? பதில் கூற இடைவெளை அளித்த அந்தப் பைங்கிளி, தோகையிடம் கூறினாள்:
“தோகை! பிரிவால் என்னை வாட்டிடும் அவர்மீதுகூட எனக்கு அவ்வளவு சினமில்லை. ஆனால்.....ஆனால்.....”
“பிறகு யார்மீது கலை, உனக்குக் கோபம்?”
“துன்பத்தால் துயர் அடைபவர்களை விட்டு அவர்தம் நண்பர்கள் பிரிந்துவிடுகிறார்களே; நீ அறிவாய் அல்லவா?”
“அப்படியும் நண்பர்கள் இருக்கிறார்கள். கேள்விப்பட்டிருக்கிறேன். துன்பம் வரும்போது பிரியாதிருக்கிற நண்பர்களையும் பார்த்திருக்கிறேன்.”
“நான் சொல்வது அந்த நல்லவர்களைப் பற்றியல்ல! வேதனை வந்துற்றபோது விலகிவிடுகிற நண்பர்களைப் பற்றி!”
“சரி! சரி! இப்போது அந்த நண்பர்களுக்கு என்ன வந்தது?”
“தோகை! நான் இப்போது துன்புற்றிருக்கிறேன் அல்லவா?”
“ஆமாம்!”
“இந்த நேரத்தில் என்னோடு இருக்கவேண்டிய என் நெஞ்சம், துன்பத்தில் அகன்றுவிடும் நண்பர்களைப்போல - என்னோடு இல்லாமல் அவரோடு போய்விட்டதே! நீ சொல் தீர்ப்பு! என் நெஞ்சம் பொல்லா நெஞ்சந்தானே! அதனால்தான் தோகை, பிரிந்து சென்றுள்ள அவர்மீது வருகிற ஆத்திரத்தைக் காட்டிலும் எனக்குத் துணையிருக்காமல் அவரைத் தொடர்ந்து ஓடிவிட்ட என் நெஞ்சின்மீதே அதிக ஆத்திரம் வருகிறது!”
இப்படி நெஞ்சுடன் கோபங் காட்டும் வஞ்சியைச் சந்திப்பதே இந்தக் குறள்.
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல்.
அதிகாரம் - 130 - நெஞ்சொடு புலத்தல்; பாடல் - 1293
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்