பொருளடக்கம் 66 / 300
தாளாண்மை இல்லாதான்
அச்சுப் பக்கம் 149–150 · ஸ்கேன் 166–167 · அதிகாரம் 62 (ஆள்வினையுடைமை) — குறள் 614
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration occupying the upper page: an older white-bearded man advising a younger man, with a sword-wielding figure and a reclining man depicted above them.
தெருநடுவே சிறு கூட்டமே கூடிவிட்டது. தன்னைப் பெருவீரன் என்று பிறர் புகழ வேண்டும் என்பதற்காக, வலிமையே இல்லாத இளைஞன் ஒருவன், வாளை எடுத்து அப்படியும் இப்படியுமாக ஆட்டியவண்ணம் இருந்தான். அவன் செய்கை, எல்லாருக்கும் சிரிப்பை மூட்டுவதாகவே இருந்தது. கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர்:
“இவன் என்ன, பெண்ணைப்போல நெளிந்துகொண்டு நிற்கிறான்? பிடிக்கவே தெரியவில்லையே வாளை! இந்த மண்குதிரையை நம்பி நாம் போருக்குப் புறப்பட்டால், நம் நாடு மண்ணாகவே போய்விடுமே!” என்றார்.
“இவன், பெண்கூட அல்லவன்; ஒரு பேடி! என்னாலாவேனும் முயற்சி எடுத்துக் கொண்டு பயிற்சியினைப் பெற்றிருக்கக் கூடாதா? வாளை எவ்வாறு ஆள வேண்டும் என்பதையே அறியாமல், இப்படி வீண் பொழுது போக்குகிறானே! இந்தப் பேடியின் செயலையும் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதா?” எரிச்சலை உமிழ்ந்தவாறே அந்தக் கூட்டத்தைவிட்டு எகினான் ஒரு வீரன்.
அவனுடைய கால்கள், மருத்துவர் ஒருவருடைய மனையை நோக்கித் திரும்பின.
குறை நோய் விழுந்துவிட்டால் தோகைகள் பழுத்துவிடும் நெற்பயிர் போலவே, சோகை நோய்கண்டு இளைத்துப் பழுத்துவிட்டான் அவனுடைய பிள்ளை. மருத்துவர் ஒருவரிடம் காட்டியதற்கு, அஞ்சத்தக்க அவசரநிலை எதும் இல்லையென்றும் மறுநாள் தம் வீடு வந்தால் மருந்து தந்து உதவுவதாகவும் அவர் உரைத்தார். அதனால்தான் வீரனின் கால்கள் மருத்துவரின் மனை நோக்கி விரைந்தன.
அவன் சென்றபொழுது, திண்ணை மேடையில் துண்டைவிரித்துப் போட்டுத் தூங்கியவண்ணம் இருந்தார். அவர் அருகில் காய்ந்துபோன மூலிகைகள் சில கவனிப்பாரற்றுச் சிதறிக் கிடந்தன. மருந்து அரைக்கப்படும் கல்லுமும் ஓய்ந்து போய்க் கிடந்தது.
நெடுநேரம் கடந்தும் நீடுதுயில் நீங்கவில்லை மருத்துவரை விட்டு! எனவே பொறுமை இழந்தவனாக அவரைத் தட்டி எழுப்பினான் அவன். கண்விழித்த அவர், கடுகளவும் கவலைப்படாமல், பரபரப்பும் காட்டாமல் இவ்வாறு உரைத்தார்:
“இன்னும் ஒரு மூலிகை தேடவேண்டும்; நாளை வாருங்கள்; தந்து விடுகிறேன் மருந்தை!”
இப்படி ஒரு நாள் அல்ல; இரண்டு நாள் அல்ல; பல நாட்கள் ஏமாற்றமே அவனுக்குப் பரிசாகக் கிடைத்தது.
ஒரு முறை, மருத்துவர் இல்லத்திலிருந்து வெறுங்கையோடு வீரன் திரும்புகையில், பெரியவர் ஒருவர் எதிரே வந்தார்.
“என்னப்பா, வாட்டமாக இருக்கிறாய்?” என்று கேட்டார்.
உதவி புரிவதாக உறுதி கூறிவிட்டு, உறக்கத்திலேயே புதைந்து கிடக்கும் மருத்துவரைப் பற்றி அலுத்துக் கொண்டு பேசினான் வீரன்.
தேனடை போலத் தொங்கும் தாடியை நீவியவாறே, முறுவலை இழையவிட்டார் பெரியவர்.
“இருந்திருந்து இவரிடம் போய்த்தான் பிணிவந்த உன் பிள்ளையைக் காட்டினாயா? பனி விழுந்து பத்துப் போய்விட்டதால், உடனே எரியாத ஈரவிறகைப் போன்றவர் அல்லவா இவர்! மருந்து தந்து உதவுகிறேன் என்று உரைப்பார்; ஆனால், எந்த முயற்சியிலும் இறங்கவே மாட்டார். உறங்கியே கிடப்பார். அதனால் அவர் இல்லமும் உறங்குகிறது; மருந்து அரைக்கும் கல்லுமும் உறங்குகிறது. அவரை நம்பினால் நோயாளிகளின் உயிரும் உறங்கிவிடும், சாக்காட்டில். அன்றொரு நாள் பேடியொருவன் வாளை ஆட்டி வேடிக்கை காட்டினானே நினைவிருக்கிறதா? வாளை எவ்வாறு ஆளவேண்டும் என அறியாத பேடியைப் போன்றவன்தான், முயற்சி எதும் மேற்கொள்ளாமலே உதவுகிறேன் என உரைப்பவனும்! இந்த மருத்துவரை விட்டுவிட்டுச் சோம்பலின் மடியில் துயிலாத வேறு மருத்துவரைப் பார்! அப்போதுதான் உன் பிள்ளை பிழைப்பான். பேடியின் கையிலுள்ள வாளும் முயற்சியே இல்லாதவன் புரிவதாகக் கூறும் உதவியும் ஒன்றுதான்! பெரியவரின் எண்ணமே குறளாக எழிலோவியம் பெறுகிறது.
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.
அதிகாரம் - 62 - ஆள்வினையுடைமை; பாடல் - 614
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்